Saturday, August 19, 2006

காய்கறிகளும் கலப்பு வழக்கமும்

இந்து நாளிதழ் (ஆகசுடு 18) படித்துக் கொண்டிருந்தேன். கோயம்பேட்டில் இன்றையக் காய்கறிவிலை (ஒரு கிலோவுக்கு) கொடுக்கப் பட்டிருந்தது. படித்த போது, ஒன்றிரண்டு காய்கறிகளின் தமிழ்ப் பெயர் குத்துமதிப்பாகத் தான் நினைவிற்கு வந்தது. எங்கு தேடினும் சட்டென்று மட்டுப் படவில்லை. என்ன ஆயிற்று எனக்கு?

கொஞ்சம் கொஞ்சமாய் வேரழிந்து, மரபு தடுமாறிப் போகிறோமோ என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.

ஒரு பக்கம் ஆங்கிலச் சொற்களின் தடுமாற்றம், இன்னொரு பக்கம் இணையான தமிழ்ச் சொற்களைத் தேடுதல் எனக் கொஞ்சம் அலைந்து தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

இந்த அலைச்சலைப் பார்த்த போது, மொத்தத்தில் ஒரு கலப்பு வழக்கத்திற்கு அணியமாகிறோம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

மெல்லத் தமிழ் இனி.......

கத்திரிக்காய் Brinjal Rs 4.00
Common Hedge (இந்தப் பெயரைப் படித்தவுடன் பெருந்தடுமாற்றம். இது முள்ளங்கியாக இருக்குமோ என்று ஓர் அய்யம்.) Rs 5.00
வெள்ளரிக்காய் Cucumber Rs 5.00
அவரைக்காய் Field beans Rs 10.00 (இதை அந்தக் கால ஆங்கிலம்-தமிழ் அகரமுதலிகள் sabre beans என்று அழைக்கின்றன. field beans என்று எப்பொழுது ஆனதென்று தெரியவில்லை.)
புடலங்காய் Snake Gourd Rs 4.00
வள்ளிக் கிழங்கு (அல்லது கருணைக் கிழங்கா தெரியவில்லை; ஏனென்றால் white yam என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்) Yam Rs 7.00
களைக் கோசு Kales root Rs 7.00 (இதுவும் நான் புரிந்தது சரிதானா என்று தெரியவில்லை)
முருங்கைக் காய் Drumstick Rs 6.00
பாகற் காய் Bitter gourd Rs 5.00
கொத்து அவரங்காய் Cluster Beans Rs 5.00
முட்டைக் கோசு Cabbage Rs 4.00
குருக் கிழங்கு Carrot Rs 15.00 (ஆங்கிலப் பெயரையே 100க்கு 99 பேர் பயன்படுத்துகிறார்கள்; உருளைக்கிழங்கு, தக்காளி என்றெல்லாம் புதுப்பெயர் வைத்தவர்கள், இதை ஏன் விட்டார்கள் என்று தெரியவில்லை. குரு = அரத்தச் சிவப்பு)
பச்சை மிளகாய் Green Chillies Rs 10.00
இஞ்சி Ginger Rs 12.00,
விதை அவரை Beans Rs 15.00 (இதையும் ஆங்கிலப் பெயரே சொல்லி அழைக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை.)
அக்காரக் கிழங்கு Beetroot Rs 4.00 (பெரும்பாலும் ஆங்கிலப் பெயர் தான் சொல்லி அழைக்கிறார்கள்;அக்காரம் = இனிப்பு)
உருளைக் கிழங்கு Potato Rs 9.00 (தமிழ்ப்பெயர் நிலைத்துவிட்டது.)
பெரிய வெங்காயம் Onion Bellary Rs 5.00 (பெரிய வெங்காயம் என்பதைத் தென் தமிழ் நாட்டில் தான் சொல்லுகிறார்கள். வட தமிழ் நாட்டில் பெல்லாரி தான்.)
சின்ன வெங்காயம் Onion Small Rs 12.00
வெண்டைக் காய் Ladys finger Rs 7.00 (தக்காளி என்பது எந்த மொழிச்சொல் என்று தெரியவில்லை. ஒருவேளை போர்த்துக்கீசியச் சொல்லாக இருக்குமோ?)
சீமைத் தக்காளி Tomato Hybrid Rs 5.00
உள்ளூர்த் தக்காளி Tomato local Rs 4.00
வாழைக் காய் Plantain (100 nos) Rs 200.00

அன்புடன்,
இராம.கி.

36 comments:

  1. பல சொற்கள் நினைவில் இருக்கின்றன ஐயா. குருக் கிழங்கும் அக்காரக் கிழங்கும் புதியவை. நன்றிகள்.

    ReplyDelete
  2. இங்கு, சில கிழமைகளுக்கு முன்பு எங்கட ஆக்கள் இரண்டு பேர் சந்தைக்குப் போனார்கள். கருணைக்கிழங்கு வாங்க ஆசை; ஆனால் ஆங்கிலப்பெயர் தெரியாது. அதை எப்படி விளங்கப்படுத்துவதென்றும் தெரியவில்லை. சந்தைமுழுவதும் பூந்துபூந்து தேடிப்பார்த்துவிட்டுத் திரும்பி வந்ததுதான் மிச்சம்.

    குருக்கிழங்கு, அக்காரக்கிழங்கு என்பன இப்போது அறிந்தவை.

    ReplyDelete
  3. அன்பிற்குரிய குமரன்,வசந்தன்,

    வருகைக்கு மிக்க நன்றி.

    common hedge பற்றிச் சொல்லியிருந்தேனே? அது முள்ளங்கியா? யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள். அதே போல, கருணைக் கிழங்கு பற்றியும் எனக்கு ஆங்கிலப் பெயரில் அய்யப்பாடு இருக்கிறது. களைக்கோசு என்பதை brussels sprout என்று தான் நான் கேட்டிஉக்கிறேன். kalees root என்பது என்ன? என் புரிதல் தவறா?

    அக்காரக்கிழங்கு என்பது அந்தக்கால அகரமுதலிகளேயே போட்டிருக்கிறது.

    குருக்கிழங்கு என்பது நிறம் பற்றிச் சொன்னது. கெரட்டின் என்ற புரதப்பொருளும் carrot என்ற பெயரை ஒட்டியே வந்தது.

    புதலியல் (botany) அறிவு தமிழ்ச் சொற்களை மீள் ஆளுகைக்குக் கொண்டுவருவதில் தேவையானது.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  4. // களைக்கோசு என்பதை brussels sprout //

    இது எனக்கு முற்றிலும் புதிய பெயர்.

    விவரங்களுக்கு நன்றி ஐயா.

    வசந்தன்,

    கருணைக்கிழங்கு பெரிதாக இருப்பதைச் சேனைக்கிழங்கு என்றே குறிப்பிடுவோம்.
    இதற்கு ஆங்கிலத்தில் elephant yam என்று சொன்னாலும் இந்தி மொழியிலே Suran
    என்று இந்தியக் கடைகளிலே உறையவைக்கப்பட்ட காய்கறிகள் பிரிவில் கிடைக்கிறதே.

    ReplyDelete
  5. 'கிளைக்கோசு' என்று பேச்சுத் தமிழிலேயே நீலகிரி மாவட்டங்களில் அழைக்கக் கேட்டிருக்கின்றேன்.

    பரங்கிக்காயினை, அரசாணிக்காயென்பது உண்டு. சென்னையில் இதனை, பூசணியென்றும், சாதாரண பூசணியை, வெள்ளைப் பூசணியென்றும் குழப்பவதுண்டு.

    "காலி ஃப்ளவரை" எப்படி அழைப்பது?

    ReplyDelete
  6. சென்னைப் பக்கம் பூசனி/பறங்கி ஆகியவற்றைக் குழப்பமாய்ச் சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன்.

    cauli flower யை சிவகங்கைப் பக்கம் பூக்கோசு என்று சொல்லுவார்கள்.

    கோசு (முட்டைக் கோசு, களைக்கோசு, பூக்கோசு) என்று ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  7. முள்ளங்கி என்பது "Radish". "common hedge" பற்றி தெரியவில்லை.

    ReplyDelete
  8. அன்பிற்குரிய குறும்பன்,

    radish சரியாகச் சொன்னீர்கள். இந்தக் common hedge தெரியவில்லையே? தெரியாதது வெட்கமாக இருக்கிறதே?

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  9. அன்பு ஐயா! இராம.கி!
    நான் எனது கிராமத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன்!
    தாங்கள் வந்து படித்துப் பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்!அதற்க்கான சுட்டி:
    http://unkalnanban.blogspot.com/2006/08/blog-post_115570806362340979.html


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  10. இந்த ஊர் பக்கம் kalesனு விக்கிறத பாத்தா கிட்டத்தட்ட முட்டைக்கோசு மாதிரி இருக்கு. முட்டைக்கோசுலையே வேறு ஒரு வகைன்னு நினைக்கிறேன், வாங்கி பாத்ததில்லை. ஏற்கனவே துளசி சொல்லிருக்க மாத்ரி களைக்கோசு brussel sprouts.

    சரியா தெரியலை வள்ளிக்கிழங்குக்கு பேரு sweet potatoes? yam - மரவள்ளி கிழங்கு/கருணைக்கிழங்கு?

    ReplyDelete
  11. இந்த ஊர் பக்கம் kalesனு விக்கிறத பாத்தா கிட்டத்தட்ட முட்டைக்கோசு மாதிரி இருக்கு. முட்டைக்கோசுலையே வேறு ஒரு வகைன்னு நினைக்கிறேன், வாங்கி பாத்ததில்லை. ஏற்கனவே துளசி சொல்லிருக்க மாத்ரி களைக்கோசு brussel sprouts.

    சரியா தெரியலை வள்ளிக்கிழங்குக்கு பேரு sweet potatoes? yam - மரவள்ளி கிழங்கு/கருணைக்கிழங்கு?

    ReplyDelete
  12. kales root - நூல் கோல்
    Common hedge - புதினா

    ReplyDelete
  13. அன்பிற்குரிய கௌசல்யா சந்தானம்,

    என் அய்யம் தீர்த்ததற்கு மிக்க நன்றி. என்னைப் போல் அரைகுறைகள் நிறைய இருக்கிறோம்.

    இப்பொழுது மீண்டும் இரண்டரைக் கேள்விகள்.

    நூல்கோல் என்ற பெயர் எந்த மொழியில் இருந்து நமக்கு வந்தது?

    புதினாவை common hedge என்று ஏன் சொன்னார்கள்? புதினாவை வரப்புச் செடியாக நான் எங்கும் பார்த்ததில்லையே?

    அரைக்கேள்வி yam பற்றியது. அது சேணைக் கிழங்கா, கருணைக் கிழங்கா?

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  14. வத்தாளைக் கிழங்குக்கு என்ன ஆங்கிலப் பெயர்?
    sweet potatoes?

    ReplyDelete
  15. புதினா - mint இல்லியா?

    ஒருவித முட்டைக்கோச தான் kales னு சொல்லி விக்கிறாங்க இந்த ஊர் பக்கம் எல்லாம்.

    ReplyDelete
  16. http://www.hinduonnet.com/thehindu/2000/01/23/stories/1323048e.htm

    Adhatoda zeylanica (or Adhathodai in Tamil), a common hedge plant found all over South India and in Bengal, grows to a height of four to 10 feet. Its leaves are like those of the mango tree. It has white flowers. As its name suggests, goats and other animals do not eat its leaves (the name Adhathodai literally means "untouched by goats"). The plant is extremely useful in treating coughs, colds, wheezing and fevers. The juice and decoction can be taken internally.

    Common Hedge - புதினாவா? ஆடுதொடாயிலையா?

    ReplyDelete
  17. அன்பின் இராம.கி அய்யா

    கேரட், பீட்ரூட் போன்றவை ஆணிவேரில் உணவு சேமிப்பதால் கிடைப்பவை. ஆனால் ஊருளைக்கிழங்கு நிலத்தடி தண்டில் உணவு சேமிப்பதால் கிடைப்பது. எனவே டியூபர் என்பதன் நேரடித் தமிழாக்கம் தான் கிழங்கு. எனவே கேரட் பீட்ரூட் இவற்றை கிழங்கு என அழைப்பது பொருத்தம் தானா?

    ReplyDelete
  18. அன்பிற்குரிய வசந்தன்,

    வத்தாளைக் கிழங்கு என்று நான் கேள்விப் பட்டத்தில்லை. sweet potatoes என்பதைச் சக்கரை வள்ளிக் கிழங்கு என்றுதான் தென் தமிழ் நாட்டில் சொல்லுவார்கள். வேறு யாரும் வத்தாளைக் கிழங்கு பற்றிச் சொல்லுகிறார்களா என்று பார்ப்போம்.

    அன்பிற்குரிய WA,

    புதினாவை mint என்று சொல்லி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் கௌசல்யா புதினா என்று சொன்னவுடன், சரி, நமக்குத் தெரியாது, கேட்டுக்கொள்ளுவோம் அன்று அமைந்துவிட்டேன்.

    அன்புள்ள குறும்பன்,

    நீங்கள் என்னவென்றால் common hedge என்பது ஆடாதொடையைக் குறிக்கிறது என்று சொல்லி இன்னும் கேள்வியைக் கூட்டிவிட்டீர்கள். ஆடாதொடை என்றால் மாந்தர் வாங்கும் காய்கறிகளோடு சேர்த்து பட்டியல் போட்டிருக்க மாட்டார்களே? தவிர ஆடாதொடையை யாரும் காசு கொடுத்து வாங்குவார்களா, என்ன?

    ஆக, நம் எல்லோருக்குமே common hedge என்றால் என்ன என்று தெரியவில்லை. வெட்கம் பிடுங்கித் தின்கிறது போங்கள்!

    அன்பிற்குரிய contivity,

    ரொம்ப அறிவியல் தெரிஞ்சா இது தான் தகறாறு. பொதுவாக மண்ணில் இருந்து கிள்ளி (தோண்டி) எடுக்கும் மாவுப் பொருள் உள்ள காய்கறிக்கு கிழங்கு என்றுதான் பெயர். காட்டாகக் பனங்கிழங்கு.

    பொதுவாகத் தமிழில் பெயரிடும் போது, மிகவும் ஆழமாகப் போய் அறிவியல் பூருவமாகப் பெயரிடுவது இல்லை. சட்டென்று தோன்றும் ஒரு இயல்பை வைத்துப் பெயரிட்டு விடுவார்கள். அதில் ஓரளவு பொதுமை இருக்கும். மிகவும் விதப்பாகப் (specialized) பார்க்கக் கூடாது.

    ஆலமரம் என்பது அகண்ட மரம் (அகல்>ஆல்); இன்னொரு விதமாய்ப் பார்த்தால் ஆலும் (அசையும்) வேர்கள் தொங்கும் மரம். இது போன்ற தொங்கு வேர்கள் வட வடமாய்த் (விளார்) தொங்குவதால் அதற்கு வட மரம் என்று கூடப் பெயர். "அதெப்படி, இன்னும் சில மரங்களிலும் வேர்கள் தொங்குகின்றனவே? இன்னும் சில மரங்கள் அகண்டு தோற்றமளிக்கின்றனவே?" என்று அறிவியல் பார்த்தோம் ஆனால், தமிழில் அப்புறம் பலசொற்கள் தேறாது.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  19. Common hedge என்றால் என்னவென்றும், 'நூல் கோல்' பெயர் வரக் காரணம் என்னவென்றும், கோவையிலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையிலே கேட்டேன்.

    1.'கோல்' எனப்படுவது, கோசு, காலி ஃப்ளவர், நூல் கோல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களின் உயிரியல் பெயராம். 'நூலு'க்கு அவர் விளக்கம் கொடுக்கவில்லை.

    2.Common hedge என்பது வரப்புகளில் பயிரிடப்படும் கீரை வகைத் தாவரமாம். இது ஒரு பொதுவான பெயர் மட்டுமே என்றும், இந்தப் பெயரில் நாம் உண்ணும் தாவரம் ஏதுமில்லை என்று சொன்னார்.

    சென்னைத் தொலைக்காட்சியிலே, பெயர் எழுதும்போது, தவறு நடைபெற்றிருக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  20. இராம.கி.ஐயா,
    இப்பதிவு பார்த்து மிக மகிழ்ச்சி எனக்கு. பதிவையும், பின்னூட்டங்களையும் படித்து முடிக்கையில் பல ஐயங்களுக்கு விடை கிடைத்திருந்தன. குருக்கிழங்கும், அக்காரக்கிழங்கும் தெரிந்துகொண்டது இன்றுதான். சில நண்பர்களின் உணவுமுறையில் 'அக்காரவடிசல்" என்னும் பண்டம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் அப்படிப் பெயர் அதற்கு? என்று நினைத்துக்கொண்டதுண்டு. இன்று பொருள் தெரிந்துகொண்டேன். காலிபிளவரை எங்கள் ஊர்ப்பக்கம் வெறும் "பூ" என்றே அழைத்துப் பார்த்திருக்கிறேன். "இன்னைக்குப் பூக்குழம்பு வைத்தேன்" என்று பெண்கள் சொல்லக் கேட்டதுண்டு. நன்றி, தொடரும் உங்களின் பயனுள்ள பதிவுகளுக்கு.

    ReplyDelete
  21. கூகுளாண்டவர், யாகூவாண்டர் என்று பல ஆண்டவர்களிடம் கேட்டு பார்த்துவிட்டேன் ஒருவரும் "Common Hedge" என்று தனியாக சொல்ல வில்லை. இது ஆங்கில பெயராக இருப்பதால் ஆண்டவன் கண்டிப்பாக தெரிந்திருப்பான். அவனுக்கே தெரியவில்லை என்னும் போது இது இந்துவின் ஆங்கிலமாக இருக்கலாம் அது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. :-))
    Common Hedge Mustard, Common Hedge Parsley, Common Hedge Blue, Common Hedge - Ligustrum sinense, Common Hedge Bed Straw என்று ஒரு ஒட்டு பெயராக தான் Common Hedge வருகிறது. "Common Hedge" பத்தி இந்துவுக்கே வெளிச்சம்

    ( இந்திய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம், பிரித்தானிய ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம் என்பது போல் விரைவில் இந்துவின் ஆங்கிலம் வரலாம் :-)) )

    ஆதலால் ஐயா இதுகுறித்து நாம் வெட்கப்பட தேவையில்லை இந்து தான் வெட்கப்படனும் விளக்கம் குடுக்கனும்.

    ReplyDelete
  22. sweet potatoes என்பது ஈழத்தாரால் வத்தாளைக் கிழங்கு எனப்படுகிறது.

    வத்தாளைக் கிழங்கு என்று தனியாக வேறெதுவும் தமிழ் நாட்டில அறியப்படுகிறதா/குறிப்பிடப்படுகிறதா?

    (ஒரு சந்தேகம்.. வத்தாளை வற்றாளை - எது சரி?)

    ReplyDelete
  23. உங்கள் பதிவால் நிறைய காய்களுக்கு தமிழ்ப்பெயர் அறிந்து கொண்டேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  24. காய்கறிக்களுக்கான தமிழ்ப் பெயர். இதில் பல ஊர்களிலும் பலவிதங்களில் வழங்கப்படுகிறது. தெற்கில் நாங்கள் பூசணிக்காய் என்போம். ஆனால் வடதமிழ்நாட்டில் அதை மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் என்கிறார்கள். தடியங்காயைப் பூசணிக்காய் என்கிறார்கள். அதே போல சீனியவரைக்காய் என்று எங்களூர்ப்பக்கம் சொல்வோம். வேறு ஊர்களில் கொத்தவரங்காய் என்கிறார்கள். உருளை, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், மாங்காய், தேங்காய், பட்டாணி, அவரைக்காய் எல்லாம் ஒரே பேர்லதான் எல்லா ஊர்லயும் கெடைக்குது. காலிபிளவர் என்ற பெயர்தான் எனக்குத் தெரிஞ்சு எல்லாரும் சொல்றாங்க. காலிப்பூன்னு நாங்க வெளையாட்டாச் சொல்வோம். என்னோட நண்பன் விளையாட்டா குஷ்பூன்னு சொல்வான். அதே போல போடோல்னு ஒரு காய் கிடைக்குது பெங்களூர்ல கோவைக்காய் மாதிரி...ஆனா பத்து மட்டங்குக்கும் மேல பெருசா இருக்கும். இது தமிழ்நாட்டுல இருக்கான்னு தெரியலை. அதுக்கு என்ன பேரோ?

    ReplyDelete
  25. cauliflowerக்கு பூக்கோசு எனத்தான் நானும் கேள்விப்பட்டிருந்தேன். அண்மையில் கால்கரி சென்றிருந்த பொழுது அங்கு ஒரு உணவகத்தில் கவிப்பூ வறுவல் என ஒரு பொருள் இருந்தது. என்னவென்று கேட்டபொழுது பூக்கோசுதான் எனத் தெரிய வந்தது.

    முள்ளங்கியைப் பொதுவாக Radish எனச் சொல்லித்தான் கேள்வி.

    Common hedge என்று ஒரு தனிப்பட்ட காய்கறி இருப்பதாகத் தெரியவில்லை. தவறாகப் பலுக்கப்பட்டு இருந்தது என்றே நினைக்கிறேன்.

    //'கோல்' எனப்படுவது, கோசு, காலி ஃப்ளவர், நூல் கோல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களின் உயிரியல் பெயராம். 'நூலு'க்கு அவர் விளக்கம் கொடுக்கவில்லை.//

    நூல்கோலின் வெளிப்புறத்தில் தடித்த நூல் போன்ற வேர்(?) இருப்பதால் நூல்கோல் எனப் பெயர் வந்திருக்கலாம் எனக் கருதுகின்றேன்.

    என் இரண்டணாக்கள். (பழைய பதிவு, இப்பொழுது தமிழ்மண முகப்பில் வர படிக்கக் கிடைத்தது)

    ReplyDelete
  26. Sir,
    I have two doubts.
    - Why you always use "Ai" istead of "iy" in words? Like for example "aindhu" istead of "iyndhu"? Is this correct usage?
    - For word "ratham" shouldn't we use "iratham" for writing? Or is it "aratham"?
    Since I don't have tamil font writing in English.
    thanks,
    Murali.

    ReplyDelete
  27. ராகவன், 'போடோல்' என்பது புடலங்காய்.

    ReplyDelete
  28. // `மழை` ஷ்ரேயா(Shreya) said...
    ராகவன், 'போடோல்' என்பது புடலங்காய். //

    இல்லை ஷ்ரேயா. புடலை தனியாக இருக்கிறது. இது நடுவில் பருத்தும் முனைகளில் சிறுத்தும் இருக்கிறது.

    ReplyDelete
  29. அன்பிற்குரிய இலவசக் கொத்தனார்,

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நூல்கோல் இன்னும் விளங்கவில்லை.

    அன்பிற்குரிய முரளி,

    அய், ஐ என்பவை ஒன்றிற்கொன்று தொல்காப்பியத்தின் படி போலியானவை. ஒன்றிற்கு மாறாய் இன்னொன்றைப் பயன்படுத்தலாம். பல தமிழறிஞர்களும் ஐ, ஔ ஆகியவற்றை ஒதுக்கி, அய், அவ் எனப் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். (அய்யா, அவ்வை)

    அரத்தம் என்பதே சரி; இரத்தம் தவறான பயன்பாடு. அறுக்கும் போது ஓடும் நீர் அரத்தம். அது அரித்தல் அறுத்தல் என்று இரண்டு வகையாய்ப் பயிலும்.

    அன்பிர்குரிய ஷ்ரேயா, ராகவன்,

    எனக்கு விடை சொல்லத் தெரியவில்லை.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  30. //'கோல்' எனப்படுவது, கோசு, காலி ஃப்ளவர், நூல் கோல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களின் உயிரியல் பெயராம்.//

    //நூல்கோலின் வெளிப்புறத்தில் தடித்த நூல் போன்ற வேர்(?) இருப்பதால் நூல்கோல் எனப் பெயர் வந்திருக்கலாம் எனக் கருதுகின்றேன். //

    அதாவது வெளிப்புறத்துல் நூல்கள் போன்ற அமைப்பு கொண்ட 'கோல்' வகைக் காய். நூல் இருக்கும் கோல் நூல்கோல். இதுதான் எனக்குத் தோன்றியது.

    இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  31. //அன்பிர்குரிய//

    ஒரு சந்தேகம். அன்பிற்குறியர் என்று வர வேண்டும் என நினைத்தேன். நான் பார்த்த வரையில் பெரும்பான்மை இப்படியே பாவித்து வருகின்றனர்.

    ஆனால் பிரித்துப் பார்த்தால் அன்பிற்கு உரியவர் எனச் சொல்லும் பொழுது நீங்கள் எழுதுவதுதான் சரி எனத் தோன்றுகிறது. எது சரி? கொஞ்சம் விளக்குங்களேன்.

    அன்பிற்குறியரா அல்லது அன்பிர்குரியரா?

    புணர்ச்சி விதிகளின் படி எப்பொழுது 'ர்' வர வேண்டும்? எப்பொழுது 'ற்' வர வேண்டும். (அன்பிற் / அன்பிர்)

    ReplyDelete
  32. அய்யா,

    அது தட்டச்சுப் பிழை. அன்பிற்குரிய என்பது தான் சரி. இ-கலப்பை வைத்து நேரடியாக முன்னிகைப் பெட்டியில் தட்டும் போது, இப்படித் தட்டச்சுப் பிழை ஏற்பட்டுவிடுகிறது. மன்னியுங்கள்.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  33. //அதே போல போடோல்னு ஒரு காய் கிடைக்குது பெங்களூர்ல கோவைக்காய் மாதிரி...ஆனா பத்து மட்டங்குக்கும் மேல பெருசா இருக்கும். இது தமிழ்நாட்டுல இருக்கான்னு தெரியலை. அதுக்கு என்ன பேரோ? //

    பந்தலிட்டு நுனியில் கல்கட்ட பாம்பு மாதிரி நீண்டு வளைந்த புடலங்காய் போல் அல்லாது கொடியாய்த் தரையில் படரும் தரைப்புடலங்காயைச் சொல்கிறீர்களா?
    தோற்றத்தில் நீளம் குன்றிப் பருத்துக் காணப்படுவதால் பன்றிப்புடலை என்பார்கள்.

    ஒருவேளை இதுதான் பெங்களூருவில் பொடேலோ?

    ReplyDelete
  34. //அதே போல போடோல்னு ஒரு காய் கிடைக்குது பெங்களூர்ல கோவைக்காய் மாதிரி...ஆனா பத்து மட்டங்குக்கும் மேல பெருசா இருக்கும். இது தமிழ்நாட்டுல இருக்கான்னு தெரியலை. அதுக்கு என்ன பேரோ? //

    பந்தலிட்டு நுனியில் கல்கட்ட பாம்பு மாதிரி நீண்டு வளைந்த புடலங்காய் போல் அல்லாது கொடியாய்த் தரையில் படரும் தரைப்புடலங்காயைச் சொல்கிறீர்களா?
    தோற்றத்தில் நீளம் குன்றிப் பருத்துக் காணப்படுவதால் பன்றிப்புடலை என்பார்கள்.

    ஒருவேளை இதுதான் பெங்களூருவில் பொடேலோ?

    ReplyDelete
  35. உடனடி விளக்கத்திற்கு நன்றி ஐயா. நான் இது வரை அன்பிற்குறிய என்றே பாவித்து வந்துள்ளேன். அதுவும் தவறென்று அறிந்து கொண்டேன். இனி அன்பிற்குரிய என்றே எழுத முயல்வேன்.

    ReplyDelete
  36. அன்பின் இராம்கி ஐயா!

    தங்கள் இப்பதிவின் ஊடாகவே குருக்கிழங்கு, அக்காரக்கிழங்கு போன்றப் பெயர்களை அறிந்துக்கொண்டேன். அவற்றை "மரக்கறிகள்" எனும் பதிவில் இணைத்துள்ளேன். மேலும் பல மரக்கறிகளின் சரியானப் பெயர்கள் தெரியவில்லை.

    இவற்றிற்கான சரியானத் தமிழ் பெயர்களை வழங்கி உதவுவீர்களானால் பலருக்கும் பயனுள்ளாதாக இருக்கும்.
    http://aangilam.blogspot.com/2008/10/list-of-vegetables.html

    நன்றி ஐயா.

    ReplyDelete