Friday, April 04, 2014

தமிழி - உரோமன் எழுத்துப்பெயர்ப்பு - 2

இக்கருத்தரங்கில் தமிழ்ப் பின்னங்கள், குறியீடுகளை ஒருங்குறியிற் சேர்ப்பது கருதி, தமிழ்ப் பெயர்களை ஒரே வகை உரோமன் எழுத்தில் [அதாவது உயர் கட்டெழுத்தையும் (upper case  letters), தாழ் கட்டெழுத்தையும் (lower case letters) கலக்காது அந்தந்த தனிக் கட்டெழுத்தில்] எப்படிக் குறிப்பதென்ற கேள்வியெழுந்திருக்கிறது. அதை முடிவு செய்வதற்காக

1.Prof. M. Ponnavaikko, Vice Chancellor, S.R.M. University.
2.Prof. V. Jayadevan, Chief Editor, Madras University Tamil Lexicon Revision Project.
3.Prof. Murugaiyan, Professor (Retd.), Annamalai University.
4.Thiru. Ma. Poongundran, Editor, Directorate of Tamil Etymological Dictionary.
5.Dr. M. Kannan, Editor, Directorate of Tamil Etymological Dictionary  (Addl. member).
6.Dr. Shriramana Sharma, Research scholar with special interest in technological support for old Indic writing system, Author of Unicode proposal L2/13-047 the standing proposal to
encode Tamil fractions and symbols in Unicode.
7.Thiru. Mani M. Manivannan, Chair, Tamil Unicode Working Group, INFITT.

அடங்கிய குழுவொன்றைக் கருத்தரங்கின் முடிவில் ஏற்படுத்தியிருக்கிறார். இக்குழு இது வரை கூடியதா, தன் தேர்வு முடிவை எடுத்ததா, அரசிற்குப் பரிந்துரை அளித்ததா என்பதெலாம் எனக்குத் தெரியாது. 

நான் தமிழறிஞனும் இல்லை; கணிஞனுமில்லை. கொஞ்சமே தமிழறிந்த பொறிஞன். [”கணிஞனும், தமிழறிஞனும் இல்லெனில் தமிழ்க்கணிமை பற்றிப்பேச உனக்கென்ன அருகதை?” என்று யாராவது அன்றே கேட்டிருந்தால் இப்புற்றுக்குள் கை வைத்திருக்கமாட்டேன். “கரை வேட்டியோ, கதர் வேட்டியோ போடாதவன் தமிழரிடை அரசியல் பேச அருகதை இல்லாதவன்” என்று சொல்வது போல் இருக்கிறது.] ஆர்வ மிகுதியால் 16 ஆண்டுகள் தமிழ்க் கணிமை பற்றிப் பேசிவிட்டேன். என்னைப் பொறுத்துக் கொண்ட தமிழர் உலகிற்கு நன்றி.

(அதே நேரம் தமிழெழுத்து, ஒலிகளின் நுட்பம் பற்றி மேலோடத் தெரிந்தவர் எல்லாம் தமிழ் ஒருங்குறியுனுட் புகுந்து ”அதை மாற்று, இதை நுழை, அதை வைத்தே தீர வேண்டும்” என்று ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் முன்னீடு கொடுத்துத் தாம் வேண்டும் மாற்றங்களை அடையுங் கால முரணைப் பற்றி  எண்ணாது இருக்க முடியவில்லை. 

10 கோடிப் பேரின் செய்யாமையிடையே, ஒரு தனி மாந்தன் தன் தனிப்பட்ட தாக்கத்தால் தான்தோன்றித் தனமாய்ச் செய்துவிடும் அச்ச விளைவுகளும் இதில் இருக்கின்றன. தனிமாந்தரின் தான்தோன்றிச் செயல்களுக்கு முன் தமிழக அரசோ, இந்திய நடுவண் அரசோ தடுமாறித் தான் போகின்றன. மேலே கூறிய கருத்தரங்கம் நடந்ததற்கே ஒரு தனி மாந்தரின் முன்னீடு தான் கரணியமாகும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

என்று சொன்ன குறளை நினைத்துக்கொள்ள வேண்டும் போலும்.)
எழுத்துப் பெயர்ப்பு விதயத்தில் எனக்குத் தென்பட்டதை ஓரிடத்திற் பதிவு செய்வோம். படிப்பவர் படிக்கட்டும். எழுத்துப் பெயர்ப்புக் குழுவினர் என் ஓர்மைகளை வேண்டின் ஒருவேளை கருதட்டும் என எழுத முற்படுகிறேன். விளக்கங் கேட்டு அவர் எனைப் பணித்தால் இயன்றது செய்ய அணியமாய் உள்ளேன். (அக்கருத்தரங்கிற்கும் அணில் போல உதவத்தான் செய்தேன்.)

எழுத்துப் பெயர்ப்பு என்பது (transliteration) கேட்பொலிப் பெயர்ப்பினும் (transcription) வேறுபட்டது. எழுத்துப் பெயர்ப்பின் ஊற்றுக்கொத்து (source set) என்பது தமிழெழுத்துக்கள் அனைத்தும்  அடங்கியதாகும். அதன் எயினக் கொத்து (target set) என்பது, உரோமனெழுத்துக்கள் அடங்கியதாகும். இரு கொத்துக்களிலும் இருக்கும் எழுத்துக்கள் வெறும் வடிவங்களல்ல, அவை ஒலிகளையும் குறிக்கின்றன. எழுத்தெனும் வகைப்பாட்டின் ஆழமான தொல்காப்பியப் பொருளை இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வட இந்தியப் பெருமி (Brahmi) வழிப்பட்ட நாகரியெழுத்தை வைத்து அதே அடைப் பலகையிற் (template) தமிழெழுத்தைச் சில கணிஞர் இடைப்பரட்டி விளங்கஞ் சொல்வது நம்மை முன்செலுத்தாது. [மைக்ரொசாவ்ட்டின் பாஷா இந்தியா என்றதொரு வலைத்தளம் அப்படியொரு பணியைச் செய்து கொண்டு இருந்தது. 

தமிழெழுத்து பெருமியெழுத்தைப் போல அபுகிடா (abugida) வகை என்றங்கு முறையற்றுச் சொல்லிக்கொண்டிருந்தார்]. [இன்னுஞ் சிலரோ பெருமியிl இருந்து தமிழி உருவாக்கப்பட்டதென அவக்கரப்பட்டு முழு ஆய்வும் இல்லாது சொல்கிறார். இதுவரை கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளின் படி பெருமிக்கும் காலத்தால் முந்திய (கி.மு.490) தமிழிக் கல்வெட்டுக் கிடைத்துள்ளது. 

தமிழியிலிருந்து பெருமி ஏன் தோன்றியிருக்கக் கூடாதென்று பல்வேறு ஆய்வாளரும் எண்ணிப் பார்க்கத் தவறுகிறார். இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடு இருப்பதை உணராமலும், இப்படி ஒரு ‘குதருக்கம்’ நடப்பது தெரியாமலேயும் தமிழறிஞரும் உருப்படியான கணிஞரும் தம் கருத்துச் சொல்லாது விலகியிருக்கிறார்.]

(தமிழெழுத்தைத் தமிழி என்றே நான் இப்போதெல்லாங் குறித்து வருகிறேன். தமிழி என்பது பெருமிக்கும் முந்தையது. தனிப்பட்டது என அண்மைத் தொல்லியல், கல்வெட்டு ஆய்வுகள் சொல்லிவருகின்றன. இனிமேலும் திரு ஐராவதம் மகாதேவனைப் பின்பற்றித் தமிழ்-பிராமி என்று தமிழர் குறிப்பது சரியல்ல. 

பெருமியென்பது அகரமேறிய மெய்யெழுத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழியென்பது அகரமேறாத் தனிமெய்யை அடிப்படையாகக் கொண்டது. இரண்டும் வெவ்வேறானவை)

ஒருங்குறியேற்றம் நடந்த போது இத் தப்பைச் சிலர் செய்யாதிருந்திருப்பின் தமிழுக்கு நன்மை கிடைத்திருக்கும். ஒருங்குறியில் 128 அறைகளுக்குள் தமிழெழுத்துச் சிறைப்பட்டு இருந்திருக்காது. அந்நேரம் தமிழறிஞரும், பெரும்பாலான கணிஞரும் சேர்ந்து தூங்கிவிட்டார். தூங்காதவரும் தமக்குள் கட்சி கட்டி TAB/TAM/TSCII என்று உள்ளூர்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். 

பல்வேறு உள்ளூர்ச் சண்டை போடுவதிற்றான் தமிழர்கள் 2500 ஆண்டுகளைக் கழித்திருக்கிறோமே? தமிழர் என்றைக்குத் தான் ஒன்றுபட்டிருக்கிறோம்? அரசியலார் மட்டும் இதில் மாறுவாரா, என்ன? 1985 அளவில் தமிழறிஞர், கணிஞர் என யாருமே தமிழ்க் கணிமை பற்றித் தமிழக அரசைத் தட்டி யெழுப்ப வில்லை. நல்ல வாய்ப்பை நழுவவிட்டோம்.

இத் தூக்கத்திற்கு நடுவில் நடுவணரசின் CDAC நிறுவனம் தனக்குத் தோன்றியது போல் ISCII அடைப்பலகையை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அப்படியே முன்மாதிரியாக அனுப்பியது. இப்படி 128 இடங்களிற் தமிழ் சிறைப்பட்டதால் எல்லாக் கணினி வெளியீட்டுச் சாதனங்களிலும் (output devices) ஒரு rendering engine இன்றித் தமிழாவணங்களை இப்பொழுதுங் காட்சிப் படுத்த முடிவதில்லை.

தமிழைக் காட்சிப் படுத்தும் கணிகள் இந்த வேலையைச் செய்த பின் தான் குறியீடுகளை வெளியீட்டுச் சாதனங்களுக்கு அனுப்பின. மேலைமொழிக் கணிமைகளின் எளிமைக்கு முன்னால் கால காலத்திற்கும் தமிழ்க் கணிமையிற் சுற்றிவந்து மூக்கைத் தொடும் நிலைக்கு நாம் ஆட்பட்டுள்ளோம். 

இப்பொழுது தன் நிலையுறுதிப் பொள்ளிகையைக் (stability policy) காரணங் காட்டி ஒருங்குறிச் சேர்த்தியம் ”128 அறைகளுக்கு மேலில்லை” என அடம் பிடிக்கிறது. அதை மறுத்து வாதமிட நமக்கு ஆற்றல் இல்லை. 800 பவுண்டுக் கொரில்லாவிற்கு முன் நாமெல்லாம் எந்த மூலை? எனவே 128 இடங்களிற் சிறைப்பட்டபடியே தமிழ்க் கணினி நிரல்களுக்குள் நாம் இன்று வேலைசெய்ய வேண்டியிருக்கிறது.

[தமிழ் ஒருங்குறியில் மொழிச்செலுத்தம் (language processing) என்பது உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களை வைத்து நடப்பதில்லை. இக்கட்டுரையைப் படிப்பவர் சற்று மூச்சைச் சீர்படுத்தி நானென்ன சொல்கிறேனென உணர்ந்து படிக்கவேண்டுகிறேன். 

 உயிரெழுத்துக்கள், அகர உயிர்மெய், சில குறியீடுகள் என்று இன்னுங் கீழ்மட்டத்தில் மொழிச்செலுத்தம் நடந்து, முடிவில் நாம் படிக்கும் வகையில் உயிர், அகர உயிர்மெய், குறியீடுகளை வெளியீட்டுச் சாதனங்களில் ஒன்றோடொன்று பொருத்தி ஒட்டிவைக்கவேண்டும். அப்போது தான் தமிழெழுத்தின் தோற்றப் பொலிவிருக்கும். 

இப் பொருத்தும் நிரலே rendering engine எனப்படுகிறது. எந்தெந்த நிரலிகளின் முடிவில் பொருத்தும் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லையோ, அங்கெல்லாம் தமிழெழுத்தின் தோற்றம் கோணல் மாணலாய் வெளிப்படும். இன்றைக்கும் அங்குமிங்குமாய் தமிழெழுத்துக்கள் சிலபோது குதறப்பட்டு இணையத்தில் இளிச்சவாய்த் தோற்றங் காட்டி அமைவது இயல்பாய்ப் போனது. ஒரு வெருவி (virus) தமிழ் நிரலிக்குள் உள் நுழைந்தால் போதும், தமிழெழுத்து இளித்து விடும். எத்தனை ஆவணங்களை இது போல் பார்த்துவிட்டோம்?]

இந்த எழுத்துப் பெயர்ப்பிலும் அதேவகைப் பிழையைச் செய்துவிடக் கூடாது. தமிழுக்காகப் பணிசெய்யும் கணிஞரும், தமிழறிஞரும் ஒன்றுசேர்ந்து வேலை செய்யவேண்டும்..

பொதுவாகத் தமிழியெழுத்தின் ஒலி அவ்வெழுத்தின் வடிவம், குறிப்பிட்ட எழுத்து,சொல்லில் வருமிடம் ஆகியவற்றைப் பொறுத்தது.

Sound of a Tamili letter = Function of (the shape of the letter, place of its occurrence in a word).

அதே பொழுது,

Sound of a Brahmi letter = Function of (the shape of the letter).

எனவே தமிழியெழுத்தின் ஒலிப்பு முறை ’ஒன்றிலிருந்து பல’ என்ற உறவு முறையைக் (one to many correspondence) கொண்டது. பெருமியெழுத்தின் ஒலிப்பு முறை ’ஒன்றிலிருந்து ஒன்று’ என்ற உறவுமுறை (one to one correspondence) கொண்டது. உரோமன் எழுத்தும் ஒன்றிலிருந்து பல உறவு முறை கொண்டது.  

தமிழியும் உரோமன் எழுத்தும் ஆன இரண்டு கொத்துகளும் ஒன்றிற்கொன்று எண்ணிக்கையளவில் மதிக்கத் தக்கனவா எனில் இல்லை. 12 உயிர்களோடு, 1 ஆயுதவெழுத்து, 6*2 வல்லின மெய்யொலிகள், ககரத்திற்கும் சகரத்திற்கும் சிறப்பான உயிரிடை (intervocalic) மெய்யொலிகள், 6 மெல்லின மெய் யொலிகள், 6 இடையின மெய்யொலிகள் என்ற 39 தமிழ் எழுத்துக்களோடு, (நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏதோவொரு காலகட்டத்திற் சேர்ந்து கொண்ட) 6 கிரந்த எழுத்துக்களும் சேர்த்து 45க்குத் தகுந்தாற் போல் இணைக்குறிகளை நாம் பரிந்துரைக்கவேண்டும். 

உரோமன் எழுத்திலோ, F, W தவிர்த்து 24 வடிவங்கள் / ஒலிகளே உள்ளன. ஆக இரண்டு கொத்துக்களும் ஆங்கிலத்திற் சொல்வதுபோல் தத்தம் அளவிற் பொருந்தாதவை (incommensurate). 45 is not equaled to 24. இப் பொருந்தாமை முரணைச் சரிபண்ண, மூன்றுவித ஓர்மைகள் உண்டு.

1. உரோமனெழுத்தில் உயர்கட்டெழுத்தையும் (upper case letters), தாழ்கட்டெழுத்தையும் (lower case letters) கலந்து எழுதுவது. [இக் கலப்பினால் எயினக்கொத்து 48 என வந்துசேரும். ஆனால் இப்படிக் கலந்தெழுதக் கூடாது என ஒருங்குறிச் சேர்த்தியஞ் சொல்லுகிறது. மாறாக அந்தந்த தனிக் கட்டெழுத்திலே குறிக்கவேண்டும் என வலிதாகக் குறித்திருக்கிறார். எனவே இந்த ஓர்மையை நாம் செயற்படுத்த முடியாது.]

2. அடுத்து, ஏதோவொரு கட்டெழுத்தையும், (1, 2,....9,0) என்ற எண்களையும் உரோமன் குறியீடுகளையும் கலந்தெழுதலாம் என்பது இரண்டாவது ஓர்மை [ஒரு தமிழாவணத்தில் பொருண்மை கருதி எண்களும் எழுத்துக்களும் சேர்ந்து பயிலலாம் என்பதால் எண்களை வெறும் ஒட்டுக்குறிகளாக்குவது இல்லை என்றாகிப் போகிறது.]

3. உரோமனெழுத்தோடு ஆளங்குறிகளை (diacritic marks) ஒட்டிவைத்து எழுதுவது. [இதைப் பல மேலை மொழிகளே பயனாக்கி வருகின்றன. இதைத் தவிர்க்க வேண்டும் என்று சில கணிஞர் சொல்லுவது ஏனென்று எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் சில மேலை மொழிகளே இப்படியொட்டி தம் ஒலிகளுக்கு வடிவங் காட்டிவருகின்றன. தமிழுக்காக உரோமன் எழுத்தில் இதைச் செய்தாலென்ன?] 

எழுத்துப் பெயர்ப்பு பற்றி ஆங்கில ஆட்சி நெடுகிலும் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளன. அவற்றின் உச்சகட்டம் எல்லோரும் பெரிதும் புழங்கிய சென்னைப் பல்கலைக்கழகச் சொற்களஞ்சிய எழுத்துப் பெயர்ப்பாகும். இம் முறையில் மாக்கோடு, அடிக்கோடு, மேற்புள்ளி, கீழ்ப்புள்ளி, அலை என 5 ஆளங்குறிகளைப் (diacritic marks) பயன்படுத்துவர். 

சிறப்பாக, ஆ, ஈ, ஊ, ஏ ஓ ஆகிய எழுத்துக்களைக் குறிக்கக் குறில் வடிவங்களைப் போட்டு அவற்றின் மேலே மாக்கோடு (macron) போடுவார். Transliteration, transcription மாற்றஞ் செய்ய விழைவோர் சென்னைப் பல்கலைக்கழக எழுத்துப்பெயர்ப்பை விளங்கி கொள்ளவேண்டும். அந்த எழுத்துப்பெயர்ப்பில்,

ஃ என்பதற்கு k என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு (underbar) போடுவார். [இதற்கு மாறாய் q என்றும் போடலாம். கணிஞர் முத்து நெடுமாறனின் அஞ்சல் விசைப்பலகையில் அப்படித்தான் செய்கிறோம்.)

ற் என்பதற்கு r என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு போடுவார்

ன் என்பதற்கு n என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு போடுவார்.

ழ் என்பதற்கு l என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு போடுவார்

ங் என்பதற்கு n என்று போட்டு அதன்மேல் புள்ளி போடுவார்.

ட் என்பதற்கு t என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்

ண் என்பதற்கு n என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்

ள் என்பதற்கு l என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்

ஷ் என்பதற்கு s என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்

ஞ் என்பதற்கு n என்று போட்டு அதன்மேல் அலையைக் (tilde) போடுவார்

அ   ஆ இ    ஈ   உ    ஊ   எ  ஏ    ஐ  ஒ   ஓ  ஔ   ஃ
a       ā     i      ī     u       ū     e    ē     ai    o     ō     au        ḵ
க்   ங்  ச்   ஞ்   ட்  ண்   த்   ந்   ப்   ம் 
k     ṅ    c     ñ     ṭ      ṇ       t    n    p    m
ய்   ர்  ல்   வ்   ழ்  ள்
y     r     l      v      ḻ     ḷ
ஜ்   ஸ்   ஷ்   ஹ்  க்ஷ்   ஶ
j        s       ṣ        h      kṣ     ஶ

சென்னைப் பல்கலைக்கழகத்தின் உரோமன் எழுத்துப்பெயர்ப்பு கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாகப் பயன்பட்டுவருகிறது. [NHM font converter இல் இந்த ஆளங்குறி முறை (diacritic method) செயற்படுத்தப் பட்டிருக்கிறது.] இதில் 5 ஆளங்குறிகளைப் பயன்படுத்துவது சிலருக்குத் தயக்கத்தைக் கொடுக்கலாம். தமிழாவணங்கள் ஆளங்குறி நிறைந்ததாய்க் “கொசகொச” என்று ஆகிவிடுமோ என்று ஐயுறலாம். இந்த ஆளங்குறிகளைக் குறைக்கலாமா எனில், ஓரளவு முடியும்.

காட்டாக, நெடில் உயிர்களை உரோமனெழுத்தில் இரண்டாக எழுதியோ, ஒன்றோடு இன்னொன்றை அடுத்தடுத்துப் போட்டோ எழுதிவிடலாம். அதன் மூலம் உயிர்க்குறில் வடிவங்களின் மேல் மாக்கோடு போடுவதைத் தவிர்க்கலாம். உயிரிடை (intervocalic) வல்லினக் ககரம், சகரம், தந்நகரம், இடையின ரகரம், இடையின லகரம் ஆகியவற்றிற்கு ஓர் அலைக்குறியும், டகரம், அதிர் டகரம், டண்ணகரம், ளகரம் ஆகியவற்றிற்கு ஒரு கனக்குறியும் (grave) இட்டால் இரண்டே ஆளங்குறிகளை வைத்து இப்போதுள்ள சிக்கலைச் சரிசெய்து விடலாம். இரண்டு ஆளங்குறிகளை வைப்பதில் ஒரு வாய்ப்பும் இருக்கிறது.

எல்லாக் கணி விசைப்பலகைகளிலும் 1,2, 3.. என்ற எண்வரிசைப் பொத்தான்களுக்கு முன்னால் இருக்கும் பொத்தானில் இரு ஆளங்குறிகளைக் கொண்டவொரு பொத்தான் ஏற்கனவே இருக்கிறது. அதைவைத்து நாளையே தமிழாவணங்களை உரோமனெழுத்தில் உருவாக்கிவிடமுடியும். எந்த நிரலியின் துணையுமின்றி இதை எல்லாக் கணிகளிலும் உடனே செய்ய முடியும்.

இந்த 2 ஆளங்குறிகளும் தமிழுக்குப் பொருந்துவது போற் பொருண்மையும் இருக்கிறது. டகரம், அதிர் டகரம், டண்ணகரம், ளகரம் போன்றவற்றைச் சற்று கனமாகவே ஒலிக்கவேண்டி உள்ளது. எனவே கனக்குறி அவற்றிற்கு இடுவது மெத்தச் சரி. அதேபோல, அலைக்குறி எழுத்துக்களைச் சற்று நெகிழ்ந்தே  ஒலிக்க வேண்டியுள்ளது. அடிப்படையில் அலைதலென்பது ஒருவகை ஒலி நெகிழ்தலே.

என் பரிந்துரையைக் கீழே குறித்துள்ளேன். இதனால் எத்தமிழாவணத்தையும் இன்றுள்ள நிரலிகளை வைத்தே சரியான முறையில் உரோமன் எழுத்தில் எழுத்துப்பெயர்ப்பு செய்யலாம். எந்தக் குறையும் வாராது. (தமிழ்ப் பின்னக் குறியீடுகளை உரோமன் எழுத்தில் இந்த ஆளங்குறிகளைச் சேர்த்து எழுதி விட முடியும்.) எக் குழப்பமும் ஏற்படாது.

அ        A           a                                 க்         K          k           ய்         Y         y
ஆ      AA          aa         intervocalic க்          K~       k~          ர்          R~      r~
இ         I            i                    voiced க்          G         g           ல்         L~      l~
ஈ         II            ii                                ங்         NG       ng        வ்         V       v
உ        U            u                                ச்          C         c           ழ்          L        l
ஊ       UU         uu        intervocalic ச்         C~        c~         ள்         L`       l’
எ         E             e                 voiced   ச்          J          j
ஏ         EE           ee                             ஞ்         NJ        nj         ற்          R        r
ஐ        AI           ai                                ட்          T`         t`          ன்         N       n
ஒ        O            o                 voiced    ட்         D`        d`
ஓ        OO         oo                             ண்        N`        n`
ஔ    AU          au                             த்          T          t           ஜ்         J         j
                                              voiced    த்         D           d          ஷ்       SH      sh
ஃ          Q            q                                ந்         N~        n~        ஸ்       S         s
                                                              ப்         P            p          ஹ்      H        h
                                             voiced     ப்         B            b          க்ஷ்      X        x
                                                              ம்        M           m         ஶ         Z         z
    
Unused Roman letters                 F,W       f, w

நான் பரிந்துரைத்த இந்த எழுத்துப் பெயர்ப்பில் ஒரு பெரிய அச்சமும் எனக்கு இருக்கிறது. தமிழெழுத்துக்கு மாற்றாக இந்த ஆளங்குறி சேர்ந்த உரோமன் எழுத்து ஒரேயடியாய்ப் பயனாகிவிடக் கூடாது. அப்படியானால் , “உள்ளதும் போச்சுதடா, தொள்ளைக் காதா” என்று ஆகிவிடும். அலைபேசி கொண்டு, குறுஞ்செய்தி (SMS) அனுப்பி (enna machchi, eppatikkiiree?), இணையத்தின் மூலம் கீசிக்கொண்டு (twitter) அரட்டையடிக்கும் எதிர்கால இளைய தலைமுறை, தமிழின் எழுத்தை முற்றும் போக்கடித்துவிடலாம். அது நடக்கக் கூடாது.

இளையரிற் பலருக்கும் அடியோடு தமிழெழுத்துத் தெரிவதில்லை. 

(உங்களுக்குத் தெரியுமா? கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் இளஞ்சிறார் தம் கீர்த்தனைகளையும், பாடல்களையும் உரோமனெழுத்தில் எழுதி வைத்துப் பாடம் படிக்கிறார். தமிழ்ப் பாட்டும் சங்கத, தெலுங்குக் கீர்த்தனைகளும் அப்படித் தான் இளந்தலைமுறைக்குப் போகின்றன.) 

 பெருங்கணி நிறுவனங்களும், சேவை தருவோரும் தம் வணிக நலன் கருதி தம் கருவிகளும், சேவைகளிலும் தமிழெழுத்து அளிப்பை (supply) வேண்டும் என்றே குறைத்துத் தருகிறார். கன்னாப் பின்னாவென்று தமிழுக்கு உரோமன் எழுத்துப் புழக்கம் இளைஞரிடையே கூடிக்கொண்டிருக்கிறது. பெரியவர் ஆகிய நாமோ தேமே என்று விழித்துக் கொண்டிருக்கிறோம். 

 தமிழார்வலர் விழித்தெழாவிட்டால் தமிழெழுத்து மறையுங் காலம் வெகு தொலைவில் இல்லை. பழைய குடியேற்றத்தில் நாட்டாதிக்கம், இனவாதிக்கம், மொழி யாதிக்கம் என நடந்தது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். புதிய குடியேற்றத்தில் இப்பொழுது எழுத்தாதிக்கம் என்பது புதிய பரிமானம். அவ்வளவு தான். ஓர்ந்து பாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.  

Thursday, April 03, 2014

தமிழி - உரோமன் எழுத்துப்பெயர்ப்பு - 1

ஒருங்குறியிற் தமிழ் - தேவைகளும், தீர்வுகளும் (Tamil in Unicode - requirements and solutions) என்ற கருத்தரங்கு 2014 மார்ச்சு 5 இல் தமிழிணையக் கல்விக் கழகத்தில் நடந்தது. அப்போது சென்னையில் நான் இல்லாததால் என்னாற் கலந்துகொள்ள இயலவில்லை. அதுபற்றித் தமிழிணையக் கல்விக்கழக நெறியாளரிடம் முன்னரே தெரிவித்திருந்தேன். 

அக் கருத்தரங்கில்

தமிழ்ப் பின்னங்கள், குறியீடுகள் - பெயரிடலும் கீற்றுகளும் [Tamil Fractions and Symbols - Naming and Glyphs]
தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றம் [Tamil All Character Encoding (TACE-16)]
ஓரிந்தியா / ஓரெழுத்து முன்னீடு [One India/One Script Proposal]
தமிழக அரசின் நடவடிக்கைகளில் குறியேற்றச் செந்தரங்களையும் விசைப்பலகைச் செந்தரங்களையும் வலியுறுத்தல் [Enforcement of Encoding & Keyboard Standards in Government]
முகனக் கருவிகளிற் தமிழ் [Tamil in Modern Devices]

என்ற உட்தலைப்புக்களில் கணிவல்லுநரும் தமிழார்வலரும், தமிழறிஞரும், மொழியியலாளரும் உரையாடியிருக்கிறார். இத்தலைப்புக்களில் ஒரு சிலவற்றின் மீது என் தனிப் பார்வைகளை பல்வேறு மடற்குழுக்கள், மாநாடுகள், கருத்தரங்குகளிலும், என் வலைப்பதிவிலும் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறேன். இக்கட்டுரையில் மேலேயுள்ள முதல் உட்தலைப்பிற்கான பெரிய பின்னூட்டு அடியில் வருகிறது. மற்ற இரண்டாம், மூன்றாம், நாலாம், ஐந்தாம் உட்தலைப்புக்களுக்கான சுருக்கமான எதிர்வினைகளும் உடனேயே வருகின்றன. 

தமிழ் ஒருங்குறியின் அடிப்படைச் சிக்கலை பெரிதும் அறிந்த காரணத்தால், தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றத்திற்கு (TACE) ஆதரவாகவே எப்பொழுதும் நான் பேசிவந்திருக்கிறேன். என் வலைப்பதிவில் அதை யொட்டிய குறிப்புகள் பல கட்டுரைகளிற் கிடக்கின்றன. பல்வேறு தமிழ்க்கணிமைச் சிக்கல்களுக்கு அனைத்தெழுத்துக் குறியேற்றம் ஒரு வலுவான தீர்வாகும். விருப்பு வெறுப்பில்லாது, ஆழ்ந்த ஓர்மையிற் தமிழ்நலங் காணுமெவர்க்கும் இது புரியும். அனைத்தெழுத்துக் குறியேற்றத்தை விரிந்து புழங்கினால், தமிழாவணங்களைக் கணிமூலம் உருவாக்குவதில் வல்லாட்சி செய்யும் ஒருங்குறிச் சேர்த்தியமும் நம் கருத்தைக் கனிவோடு நோக்க வேண்டிய நிலை வந்துசேரும்.

(ஒருங்குறிச் சேர்த்தியம் என்பது, வெவ்வேறு மொழியாரின் நலம்பேணும் அமைப்பென்று நொதுமலார் கருதமுடியாது. அடிப்படையில் உரோமன் எழுத்துச் சார்ந்த மேலை நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர் வணிகம் பெருக்கி, மேலையெழுத்து அல்லாதவற்றைக் காலகாலத்திற்கும் திறன்-நேர்த்தியற்றதாக்கி, மொழிக்கணிமையில் அவை பின்னிற்கும்படி செய்யுமொரு பெருங்கணி வணிகக் கூட்டமைப்பாகவே அது இதுகாறுஞ் செயற்பட்டிருக்கிறது. ’உலகமயமாக்கல்’ எப்படியின்று புதியகுடியேற்றக் கொள்கையின் மறுபெயரோ, அதுபோல ஒருங்குறிச் சேர்த்தியம் உரோமன் எழுத்தை அடிப்படையாகக் கொண்ட மேலைமொழிகளின் வல்லாட்சி பேணும் அமைப்பேயாகும். ஒருங்குறிச் சேர்த்தியமும் உலகமயமாக்கலின் ஒரு கூறு தான்.) 

அனைத்தெழுத்துக் குறியேற்றம் பற்றி ஆணைபோட்ட தமிழக அரசு (இப்பொழுது அவ்வாணையை ஏறெடுத்துப் பாராதிருக்கும் தன் போக்கை மாற்றி) வருங்காலத்திற் தமிழ்மூலம் நடக்க வேண்டிய மின்னாளுமைத் தேவை கருதி விழித்துக்கொண்டால் நல்லது. இன்னும் எத்தனை பத்தாண்டுகளுக்கு முற்றூட்டாளருக்கு அடங்கி, புதுக்குடியேற்ற நாடாக நம் மாநிலத்தை இயக்கி, ஆங்கிலத்தைக் கட்டி மாரடிக்கப் போகிறோமோ? தெரியவில்லை.  (நிலா, நிலா, ஓடிவா, நில்லாமல் ஓடிவா, மலைமேலே ஏறிவா, மல்லிகைப்பூ கொண்டுவா - எனும்) 10 கோடித்தமிழரின் தாய்மொழியை அடியோடு அகற்றி (Ba,ba black sheep, have you any wool? Yes sir, yes sir, 3 bags full" எனும்) ஆங்கிலத்திற்கு மாற்றும் வரையிலா? தமிழரின் அடையாளம் தமிழ்மொழி இல்லையா?

ஓரிந்தியா / ஓரெழுத்து எனும் முன்னீடு இந்தியாவின் தேசியமொழிகளைக் குலைக்கும் முயற்சியாகும். உலகிற் 10 கோடிப்பேர் பேசும் தமிழ் மொழியை அழிக்க இதைக் காட்டிலும் ஒரு
முயற்சி தேவையில்லை. தமிழர் இதற்கு ஒருப்படவே கூடாது. இன்னோரெழுத்தை தமிழுக்குப் பரிந்துரைப்பது எப்படித் தவறோ, அதே போலத் தமிழெழுத்தை அடிப்படையாக்கி மற்ற தேசிய மொழிகளுக்குப் பரிந்துரைப்பதும் தவறு தான். மக்களாட்சி நாட்டில் அவரவர் எழுத்து அவரவருக்குயர்வே. அவற்றைப் போற்றி வளர்க்க வேண்டுமே தவிர, குலைத்தழிக்கக் கூடாது. இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் கூடிவாழும் கூட்டமைப்பு. இது ஒரே தேசிய இனம் வாழும் ஒற்றையாட்சி நாடல்ல.

அடுத்த புலனம் தமிழக அரசின் நடைமுறை பற்றியது சற்று விரிவாகவே பேசுகிறேன். தமிழக அரசே அரசாணை மூலம் ஏற்றுக்கொண்ட ஒருங்குறி, அனைத்தெழுத்துக் குறியேற்றம் (TACE) ஆகிய செந்தரங்களையும் Tamil 99 போன்ற விசைப்பலகைச் செந்தரங்களையும் புழங்காது ”வானவில்” போன்ற தனியார் குறியேற்றங்களையும், தந்தம் உகப்பில் வெவ்வேறு விசைப் பலகைகளையும் தொடர்ந்து அரசலுவங்களிற் புழங்குவது தமிழக அரசின் மின்னாளுகைக்கு உறுதுணையாகாது. அரசின் பல்வேறு அமைச்சுகளிலும், துறைகளிலும்   

அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
           ஆனந்தப் பூர்த்தியாகி
    அருளோடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
          அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
           தழைத்ததெது மனவாக்கினில்
    தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
          தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
         எங்கணும் பெருவழக்காய்
   யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
        என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
        கருத்திற் கிசைந்ததுவே
   கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
        கருதிஅஞ் சலிசெய்குவாம்.     1.

என்று வியந்து அஞ்சலி செய்யும் நிலைக்கு “இதுவொரு கடவுளோ?” என்று மயங்கும் வகையில் “வானவில்” குறியேற்றத்தின் ஆட்சி கொடி கட்டிப் பறக்கிறது. தமிழக அரசின் அரசாணை அதனாலேயே பின்பற்றப்படாது ஏற்கனவே அரசாண்ட / இப்பொழுது அரசாளும் இருபெரும் திராவிடக் கட்சிகளும் தாம் ”வானவில்லை” வாழ வைக்கிறார். மற்றெந்த அரசியற் கட்சியருங் கூட மோனத்திற் பேசாதிருக்கிறார். அரசின் அதிகாரிகளும் ”பூனைக்கு யார் மணிகட்டுவது?” என்று ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்திருக்கிறார். ஆர்வலரும், அறிஞரும் அதிர்ந்து போய்க் கிடக்கிறார். கணித்தமிழ்ச் சங்கம், உத்தமம், கணித்தமிழ்ப் பேரவையென இருக்கும் வல்லுநர் குழுமங்களும் செய்ய வேண்டுவது புரியாது கைபிசைந்து நிற்கின்றன.

இதற்கு இடையில் அரசின் தட்டச்சர், கீழ்நிலை எழுத்தர் ஆகியோரிடையே. வானவிற் “கலாச்சாரம்” நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்கிறது. இதுவொரு பக்கம் களையாய்ப் படர, இன்னொரு பக்கமோ தமிழக அரசின் உயரிடங்களில் ஆங்கிலமே அலுவல் மொழியாகத் தொடர்கிறது. ஆங்கில ஆவணங்களையே தமிழக அரசு இன்றும் அடிப்படை ஆவணங்களாய்க் கொள்கிறது. இந்நாடு சுதந்திரம் பெற்றதெல்லாம் 67 ஆண்டுகளுக்குப் பின் வெறுங்கதை தான் போலும். நம் மனங்களைக் கட்டிப் போட்டு அடிமையாக்கிய ஆங்கிலன் கைகொட்டிச் சிரிக்கிறான். தமிழருக்காகத் தமிழரால் நடத்தப்பெறும் தமிழக அரசிற்குள் தமிழ்மொழி உப்பிற்குச் சப்பாணியாய் உழல்கிறது.

இதிற் சோகமான மெய்மை என்னவெனில், நடைமுறையில் வானவிற் புழக்கம் தமிழக அரசினுள் அழியாது, தமிழ்க்கணிமைக்குச் சற்றும் எதிர் காலம் இல்லை. வெறும் வாய்ப்பேச்சிற்கும், இணையத்தில் வெட்டி யரட்டைக்கு மட்டுமே தமிழ்க்கணிமை பயன்பட்டுவிடுமோ என்று தோன்றுகிறது. ஒருங்குறியும், அனைத்தெழுத்துக் குறியேற்றமும் தமிழக அரசினுள் பரவலாகப் புழங்கினாற்றானே, மின்னாளுகை, மின்கல்வி, மின்வாணிகம், மின்நூலகம் என பல்வேறு புலங்கள் பற்றிப் பேசமுடியும்? எல்லாவிடத்தும் வானவில்லே உறை கொண்டு கோலோச்சினால் அப்புறம் என்ன விளங்குஞ் சொல்லுங்கள்? நான் சொல்லுவது பலருக்கும் கசப்பாக இருக்கலாம். ஆனால் நஞ்சை நஞ்சென்று சொல்லாது வேறென்னென்று சொல்லமுடியும்? 

அரசிற்குள் தமிழ்மொழி அடிப்படை மொழியாகவன்றி அலங்கார அரசியல் மொழியாகவே இருக்கிறது. அதற்கு வானவில் போன்ற தனியார் குறியேற்றம் பெரிதும் உறுதுணையாகிறது. அரசு அலுவத்தில் தமிழிற் தொடர்பு ஆடுகிறவன் தமிழ்ப் பித்தந் தலைக்கேறியவனாகவே கருதப்படுகிறான். தமிழக அரசுத்துறைகளின் வலைத்தளங்களும் ஒருங்குறி அல்லது அனைத்தெழுத்துக் குறியேற்றத்திற்கு இன்னும் மாறவேயில்லை. மொத்தத்தில் அரசினுள் வானவில்லின் வல்லாட்சி கட்டாயம் போக வேண்டும். இதுபற்றி 4,5 ஆண்டுகளாய் எல்லா வாய்ப்புக்களிலும் சொல்லி வந்திருக்கிறேன். (இம் mandate பற்றி அரசாணை வந்தவுடனே பேசாது, இவ்வளவு நாள் அமைதிகாத்த தமிழிணையக் கல்விக்கழகம், இப்போதாவது பொதுவுரையாடலிற் பேசுகிறதே, அந்தளவிற்கு அது வரவேற்கத்தக்கது தான். ஏதோ கண்கெட்ட பின் “சூரிய நமஸ்காரம்” செய்கிறார் என்றெண்ணிக் கொள்வோம். ஆனால் இவ்விதயம் இவர்கள் மட்டும் பேசுவதல்ல.) தமிழார்வலர் எல்லோரும் பேரியக்கமாய் கூடிப் பேசி, தமிழின் இருப்பையே போக்கடிக்கும் நிலையை மாற்றவேண்டும்.

[இதில் இன்னொரு வருத்தத்தையுஞ் சொல்லவேண்டும். தமிழ்க்கணிமையை ஒட்டிப் பொறிஞரும், தமிழறிஞரும் பெரும்பாலும் முரணிக்கொண்டு தனித்து நிற்கிறாரோவென்ற ஐயம் எனக்குக் கொஞ்ச நாளாய் ஏற்பட்டிருக்கிறது. எல்லாம் அவரவர்க்குக் கூடிப்போன அகப்பாடாகவே (ego) இருக்கிறது. இவரைக் கேட்டால் அவர் மேற் குற்றஞ் சொல்கிறார். அவரைக் கேட்டால் இவர் மேற் குற்றஞ் சொல்கிறார். இவர் கூட்டுங் கூட்டத்தை அவர் குறைசொல்வதும், அவர் கூட்டுங் கூட்டத்தை இவர் குறைசொல்வதும், மொத்தத்திற் தமிழ்க்கணிமைக்கு நல்லதல்லவென்று என்னைப் போன்றோர் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம். ஆனால் சங்கூதுவது கேட்காத செவியாளராய் இருந்தால் என்ன சொல்வது?]

தமிழகத்தில் விற்கும் எல்லா முகன மின்னணுக் கருவிகளிலும் (modern devices) தமிழ் வலுவாண்மை (Tamil enabled) கட்டாயம் இருக்கவேண்டும். அப்படி யில்லாக் கருவிகள் தமிழகத்தில் விற்கப்படக் கூடாது. மீறி விற்றால் அவற்றின் விற்பனை வரி கூட்டப்படவேண்டும். இப்படியொரு கட்டாயத்தை ஒரு மக்களாட்சி மாநிலம் உறுதியாகச் செய்யமுடியும். தமிழருக்கு நல்லது செய்வோமென்ற வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்து தமிழுக்கு முதன்மை கொடுக்காவிடில் எப்படி? இங்கு அரிதாரம் பூசி அலங்காரங் காட்டும் வேடிக்கை நாடகமா நடத்துகிறோம்? அதே போல சில்லறை/பெரு வணிகத்தில் பெறுதிச் சீட்டுகள் (receipts), விளக்க அறிக்கைகள் (reports), விற்பனைப் பொருள்களோடு வரும் விளக்கப் பொத்தகங்கள் (hand books), கையேடுகள் (hand-outs) போன்றவை தமிழிலேயே இருக்கவேண்டும். அன்றி, ஆங்கிலத்தில் மட்டுமே அவையிருந்தால், அதிக விற்பனை வரி போடுவதாய்த் தமிழக அரசு ஆணையிடவேண்டும்.

தமிழகப் பல்கலைக் கழகங்களில் பொறியியல், மருத்துவம், முதுநிலைப் படிப்பு (Masters' degree) போன்றவற்றின் இறுதியில் மாணவர் சமர்ப்பிக்கும் புறத்திட்டு அறிக்கைகளில் (project reports) 5 பக்கத் தமிழ்ச்சுருக்கந் தருவது கட்டாயமாக வேண்டும். தாம் படித்த படிப்பைத் தமிழில் விளக்கத் தெரியாதோர்க்குத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் பட்டமளிக்கக் கூடாது. இதை நெறிப்படுத்தாத பேராசிரியர் தமிழருக்குத் தேவையில்லை. தமிழ் நாட்டு வணிகம், கல்வி, ஆட்சி, நீதி ஆகிய பல்வேறு துறைகளில் “தமிழ் சோறு போடும்” என்ற நிலை இல்லாவிட்டால் தமிழ் இங்கு வாழவே வாழாது, தமிழரும் கண்டுபிடிப்பாளர் ஆகமாட்டார், தமிழர் பொருளாதாரமும் உயராதென எல்லாவிடத்தும் சொல்லிவந்திருக்கிறேன்.

இப்போதையக் கட்டுரை கருத்தரங்கிற் பேசப்பட்ட முதற் புலனம் பற்றியது. இதுவொரு சிறு புலனந் தான். இருந்தாலுஞ் சொல்லவேண்டியிருக்கிறது.

(ஓர் இடைவிலகல். ’ஒருங்குறி’யினுள் இன்னொரு குகரத்தை உள்நுழைத்து ஒருங்குகுறியென்று சிலர் இப்போதெல்லாஞ் சொல்லத் தலைப்படுகிறார். ஆழ ஆய்ந்தால் இன்னொரு குகரம் இடைபுகத் தேவையில்லை. ஒருங்குறியின் சொற்பிறப்பு பற்றி ’வளவு’ வலைப்பதிவில் எழுதியுள்ளேன். தமிழிலக்கணப்படி ’ஒருங்குறி’ என்பது சரியான சொல்லாக்கங் தான். மொழியின் சொற்பிறப்பு மொழிச் சட்டாம்பிள்ளைகளின் கையிலில்லை.)

அன்புடன்,
இராம.கி.

Saturday, February 15, 2014

பிலிறுந்தம்

நான் மதிக்கும் தமிழ்த்தேசியர் ஒருவர் 10 நாட்கள் முன்பு நகரிப்பேசியில் (mobile), குமரி மாவட்டம் போனவிடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன Liquid propulsion பொறிஞர் சிலர் propulsion - க்கு இணையாக நுட்பச்சொல் கேட்டதாய்ச் சொன்னார். ”சில நாட்களில் ஓர்ந்து சொல்கிறேன்” என்றேன். கருத்துத் தெளிந்த நிலையில் இப்பொழுது எழுதுகிறேன்.
 
இச்சொல்லின் அடிப்படை வினைச்சொல் propel ஆகும். (தொழிற்பெயர்களை மொழியாக்கும் போது அடிப்படை வினைச்சொல்லைப் பார்க்கவேண்டும். Direct என்ற வினைச்சொல்லைப் பார்க்கின் நெறிப்படுத்தல் புரிந்திருக்கும்; Director-க்கு இணையாய் ’இயக்குநர்’ என்ற பிழைச்சொல் எழுந்திருக்காது.) இதோடு dispel, expel, impel, repel எனும் வினைகளையும் impeller, propeller, propulsion என்ற பெயர்களையும் சேர்த்து இணைதேடவேண்டும். (பலநேரம் நாம் தொடர்புச் சொற்களை ஒருங்கே காணாது பாத்தி பாத்தியான அணுகுமுறையிற் சொல்லாக்கி விடுகிறோம். இதுவும் தவறான நடைமுறையே.) முன்னொட்டு/பின்னொட்டுப் பிணைக்கும் சொல்லமைப்பில் தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்குமுள்ள வேறுபாடு உணர வேண்டும். முன்னொட்டு, பின்னொட்டுப் புரிந்து சொற்படைப்பதில் இற்றைத் தமிழ் நடைமுறையில் பலருக்கும் பெருத்த குழப்பம் இருக்கிறது. 
 
இந்தையிரோப்பிய மொழிகளைப் போல முன்னொட்டை வைத்துப் பலரும் தமிழில் பின்நவீனம் (Post-modernism), அவைதீகம் (Non-Vedic), அபுனைவு (Non-fiction) என்று விந்தையாகச் சொற்கள் படைக்கிறார்கள். இடதுசாரி அறிவுய்திகளும் அலங்காரமாய் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்.
 
மொழிக் குடும்பங்களின் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடிருக்கிறது. post-ற்குப் ’பின்’ என்பது சரியான மொழியாக்கமா? பின்னெனில் முதுகுப்புறமெனும் பொருளுண்டே? இங்கு முன்னொட்டுப் பயிலவா? பின்னொட்டுப் பயிலவா? அதென்ன பின்நவீனத்வம்? முன் நவீனத்வம் என்று வேறுள்ளதா? எங்கோ நெருடுகிறது. இன்னொரு பக்கம் modern என்பதற்கு நவீனம் எனச் சங்கதச் சொல் பழகத் தேவையில்லை. (ஏனோ அறிவுய்தியர் பழக்கத் தோய்வால் சட்டென்று சங்கதம் தாவுகிறார்.) முன்வந்து நிற்பதால், நல்ல தமிழில் modern என்பதை முகனம் என்றே சொல்லலாம். (சிவகங்கை வட்டாரத்தில் ஒரு பெரியவீட்டு முன்பிரிவை முகப்பென்பர்.) நவீனமென்பது முகந்து நிற்பதன்றி வேறென்ன? முகனக் காலம் modern time ஆகும்.
 
முகனியம் (நவீனத்துவம்) என்பது 1950 களின் பின், ஐரோப்பிய ஓவியம், சிற்பம், கலை, மெய்யியற் துறைகளில் எழுந்ததொரு அழகியற் கோட்பாடாகும். அதுவரை இருந்த மறுமலர்ச்சிக் கோட்பாட்டிற்கு (renaisance concept) மாறாக ஒரு முகனியப் பட்டவம் (fashion) நுகர்வோரிடம் புதிதாய் எழுந்தது. இது மேலும் வளர்ந்து முகனியத்திற்கு அடுத்த நிலை பற்றிய பேச்சு வந்த போது ’முகனியத்திற்கு அப்பால்’ என்ற வளர்நிலை புரிந்துகொள்ளப்பட்டு ’முகன அப்பாலியம்’ (post-modernism) ஆனது. (முகனத்திற்கு அப்புறமானது முகன அப்பாலியம். பால் = புறம்.) இங்கே post ற்கு இணையான சொல்லைத் தமிழிற் பின்னொட்டாகச் சேர்ப்பதே சரியான பொருளைத் தரும்.
 
அ-புனைவு, அ-வைதீகம் என்பவற்றிலும் தடுமாற்றம் இருக்கிறது. அல் என்ற தமிழ் முன்னொட்டைப் போன்றது அ எனும் வடமொழி முன்னொட்டாகும். கனியிருப்ப காய்கவர்தல் ஏன்? தாயின் பாலிருக்கப் புட்டிப்பால் ஏன்? அல்லின் ’ல்’ இல்லாது சொல் படைப்பது தமிழிற் புரிதற் குழப்பத்தையே வரவழைக்கும். அல் முன்னொட்டாய்ப் பயனுறவா, பின்னொட்டாய்ப் பயனுறவா? - என்ற கேள்வியைக் கவனிக்க வேண்டும். அல்பொருள், அல்வழக்கு, அல்வழி போன்றவை அரிதானவை. அல்லை வைத்து எல்லாவிடத்தும் முன்னொட்டுப் பழகமுடியாது. (அல்லிருமை என்ற சொல்லை அத்வைதத்திற்கு இணையாக நானும் பரிந்துரைத்திருக்கிறேன். அதுவும் அரிதானதே.)
 
பொதுவாகத் தமிழில் முன்னொட்டை விட பின்னொட்டே பெரிதும் பயன்படுகிறது. (இருபத்து ஒன்று என்பது தமிழ்முறை. Ein und Zwanzig என்பது இந்தையிரோப்பிய முறை. இந்தியிலும் பந்த்ரா(க்) என்று பதினைந்தைச் சொல்வர். பத்தாந் தானம் சொல்லி ஒன்றாந் தானம் சொல்வதே நம்மூர் வழக்கம். முன்னொட்டா, பின்னொட்டா என்பதில் மரபே முடிவு செய்கிறது. புனைவல்லாதவற்றை, வேதமல்லாதவற்றை அப்படியே சொல்லிப் போகலாமே? அபுனைவு, அவைதீகம் என்று ஏன் சொல்லவேண்டும்? அல்வேதம் என்று கூடச் சொல்லாது அவைதீகம் என்று வடமொழி இலக்கணம் பயில வேண்டுமா, என்ன?  (சிவம் என்பதைச் சைவம் என்றும், விண்ணவம் என்பதை வைணவம் என்றும் எழுதுவதும் தவறுதான். சங்கத இலக்கணம் நமக்கெதற்கு?)
 
இந்தையிரோப்பியக் குடும்பில் முன்னொட்டு பெரிதும் இயற்கையானது. பல்வேறு முன்னொட்டுக்களை விதம் விதமாய் ஒட்டிப் பொருள் வேறுபாட்டை எளிதிற் கொணர்ந்து விடுவர். dispel, expel, impel, propel, repel என்பவை அப்படி உருவானவையே. இவற்றிற்கு அடிப்படை pellere எனும் இலத்தீன் வினையாகும். ஒரு குழாயின் வாயில் வழி வெளியாகும் நீர்மத் தாரையைப் ”பீச்சியடிக்கிறது” என்கிறோமே? நினைவிற்கு வருகிறதா? இற்றைப் பேச்சுவழக்கிற் பீச்சலென்று திரித்தாலும், சங்க காலத்தில் பிலிற்றல் என்றே இது பலுக்கப்பட்டது
 
பதவுமேய் அருந்து மதவுநடை நல்ஆன்
வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்ற
 
       அகநானூறு 14, 9-10
 
”முல்லை நிலத்தில் அறுகம் புல்லை வயிறு நிரம்ப உண்ட வலியநடையுள்ள பசுக்கள் தம் மடியிலிருந்து இனிய பால்மிகுதியால் பீச்சியடிக்க” என்பது இதன் பொருளாகும்.
 
*புல்>பில்>பிள்>பிளத்தல்
*புல்>பில்>பிள்>விள்>விள்ளல்
*புல்>பில்>பிள்>பிள்ளை = தாயிலிருந்து பிரிந்து வந்த குழந்தை
*புல்>பில்>பிள்>பிரி>பிரிதல்
*புல்>பில்>பிலி>பிளி>பிளிரல் = கிளைக்கை
*புல்>பில்>பிலி>பிளி>பிளிர்த்தல் = கொப்புளித்தல்
*புல்>பில்>பிலி>பிலிர்>பிலிற்று>பிலிற்றல்
*புல்>பில்>பிலி>பிலிர்>பிலிற்று>பிளிற்று>பிளிற்றல் =
*புல்>பில்>(வில்)>விலகு>விலகல்
*புல்>பில்>பிய்>பிய்>பிய்தல்
*புல்>பில்>பிய்>பிய்>பிய்தல்>பிய்த்தல்>புய்த்தல்
*புல்>பில்>பிய்>(பெய்)>பெயர்>பெயர்தல் = பிரிதல்
*புல்>பில்>பிள்>பிள்+து>பிட்டு>பிட்டல்
*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிது>பிதுக்கு>பிதுக்கல்
*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிது>பிதிர்தல்
*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிது>பிதுக்கல்
*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிடுங்கு>பிடுங்கல்
 
என்று பிரிதற் பொருளில் *புல்>பில் வேரில் பிளத்தலும், விள்ளலும், பிள்ளையும், பிரிதலும், பிளிரலும், பிலிர்த்தலும், பிலிற்றலும், பிளிற்றலும், விலகலும், பிய்தலும், புய்த்தலும், பெயர்தலும், பிட்டலும், பிதுக்கலும், பிதிர்தலும், பிதுக்கலும், பிடுங்கலும் எனச் சற்றே வேறுபட்டுப் பற்பல வினைச்சொற்கள் எழும்.
 
கொள்கலத்தில் நீர்மம் பிரிந்து தாரையாயோ, துளிகளாய்ச் சிதறியோ, வெளிவருவது பிலிற்றலாகும். பிலிற்றலுக்கு விசையாகத் தொடர்ந்து நீர்ம அழுத்தம் (liquid pressure) இருக்க வேண்டும். அது உயரத் தொட்டியாகவோ, அழுத்தங் கூடிய நீர்மக் கலனாகவோ இருக்கலாம். (அகம் 14 இல் நீர்மக் கலன் என்பது ஆவின் மடியாகும்.) நீர்மத்தை மட்டுமே பிலிற்றுகிறோம் என்றில்லை. நீர்மம் (liquid), வளிமம் (gas) எனும் எந்த விளவத்திலும் (fulid) இது நடக்கலாம். 

அன்றாடம் பற்பசைத் தூம்பை (tube) அமுக்கிப் பாகுப் (vicous) பசையைப் பிலிற்றுகிறோமே? இன்னொரு பக்கம், கன்னெய்த் தாங்கலில் (petrol bunk), வண்டியுருளித் (car tyre) தூம்பின் காற்றழுத்தங் கூட்ட, அதியழுத்தக் காற்றுக் கலனின் (high pressure air vessel) குழாய் வழி பீச்சிக் காற்றடைக்கிறோமே? கவனித்திருக்கிறீர்களா?
 
பின்னாளில் பிலிற்றல் திரிந்து பிலிற்றல்>பியிற்றல்>பீற்றல்>பீச்சல் என்றாகிப் போனது. பலன்>பயன், வாழப்பழம்>வாயப்பயம், கழுதை>கயுதை என்றாவது போல லகர/ழகர/ளகர இடையுயிர்ச் சொற்கள், பேச்சு வழக்கில் யகர ஒலிப்பு உறுவது தமிழர் பலுக்கலில் இயற்கையே. பீற்று, பீச்சாவதும் புதிதல்ல. கீற்று கீச்சாகியிருக்கிறதே? விசையோடு வெளிவரும் தாரையைப் பிலிற்று என்றும் பெயர்ச்சொல்லாக்கிச் சொல்வதுமுண்டு. 21 ஆம் நூற்றாண்டில் ’பிலிற்று’ போய், பீச்சே நம் வழக்கிலுள்ளது. இக்காலத்திற் பிலிற்றை மீட்டுவது சொல்லாக்கத்திற்குப் பயன்படும்.
 
பிலிற்றின் (பீச்சின்) மூலம் கொள்கல உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதைத் தான் expel என்ற ஆங்கிலச்சொல் காட்டுகிறது. இதை வெளித்தள்ளு, வெளிப் பீச்சு என்கிறோம் ஆனாலும் பிலிறித் தள்ளல்/பீச்சித் தள்ளல் என்பது சிறப்பாக இருக்கும்.
 
பிலிற்றின் மூலம் கொள்கல உள்ளடக்கத்தைப் புறந்தள்ளுவதை dispel என்ற சொல் காட்டுகிறது. இதைப் புறந்தள்ளு, ஒதுக்கித் தள்ளு என்று சொல்கிறோம். இடம், பொருள், ஏவல் புரிந்தால் வெறுமே தள்ளு என்றுகூடச் சொல்கிறோம். பிலிறியொதுக்கு என்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.
 
விளவக் கண்டங்களை (fluid quanta) விளவத்தின் உள்ளேயே வீசியெறிந்து அலசுவதை impel என்ற சொல் காட்டுகிறது. இதை அலசு என்றே இப்பொழுது சொல்கிறோம். இங்கும் நுட்பியல் ஒழுங்கு கருதி உட்குதல் = உள்ளே வைத்தல் என்ற பொருளால் பிலிறுட்கல் என்று சொல்லலாம். இதன் வழி impeller என்பது பிலிறுட்கி என்றாகும். பல்வேறு விதமான பிலிறுட்கிகளும், சுழலிகளும் (turbines) வேதியற் செயற் தொழிலகங்களிலும் (chemical process industries), நீரியற் கட்டகங்களிலும் (hydraulic systems), வானியற் கட்டமைப்புக்களிலும் (aeronautic constructions) பயன்படுகின்றன.
 
விளவக் கண்டங்களைத் தாரையாக்கி விளவக் கலனிலிருந்து பிலிற்றி, அதன்மூலம் விளவக் கலனையே எதிர்த் திசையில் உந்த வைப்பதை propel என்ற சொல் காட்டுகிறது. ஏவுகணைகள் இந்தச் செயற்பாட்டாற்றான் வேலை செய்கின்றன. பிலிறுந்தம் என்பது propulsion என்பதற்குச் சரியாக இருக்கும்..(ப.அருளியார் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகர முதலியில் உந்தெறிவு என்பார். நான் பாத்தி பாத்தியான சொல்லாக்கத்திற்கு உடன்பட்டவனல்லன். 

இக் கட்டுரையிற் சொல்லப்படும் பல்வேறு pellere சொற்களுக்கும் ஓர் ஒத்திசைவு இருக்கவேண்டும் என்பேன். அப்போது தான் அறிவியற் சிந்தனை வளரும். புதிதான pellere பயன்பாடுகளைக் கண்டுபிடித்துத் தமிழிற் பெயர் வைக்கமுடியும்.) solid propulsion என்பது திண்மப் பிலிறுந்தம் என்றாகும். liquid propulsion = நீர்மப் பிலிறுந்தம்; liquid propulsion rocket = நீர்மப் பிலிறுந்த ஏவுகணை.
 
பிலிறுந்தி என்பது propeller என்பதற்குச் சரியாக இருக்கும். தாரைவகைப் பறனைகள் (jet planes) ஒருவகையென்றால், பிலிறுந்தி வகைப் பறனைகள் (propeller fan type planes) இன்னொருவகையாக ஒரு காலத்தில் இருந்தன. இப்பொழுது நீண்ட பயணத்திற்கு முதல் வகையும், குறைந்த தொலைவிற்கு இரண்டாம் வகையும் நேர்த்தித் திறனோடு பயனுறுத்துகிறார்.
 
விளவப் பிலிற்றலால் ஒரு பக்கம் தள்ளுஞ் செய்கையைத் தடுத்து எதிர்ப்பதை repel என்ற சொல் காட்டுகிறது. இதை எதிர்த்தள்ளு என்கிறோம். (வெறுமே எதிர் என்றுஞ் சொல்வதுண்டு.) இங்கும் ஒழுங்கு கருதி பிலிற்றெதிர்/பீச்செதிர் என்று சொல்லலாம்.
 
பொதுவாக அருங்கலைச் சொற்கள் / நுட்பச் சொற்கள் என்பவற்றில் முன்னொட்டு/பின்னொட்டு போன்றவற்றைத் தவிர்க்காதிருப்பது நல்லது. புரிந்த இடத்தில் இந்த ஒட்டுக்கள் இல்லாது பயில்வதிற் தவறில்லை.
 
நம்முன்னே ஒரு விசிறியிருக்கிறது என்று வையுங்கள். அது பிலிறுந்தி விசிறியா (propeller fan), பிலிறுட்கி விசிறியா (impeller fan) என்பது நுட்பியலாளருக்குத் தேவையான, வேண்டக் கூடிய புரிதலாகும். ஆனால் நம் போன்ற பொதுப் பயனாளருக்கோ வெறும் விசிறி என்பதே போதும். சிக்கல் என்னவெனில் பொதுப் பயனாளரும் சொல்லாக்கச் செயற்பாடுகளுக்குள் உட்புகுந்து ”அது சரியில்லை, இது சரியில்லை. விசிறியே போதாதா? ஆங்கிலத்தையே வைத்துக் கொள்ளலாமே? வடமொழியிற் சொல்லக் கூடாதா?” என்று கருத்துச் சொல்லத் தொடங்கி விடுகிறார். இது போன்ற கிடுக்கங்களை (criticisms) ஒரு பக்கம் வரவேற்கும் போது இன்னொரு பக்கம் எழுதருகையோடு (எச்சரிக்கையோடு) சிந்திக்க வேண்டியிருக்கிறது. 

அன்புடன்,
இராம.கி.

Friday, January 31, 2014

Locker = வைப்புழி

அண்மையில் தினமணியின் சிறுவர் மணி படித்துக்கொண்டிருந்தேன். (25/1/2014 வெளிவந்தது. பக்கம் 29) அதில் ஒரு துணுக்குச் செய்தி படித்தேன்.
 
------------------------------------
வங்கிகளில் உள்ள ‘லாக்கர்’களை ‘பெட்டகம்’ என்று சொல்லுகிறோம் இப்பொழுது.
 
ஆனால், சங்க காலத்திலேயே அதற்கு ஒரு நல்ல சொல் வழங்கியிருக்கிறது. அது..... வைப்புழி.
 
வைப்புழி என்றால் பொருள் வைக்கும் இடம் என்று பொருள்.
 
திருக்குறள், நாலடியார் ஆகிய நூல்களில் ‘வைப்புழி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
 
- முக்கிமலை நஞ்சன், எடக்காடு.
 
-------------------------------------
 
இந்த நண்பர் எழுதியதைப் படித்து வியந்தேன்.(நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்? உழி என்றால் இடம்.  வைக்கும் உழி வைப்புழி. (வைப்புப் பணம் = deposit என்று தமிழ்நாட்டிற் சொல்கிறோமே? வைப்பகம் என்றே தமிழீழத்தில் வங்கிகளைச் சொல்வார்கள்.)
 
வைப்புழி என்பது கருத்தாழம் பொருந்திய கூட்டுச்சொல்.  இந்தக் காலத்தில் இதை விடுத்துப் பெட்டகம், சேமப் பெட்டகம் என்று நீட்டி முழக்கிச் சொல்லுகிறோம். வைப்புழியிருக்கச்  சேமப் பெட்டகம் என்பது அருவியிருக்க  நீர்வீழ்ச்சி என்றழைப்பது போற் சுற்றிவளைத்து அமைந்த சொல்லாகும். 
 
 தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட மு.சண்முகம் பிள்ளையின் தமிழ்-தமிழ் அகரமுதலியைப் பார்த்தேன். வைப்புழி என்ற சொல் இந்தப் பொருளில் இருக்கிறது. இன்று எந்த வங்கியாவது பயன்படுத்துகிறதோ? பழஞ் சொற்களைப் புதுக்காமல், இன்னும் புதுப் புதுச்சொற்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தால் எப்படி? அந்தக் குறளையும், நாலடியாரையும் யாராவது தேடியெடுத்துப் போடலாமே? கூடவே இந்தச் சொல்லை மற்ற மடற்குழுக்கள், வலைப்பதிவுகள், முக நூல், கீச்சு எனப் பரப்பலாமே?
 
என்னதொரு சோகம் பாருங்கள்? லாக்கர் என்றே வங்கி செல்லும் பொதுமக்கள் எங்கும் ஆங்கிலத்திற் சொல்கின்றனர். இப்படிச் சொல்வதால் தமிழை விட்டு வெகு தொலைவு விலகி நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.  தமிங்கிலம் வளர்க்கத் தலைப்படுகிறோம். கையிற் செல்வத்தை வைத்து வேறெங்கோ அலைகிறோம்.  நம் வயிரங்களைக் கூழாங்கற்களாய்த் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். 
 
கண்ணிருந்தும் குருடராய் நாட்கழித்தால் எப்படி?
 
அன்புடன்,

இராம.கி.

Sunday, January 26, 2014

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ?

பேரா. அண்ணாமலையின் கட்டுரை மொழியார்வங் கொண்ட எல்லாத் தமிழராலும் படிக்கப் படவேண்டிய ஒன்றாகும்.
 
தமிழ் நம் மாநிலத்தில் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக, வணிக மொழியாக, கல்வி மொழியாக, நாம் எல்லோரும் அன்றாடம் பயன்படுத்தும் மொழியாக  ஆகாவிட்டால் அழிந்துவிடும் என்று என்னைப் போன்றோர் கூறுவதைக் கேட்காவிட்டாலும், மொழியியற் பேராசிரியர் கூறுவதையாவது படித்து உணரலாமே? அவரவர் புலங்களில், பதிவுகளில், மடற்குழுக்களில் இதைப் பற்றிப் பேசலாமே? ஒரு பொதுக்கருத்தை எடுத்துக்கூறி இந்தத் திராவிட ஆட்சியாளர்களின் போக்கை  மாற்றலாமே?
 
இந்த பாழாய்ப் போன ஆங்கிலத்தைக் கட்டிக்கொண்டு எத்தனை நாள் மாரடிப்பது? அந்தக் காலத்துச் சங்கதம் போல் இந்தக் காலத்தில் ஆங்கிலம் ஆகிக் கொண்டிருக்கிறது. நாம் யாரும் உணர மாட்டேம் என்கிறோம். நாமே நம் தலையைக் கொடுத்து அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். தமிழைப் பயன்படுத்துவது குறைந்துகொண்டே போகிறது. தமிங்கிலம் என்னும் கிரியோல் மொழி உருவாகிக் கொண்டிருக்கிறது. நம் இளைஞர்கள் “தமிழ் பேச, எழுதத் தெரியவில்லை” என்று சொல்லத் தலைப்பட்டுவிட்டார். நாமும் ”record dance" பார்த்துக் கைதட்டிக் கொண்டிருக்கிறோம். கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ?  மேடைகளில் கவலுற்று இதுபற்றிப் பேசுவோர் எங்கே என்று தேடவேண்டியிருக்கிறது.
 
படித்த அறிவுய்திகளே இதற்கு முற்றிலும் காரணமாவர். 
 
அன்புடன்,
இராம.கி.

From: E. Annamalai
Sent: Sunday, January 26, 2014 10:05 AM
Subject: [ctamil] Verncaularization


I posted in the list some time ago about the danger of Tamil becoming a vernacular language. The full article (and articles by others on language endangerment) can be seen in the e journal Language Endangerment and Preservation in South Asia, that is available  online.It is downloadable.
 

Tuesday, January 14, 2014

தமிழ்க் கணிமைச் சந்தை

தமிழகத்திற் பொத்தகச் சந்தை விரிவடைந்து வருகிறது என்ற நான் சொன்னதைப் பார்த்து நண்பர் நாக.இளங்கோவன், “கடந்த 10-15 ஆண்டுகளில்
தமிழ்க் கணிமைச் சந்தையில் வளர்ச்சி இருப்பதாகக் கருத முடியவில்லை” என்று கூறி, “தமிழ்க் கணிமைத் துறையில் அறிவாளிகள் இல்லையா? மதிக்கூர்மை இல்லையா? சந்தையைப் பற்றிய சிந்தனை இல்லாத ஒரு துறை வளர்கிறது என்று சொன்னால் எங்கேயோ பிழை இருக்கிறது
என்றே பொருள்” என்றுஞ் சொன்னார். ”பொத்தகச் சந்தையின் வளர்ச்சியைப் பார்த்து தமிழ்க் கணிமைத் துறை பாடம் பெற நிறையவே இருக்கிறது” என்று தன் முன்னிகையில் (comment) முடித்திருந்தார்.

என்னுடைய பின்னூட்டைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
......................................................

தமிழ்க் கணிமைச் சந்தை வளர்கிறது என்பதெல்லாம் நானறிந்தவரை வெறுங் கற்பனையே. எவ்வளவு விற்றிருக்கிறது என்று சொல்லுவதற்குக் கூட ஒரு புள்ளிவிவரங் கிடையாது. ”இந்தப் பூனை வெளியே வந்துவிடுமோ?” என்று ஒவ்வொருவரும் குச்சுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார்.

இது பற்றியெல்லாந் தமிழ் மக்களுக்குங் கவலையிருப்பதாய் நான் நினைக்கவில்லை.. இதற்கான அக்கறை படித்தவருக்குங் கிடையாது. படிக்காதவருக்குங் கிடையாது. தமிழ்நாட்டரசிற்குங் கிடையாது. (சொவ்வறை உருவாக்கியவர் எல்லாம் “வாங்குக” என்று கூவித்தான் அழைக்கிறார். ஆனால் வாங்குவதற்கு ஒரு தேவை (demand) இருக்கவேண்டுமே? யாருக்காவது தமிழில் ஒரு விண்ணப்பம், ஆவணம், பட்டியல் உருவாக்கவேண்டுமென்ற கட்டாயம் இந்த நாட்டில் இருக்கிறதா? அதுதான் எல்லாவற்றையும் “இங்கிலிபீசில்” இருக்கும்படி இன்றியமையாத கட்டாயம் இங்கு உருவாக்கப் பட்டுவிட்டதே? இதைப் பற்றியெல்லாம் பேசினால் “நாம் அரசியல் பேசுகிறோமாம்”. எனவே கண்ணியம் மிகுந்த நுட்பியலாளர்கள் அமைதி காப்பார்கள்.

தேவை பற்றிப் பேசாது, அளிப்பு (supply) பற்றி மட்டுமே இத்தனை காலம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி கணிமைச்சந்தையைக் கூட்டும் முயற்சி முன் நகரும்? தேவையைக் கூட்டுவது பற்றி தமிழ்க் கணிமை வல்லுநர் என்ன பேசியிருக்கிறார், சொல்லுங்கள்? (ஏதோ, கணிமையின் மேற் கரிசனங் கொண்டிருக்கும் பொதுவான நாலுபேர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்  அவ்வளவு தான்.)

இந்த நாட்டிற் தான் தமிழ் மொழி ஆட்சி மொழியாக, நய மன்ற மொழியாக, வணிக மொழியாக, கல்வி மொழியாகப் புழங்கவில்லையே? எல்லோரையும் (இந்த எல்லோர் என்பது தமிழக அளவில் 7.5 ~ 8 கோடி மக்கள், உலக அளவில் இன்னும் 1.5 ~2 கோடி மக்கள்)  விழுந்தடித்து ஆங்கிலப் புழக்கத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்றும்,  ஆங்கிலந்  தெரிந்தோர் ஒரு சாதியென்றும், ஆங்கிலந்  தெரியாதோர் ஒரு சாதியென்றும் ஆக்கி ஒரு கொடூரமான சாதியாட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறாரே? இதைப்பற்றி எந்த அரசியல்வாதி பேசுகிறார்? இன்னின்ன மாற்றங்கள் செய்தால் தமிழ்ப்புழக்கங் கூடும் என்று இணையத்தில் எந்தவொரு மடற்குழுவாவது பேசியிருக்கிறதா? வலைப்பதிவு, முகநூலிற் பேசியிருக்கிறாரா? கல்லூரி மாணவர், ஆசிரியர்? தாளிகைகள், நாளிதழ்கள்? குமுக முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்?  தமிழக அறிவுய்திகள் (intelligentia)? ‘தமில் வால்க’ என்று கூப்பாடு போடுவதற்கு மட்டுமே ஆள், படை சேருகிறது.

ஆனாலும் தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதாய் ஏதேதோ திட்டம் போடுகிறோம். கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்படுகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

2014 பொத்தக வியந்தை


2014 சென்னைப் பொத்தக வியந்தையில் (Book fair) நான் வாங்கிய நூல்களின் பட்டியலைக் (நூலின் பெயர், ஆசிரியர் பெயர், வெளியீட்டின் பெயர், பிறைக்குறிக்குள் வாங்கிய கடைகளின் பெயர்கள்)  கீழே கொடுத்துள்ளேன். இவை என்னுடைய இற்றை விழைவைப் பொறுத்தன. நண்பர்களின் கவனத்திற்கும், பரிந்துரைக்குமாய் இவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.நீங்கள் வாங்கியதையும் இங்கு பரிமாறிக்கொள்ளுங்கள். இந்தப் பரிமாற்றம் எல்லோருக்கும் பயன்படும். 
 
பொத்தக வியந்தையில்  எந்த ஆண்டைக் காட்டிலுங் கூடுதலாய்க் 777 கடைகள் இருக்கின்றன. மக்கள் நெரிசலும் கூடவே இருக்கிறது. பொத்தகங்களின் விலை வாசியும் கன்னாப் பின்னாவென்று கூடியிருக்கிறது. எல்லாக் கடைகளும் ஏறியிறங்க வேண்டுமானால் குறைந்தது 6,7 மணி நேரங்கள் ஆகலாம். (இத்தனைக்கும் முழுதும் ஆங்கிலப் பொத்தகங்கள் மட்டுமே விற்கும்  கடைகளுக்குள் நான் போகவில்லை. ஓரளவு நான் எதிர்பார்த்த கடைகளுக்குள் மட்டுமே போய் வந்தேன்.) 
 
பொங்கலுக்கு அப்புறம் இன்னும் ஒருமுறை போவதாய் வைத்துள்ளேன். பள்ளிச்சிறுவர்களுக்காக எங்கள் அறக்கட்டளையின் வழி வாங்கும் பொத்தகங்களை அடுத்த முறை போகும் போது தேர வேண்டும். (இந்த ஆண்டு எனக்காகப் புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் வாங்கவில்லை. கொஞ்ச காலம் இவற்றைத் தள்ளி வைத்திருக்கிறேன். எப்பொழுது மாறுமோ, தெரியவில்லை. வாங்கியவை எல்லாமே புதினமல்லாதவற்றைச் சேர்ந்தவை.)
 
படிக்கும் பழக்கம் மக்களிடையே கூடியுள்ளதா என்று ஆராய்ச்சியாளர்கள் தான் சொல்லவேண்டும்.  
 
அன்புடன்,
இராம.கி.
---------------------------------------------------------
 
1. கல்வெட்டுச் சொல்லகராதி, தி.நா. சுப்பிரமணியன், தமிழகத் தொல்லியற் துறை வெளியீடு, (தமிழகத் தொல்லியற் துறை) 
2. கருவூர் அகழாய்வு, கி.ஸ்ரீதரன், து.துளசிராமன், இரா.செல்வராஜ். சீ.வசந்தி தமிழகத் தொல்லியற் துறை வெளியீடு, (தமிழகத் தொல்லியற் துறை)
3. கொடுமணல் அகழாய்வு, ர.பூங்குன்றன், தி.சுப்பிரமணியன், சீ.வசந்தி, வெ.இராமமூர்த்தி, இரா.செல்வராஜ், தமிழகத் தொல்லியற் துறை வெளியீடு, (தமிழகத் தொல்லியற் துறை) 
4. Archaeological excavations of Tamilnadu vol.I, S.Vasanthi, V.Ramamurthi, M.Kalaivanan, S.Sreekumar, தமிழகத் தொல்லியற் துறை வெளியீடு, (தமிழகத் தொல்லியற் துறை) 
5. Archaeological excavations of Tamilnadu vol.II, R.Poonkuntran. K.Sridharan, S.Vasanthi, V.Ramamurthi, தமிழகத் தொல்லியற் துறை வெளியீடு, (தமிழகத் தொல்லியற் துறை) 
6. தென்னிந்திய மருத்துவ வரலாறு, டாக்டர் ரா.நிரஞ்சனாதேவி, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, (NCBH)
7. சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள், ந.இராணி, NCBH வெளியீடு, (NCBH)
8. வீரசோழியம், புத்தமித்திரனார்/கா.ர.கோவிந்தராஜ முதலியார் பதிப்பு, NCBH வெளியீடு, (NCBH)
9. சமணம், ஆர்.பார்த்தசாரதி, NCBH வெளியீடு, (NCBH)
10. சங்க இலக்கியப் பதிப்புரைகள், இரா.ஜானகி, பாரதி புத்தகாலயம் வெளியீடு, (பாரதி புத்தகாலயம்)
11. அறியப்படாத தமிழ் உலகம், பா.இளமாறன், ஐ.சிவகுமார், கோ.கணேஷ், பாரதி புத்தகாலயம் வெளியீடு, (பாரதி புத்தகாலயம்)
12. இந்திய நாத்திகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, பாரதி புத்தகாலயம் வெளியீடு , (பாரதி புத்தகாலயம்)
13. கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், இரா.பஞ்சவர்ணம், தாவரத் தகவல் மையம்வெளியீடு, (panuval.com)
14. தொல்காப்பியத் தாவரங்கள், இரா.பஞ்சவர்ணம், தாவரத் தகவல் மையம், (panuval.com)
15. கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும், மரு.வீ.புகழேந்தி, மரு.ரா.ரமேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு, எதிர் வெளியீடு, (எதிர் வெளியீடு)
16. மணிமேகலை, உ.வே.சா.நூல்நிலையம் வெளியீடு, (தினமலர்)
17. பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும், ஜோசப் இடமருகு, அலைகள் வெளியீட்டகம் வெளியீடு, (அலைகள் வெளியீட்டகம்)
18. நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை, வெள் உவன், தமிழினி வெளியீடு, (தமிழினி)
19. கோவில்-நிலம்-சாதி, பொ.வேல்சாமி, காலச்சுவடு வெளியீடு, (காலச்சுவடு)
20. கண்ணகி தொன்மம், சிலம்பு.நா.செல்வராசு, காலச்சுவடு வெளியீடு, (காலச்சுவடு)
21. கௌதம புத்தர், மயிலை சீனி வேங்கடசாமி , மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு, (மணிவாசகர் பதிப்பகம்)
22. தமிழரின் எழுத்தறிவு, நடன.காசிநாதன், மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, (மணிவாசகர் பதிப்பகம்)
23. கலித்தொகை - பரிபாடல் ஒரு விளிம்புநிலை நோக்கு, ராஜ்கௌதமன், விடியல் பதிப்பகம் வெளியீடு, (விடியல் பதிப்பகம்)
24. கட்டுமரத்திலிருந்து கப்பல் வரை, அ.சற்குணன், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, (பழனியப்பா பிரதர்ஸ்)
25. குமரிநாட்டில் சமணம், சிவ.விவேகானந்தன், காவ்யா வெளியீடு, (காவ்யா)
26. நெல்லைத் துறைமுகங்கள், முத்தலங்குறிச்சி காமராசு, காவ்யா வெளியீடு, (காவ்யா)
27. ஸ்ரீ வைஷ்ணவம், வேணு சீனிவாசன், கிழக்குப் பதிப்பகம் வெளியீடு, (கிழக்குப் பதிப்பகம்)
28. The later Mauryas 232 BC to 180 BC, Hector Alahakoon, Munshiram Manoharlal வெளியீடு, (Munshiram Manoharlal)
29. An analytical study of four Nikaayas, D.K.Barua, Munshiram Manoharlal வெளியீடு, (Munshiram Manoharlal)
30. Buddhist Logic I, Th.Stcherbatsky, Munshiram Manoharlal வெளியீடு, (Munshiram Manoharlal)
31. Buddhist Logic II, Th.Stcherbatsky, Munshiram Manoharlal வெளியீடு, (Munshiram Manoharlal)
32. New dimensions in Tamil Epigraphy, Appasamy Murugaiyan, Cre-A வெளியீடு, (Cre-A)
33. வள்ளுவத்தின் வீழ்ச்சி - II ed, குணா, தமிழக ஆய்வரண் வெளியீடு, (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்)
34. எண்ணியம், குணா, தமிழக ஆய்வரண் வெளியீடு, (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்)
35. நாற்றங்கால், குணா, தமிழக ஆய்வரண் வெளியீடு, (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்)
36. தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துகள், ப.துரைசாமி, இரா.மதிவாணன், சேகர் பதிப்பகம் வெளியீடு, (சேகர் பதிப்பகம்)
37. சிலப்பதிகார ஆராய்ச்சி, வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம் வெளியீடு, (சேகர் பதிப்பகம்)
38. பாணர் இனவரைவியல், பக்தவத்சல பாரதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
39. அறிவியல் நோக்கில் மொழி, செ.சண்முகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
40. உலகச் செம்மொழிகள், கரு.அழ.குணசேகரன், செ.ஜீன் லாறன்ஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
41. Sangam Classics: New Perspectives, A.Pandurangan, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
42. அபிதான சிந்தாமணி, ஆ.சிங்காரவேலு முதலியார், சீதை பதிப்பகம் வெளியீடு, (மீனாட்சி புத்தக நிலையம்)
43. போதி தர்மர், அழகர் நம்பி, சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு, (New Book Lands)
அன்புடன்,
இராம.கி.

Saturday, January 11, 2014

Forum

தாளிகைச்சொற்கள் பற்றிய என் வலைப்பதிவு இடுகையின் பின்னூட்டாக இராசு சரவணன் என்ற ஒரு நண்பர் forum என்பதற்கு மன்றம் என்பதைக் காட்டிலும் வேறு சொற்களுண்டா? என்று கேட்டிருந்தார்.

(முல்>(மல்)>மன்>மன்று>மன்றம் என்று சொல்வளர்ச்சி நீண்டு அவை அல்லது தொகுதிப்பொருளைச் சுட்டும்.  தொகுதி என்பது வெளியில் இருக்கலாம், ஒரு கட்டடத்தின் உள்ளிருக்கலாம்.  பூதிகமாய் இருக்கலாம், பூதிகமல்லாது கருத்துப்புலத்தில் இருக்கலாம்; நேரடியாக இருக்கலாம், மறைமுகமாக இருக்கலாம். இப்படிப் பல்வேறாய்  விரியும். மன்று என்பது தமிழிற் பொதுமையான சொல்; விதப்பான சொல்லன்று. மன்றம் என்பது association, assembly போன்றவற்றிற்கும் வேறிடங்களிற் பயன்படுவதால் அதையே forum என்பதற்கும் பயன்படுத்துவதில் சிக்கல் எழாதா? - என்றெண்ணிச் சொற்துல்லியம் வேண்டிக் கேட்டாரோ, என்னவோ? எப்பொழுதும் சொற்துல்லியம் தேடிப் பார்க்கும் ஆளான எனக்கு, இருப்பதை அள்ளித் தெளித்து பூசி மெழுகும் வேலையில் பெரும்பாலும் இசைவு கிடையாது.)
  
நானும் forum என்பதற்கு மன்றம் என்ற சொல் பல இடங்களிற் புழங்குவதைப் பார்த்திருக்கிறேன். forum hub என்பதை மன்ற மையம் என்றும் எழுதுவார்கள். (இணையத்தில் ஒரு காலம்
பலரும் உலவிக் கொண்டிருந்த இடம் மன்ற மையம் என்பதாகும். நானும் அங்கு பெரிதாகப் பங்களித்திருக்கிறேன். இப்பொழுது வெகு அரிதாகவே அங்குபோய்ப் பார்க்கிறேன். அந்தத் தளம் என்னவாயிற்று என்று பார்க்கவேண்டும்.)
மன்றம் என்னும் பொதுமைச் சொல்லைக் காட்டிலும் விதப்பான இன்னும் மரபுசார்ந்த சொல்லைப் பரிந்துரைக்க முடியும். ஆனால் எத்தனை பேர் அதை எடுத்துக்கொள்வர் என்ற தயக்கமுண்டு.  ஏதோவொரு காரணம் பற்றி ஒரு சொல் பழக்கமாகிவிட்டால் அதைப் பின்னால் மாற்றுவது தமிழ்ச்சூழலிற் கடினமாகிவிடுகிறது. இந்தப் பேச்சு/எழுத்துப் பழக்கமே நமக்குத் தடையாகிப் போகும். [அருவியிருக்க நீர்வீழ்ச்சியை நம்மிற்பலர் இற்றைக்காலத்திற் பயன்படுத்துகிறோமே; நினைவுக்கு வருகிறதா? அருவியை அங்கெல்லாம் எழுத நம்மில் எத்தனை பேர் அணியமாகிறோம்? தமிழ்நடை சிறிது சிறிதாகக் கடினப்பட்டு வருகிறது; சுற்றி வளைத்து ஆகிறது. சங்கத் தமிழின் எளிமையை மறந்து பலக்கிய (coplex) சொற்களையும் சொற்றொடர்களையும் இப்பொழுது நாம் கையாண்டு வருகிறோம்.]
இப்படித்தான் director க்கு இணையாய் இயக்குநர் என்று அள்ளித் தெளித்த கோலமாய் 1967க்கு அப்புறம் பேராயத்தின் ஆட்சியிலிருந்து தி.மு.க. ஆட்சி வந்தபோது எல்லா இடத்திலும் தமிழ்நாட்டிற் குறித்தார்கள். அதே பொழுது operator என்பதற்கும் இயக்குபவர் என்று சொன்னார்கள். இந்த இரட்டைப் பழக்கத்தால், director க்கும் operator க்கும் இடையே புரிதற் குழப்பம் இருந்தது. எண்ணிப் பார்த்தால் இருவரும் ஒன்றா? இதற்கு மாற்றாகச் சொற்துல்லியம் வேண்டி, 1969/70 களில் கோவை நுட்பியற் கல்லூரியில் ”இயக்குநர் என்பதை operator க்கு வைத்துக் கொண்டு  director க்கு நெறியாளர் (நெறியை ஆள்பவர்) என்று சொல்லலாம்” என்று எங்களிற் பலரும் உரைத்தோம். 43 ஆண்டுகள் கழித்து உன்னித்துப் பார்த்தால், நெறியாளர் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தான் இன்னும் புழங்குகிறது. இயக்குநர் என்ற தப்பான வழக்கே director க்கு இணையாகப் பெரும்பான்மை புழங்கிக் கொண்டிருக்கிறது. என்ன சொல்வது? நம்மைச் சுற்றிலும் உள்ள மொழிப் பயன்பாடு விந்தையானது. அது உங்களைக் கேட்டுக்கொண்டோ, என்னைக் கேட்டுக்கொண்டோ நடப்பதல்ல.
[இன்னொன்றும் நினைவிற்கு வருகிறது. இயல்பியல் என்பதை physics க்கு இணையாகச் சொன்னோம். அது எங்கோ தப்பாகி இயற்பியல் என்று மாறுதலடைந்து இன்று பெருவழக்காகிப் போனது. இத்தனைக்கும் இயற்பு என்ற சொல்லே தமிழிற் கிடையாது. (இயல் எனும் பகுதியோடு பு என்ற ஈற்றையொட்டினால் இரண்டு விதச் சொற்கள் எப்படியெழும்பும்? தமிழிலக்கணம் ஒன்றைத்தானே சரியென்று சொல்லும்?) தமிழாய்ந்தோர் யாரும் இப்பயன்பாட்டில் ஏதுங் கேட்காமலிருக்கிறார். பலநேரம் எச்சொல் நிலைக்கும்? எது மறையும்? - என்றுரைக்கவே முடிய வில்லை. என்னளவில் நான் மாறிக் கொள்வதே நல்லதென்று நான் அமைகிறேன். இப்பொழுதெல்லாம் இயல்பியலைப் பயன்படுத்துவதேயில்லை. இயற்பியல் என்பது தவறென்பதால் அதையும் எழுதுவதில்லை. பூதியல் என்று புதுச்சொல் படைத்து physics க்கு இணையாக எழுதுகிறேன். இந்தச் சொல்லாவது சரியான முறையில் ஏற்கப் படுகிறதா என்று பார்ப்போம்.]    
இப்பொழுது நீங்கள் கேட்ட forum இன் சரியான பொருளுக்கு வருகிறேன். John Ayto வின் Bloomsbury Dictionary of Word origins இல்
“Originally Latin forum denoted an 'out-of-doors place' - it was related to foris 'out-of-doors, outside and to fores 'door', a distant cousin of door.It came to be used for any outdoor open space or public space, and in particular for a market place (the most famous of which was the one in Rome, where public assemblies, tribunals, etc were held). Other English words from the same source are foreign, forest, forensic 'of legal proceedings' (from Latin forensis 'of a forum as a place of public discussion')”
என்று குறித்திருப்பார்கள். நம்மூர் நாட்டுப்புற வழக்கிற் பார்த்தால் பெரிய வீடுகளின் உட்புறம் ஒரு திண்ணையும், முற்றமும், அடுப்படியும், அறைகளும், குடும்பத்தினர் வாழிடங்களும் இருக்கும். உட்புறத் திண்ணையை அடைவைத்து அழைக்காது ‘திண்ணை’ என்றுஞ் சொல்லுவர். திண்ணையை ஒட்டினாற் போல் வீட்டுக்கு வெளியே பெருநிலைக் கதவிற்கு (main door) அப்புறம் உள்ள திண்ணையை வெளித்திண்ணை என்பர். வீட்டிற்கு வரும் பொதுவான மாந்தரை வெளித்திண்ணையில் உடகாரவைத்தே பேசிக்கொண்டிருப்பர். பல நாட்டுப்புறங்களில் வெளித்திண்ணைப் பேச்சு பல்வேறு உரையாடலுக்கும் பெயர் போனது. கொஞ்சம் (உறவாலோ, பழக்கத்தாலோ) நெருங்கிய பின் தான் விருந்தாளிகளை பெருங்கதவம் தாண்டி உட்திண்ணைக்கோ, முற்றத்திற்கோ வீட்டுக்காரர் அழைப்பர்.
இந்த வெளித்திண்ணை தான் forum என்பதாகும்.. (உட்திண்ணை அகத்திண்ணையானால்) இதைப் புறத்திண்ணை என்றும் புறவெளி (outside space, hence meeting space) என்றும் சொல்வதிற் பொருளுண்டு. புறவம் என்பது இன்னுஞ் சுருக்கமாயும் பொருத்தமாயும் இருக்கிறது. நம்மூர் மரபிற்கும் அணைத்தாற்போல் அமையும்.
forum = புறவம்
forum hub = புறவத் திண்ணை
democratic forum = சனநாயகப் புறவம்
நாம் வெவ்வேறு புறவங்களிற் பங்குகொள்கிறோம் = we take part in various fora.

அன்புடன்,
இராம.கி.

Thursday, January 09, 2014

தாளிகைச் சொற்கள்

ஒரு தனிமடலில் கேட்டிருந்த தாளிகைச் சொற்களுக்கான பட்டியல்.  இங்கு பலருக்கும் பயன்படட்டும் என்று கொடுத்துள்ளேன். 
 
magazine = தாளிகை
journal = இதழிகை
bullettin = குறிகை
gazette = பட்டிகை
newspaper, daily = நாளிதழ்
weekly = வாரிகை
monthly = மாதிகை
bimonthly = இருதி
periodical = பருதி
diary = நாளிகை
daybook = நாள்நூல்
record =  பதிகை
reporter = நுவலிகை
 
அன்புடன்,

இராம.கி.

Saturday, January 04, 2014

அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 5

தமிழ்கூறும் நல்லுலகில் இற்றைக் குமுகாயம்(society)> குமுகங்கள்(communities) என்பவை தேசிய இனம்(nationality)> இனக்குழுக்கள்(tribes) எனும் பழங்கட்டுமானத்திற் பிறந்தவையாகும். குமுக/குமுகாய நினைவுகூரல்கள் மூதாதைக்கு அமைவதால், இனக்குழுக்கோயில், பெருங்கோயில்களின் நிறுவன உருமானங்களாக (institutional manifestations) நிலைகொள்ளும். அப்படி உள்ளவையே திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகமென நடைபெறும் முருக விழாக்களாகும். அதேபொழுது முன்னோர் படைப்புகள் வேறு மாதிரி. மிஞ்சினால் இவை 7 தலைமுறைக்கு மேல் நீளாது. குலம்(clan)> கரை(giant family that started 7 generations ago)> வளவு (paternally related joint families living around a quadrangle)> குடும்பம்(joint family)> குடும்பு(nuclear family) என்றே சிவகங்கைப்பக்கம் குமுக அலகுகளமைவதால், முன்னோர் படைப்பும் அதே அலகுகளிற் கடைப்பிடிக்கப்படுகிறது.

படைப்பென்பது தனியார் குடும்பில் நடக்கும் நிகழ்ச்சியன்று; தந்தைவழி உறவினர் சேர்ந்து, கூடியாக்கியுண்டு, (பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தல்) முன்னோரை நினைவுகூரும் இது வீட்டுப்படைப்பு, பொதுப்படைப்பென இருவகைப்படும். பொதுப்படைப்பு குலம்/கரை அளவில் நடைபெறுவது. வீட்டுப்படைப்பு வளவு/குடும்ப அளவில் நடைபெறும். படைப்பிற் கலந்து கொள்வோர் முன்னோரிடம் விதப்பாக வேண்டுவதும், வேண்டியது நடந்துமுடிந்தால் செய்வதாக ஏற்றவற்றைச் செய்துமுடிப்பதும் இயல்பானவை. முன்னோரைத் தொழுவது ஒரு தனிப்பட்ட தெய்வத்தைத் (personal god) தொழுவதாகிறது. முச்சந்தி கண்டவிடமெலாம் இற்றைநகர மக்கள் பிள்ளையார் வைத்துக் கும்பிடுகிறார்களே அதுபோல அச்சப் படுவதற்கும், வேண்டுதல் கேட்பதற்குமாய் அணங்கெனும் கருத்தீடு, நாட்டுப்புற மக்களுக்கு வாய்ப்பாக அமைந்தது போலும்.

பொதுவாகப் படைப்பிற்குரிய தந்தைவழி உறவினர் அனைவரையும் கட்டாயங் கலந்துகொளப் பணிப்பர். (அனைவரும் கூடியவரை பணிவர். முன்னோர் ஆசிதரும் நிகழ்வில், அணங்கோடு ‘விவகாரம்’ வைக்கலாமா?) ஆண்கள் வீட்டுப்படைப்பில் மட்டுங் கலந்துகொள்வர். தாய் வீட்டுப்படைப்பிலோ, மாமனார் வீட்டுப்படைப்பிலோ பொதுவாகக் கலந்து கொள்ளார். பெண்கள் புகுந்தவீட்டில் மட்டுமன்றி, பிறந்த வீட்டுப்படைப்பிலும் கலந்துகொள்ள முடியும். பொதுவாக மகன் வழியினர் தான் படைப்பது வழக்கம். அரிதாகப் மகள்வழியினர் வேண்டிக்கொண்டு தாய்வீட்டில் வந்து படைப்பதுமுண்டு.

புதன், வியாழன், வெள்ளி ஏதேனுமொன்றில் படைப்பு நடைபெறும். அன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று அருச்சனைசெய்து வழிபட்டுத் தெளித்தமும் (=தீர்த்தமும்), திருநீறும் பெற்று வருவர். வேளகாரர் வீட்டில் காலையில் விதைநெல் கொடுத்தால், அவர்கள் அதைப்பெற்றுப் படைப்புக் காரருக்குத் திருநீறு கொடுப்பார். அதைக்கொணர்ந்து படைப்புவீட்டிற் திருநீற்று மடலிற் போட்டுவைப்பர். படைப்பின் போது விழுந்து கும்பிட்டு அத்திருநீற்றைப் பூசிக்கொள்வர்.

முன்னோர் நினைவாய், (கோடித் துணியோ, 1,2 ஆண்டு முந்தியதோ) பருத்தியாலான வேட்டி, துண்டு, தலைப்பாகையாகும் உருமாற் துண்டு, சேலை ஆகிய ஆடைகளையும், முன்னோர்
எச்சங்களான உருத்திராக்க மாலை, தூவல் (பேனா), சட்டைப்பொத்தான், கண்ணின்அணியாடி, திறவிக்கொத்து, பொடிப்பேழை, சுருட்டு - வெற்றிலைப் பெட்டிகள் எனச் சிறு விதப்புப் பொருள்களை ஓர் ஓலைப்பேழையுள் (கடகத்துள்) போட்டு வீட்டுச் சாமியறையில் உத்தரத்திற்/வளையத்திற் தொங்கவிட்டிருப்பார். வார வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றும்போது இப்பேழைக்கும் பூப்போட்டு வழிபடுவதுண்டு.

பிற்பகல் 2 மணியளவில் ஆண்கள் மட்டும் உத்தரத்திற் தொங்கும் பேழையைக் கீழிறக்கி, நினைவெச்சங்களைப் பேழைக்குள்ளேயே வைத்துத் துணிகளைமட்டும் தனியேயெடுத்து ஆறு, ஏரி, கண்மாய், ஊருணி (அல்லாக்கால் வீட்டுக்கேணி) நீரில்நனைத்து அலசிப்பிழிந்து பின் தரையிற்படாமற் துணியைக் காயப்போட்டு மடித்தெடுத்துப் பேழைக்குள் சேர்ப்பர். (இத்துணிகளை முன்னோர் விரும்பி அணிவதாய்க் கொள்வர்.) துணிகள் காய்கையில் ஒருதடவை தரையிற் பட்டாலும், மீளத் தூய்மைப்படுத்துவர். காயும் துணிகளைத் தாண்டக்கூடாதென்பதும் ஒரு மரபாகும். இந்தத் தூய்மைப்பணி ஆண்களுக்கு மட்டுமேயுரியது.
அடுத்துப் படைப்பறை முன்னுள்ள முற்றத்தில் மண்பரப்பி மகளிர் விறகடுப்பிற் சமைப்பர். (இதில் ஆண்கள் உதவியுண்டு.) செய்யும்போது சுவை பார்க்காது, எச்சிற் படாது அச்சத்தோடும், ஆழ்ந்த பற்றி(பக்தி)யோடும் செய்வர். வாழைக்காய், பலாக்காய், அவரைக்காய்ப் பொரியலும், புடலங்காய்க் கூட்டும், வெண்டைக்காய், மாங்காய்ப் பச்சடியும், கத்திரி, கருணைக்கிழங்கு, பரங்கிக்காய்க் குழம்பும் என காய்கறிவகைகளைச் செய்வர். (மேலைக்காய்கறிகள் சுற்றரவாகப் பங்குபெறாது. தக்காளி, மிளகாய் மட்டும் விதிவிலக்காகும். அந்தக் காலமானால், புளியும், மிளகும் பகரியாய் இருந்திருக்கும்.) இவற்றோடு கற்கண்டு வடை, உழுந்து வடை, கருப்பட்டிப் பாற்சோறு, பாயசம் வைப்பது உண்டு. கருப்பட்டிப் பாற்சோறு படைப்பிற் கட்டயமாய்க் கொடுக்கப்படும் பெருஞ்சோறாகும் (=ப்ரசாதம்). படைப்பிற்குரிய முன்னோர் கறி விழைவுள்ளவராய் இருந்தால் ஆட்டுக்கறியோ, கோழிக்கறியோ சேர்ந்துகொள்ளும். மீன் வைக்கமாட்டார்.

இரவு 7 மணியளவில் ஆண்கள் படிம அலங்காரஞ்செய்வர். (இதிலும் மகளிர் தொடமாட்டார்.) காய்ந்த வேட்டி, துண்டு, உருமாற் துண்டு, சேலையைக் கொய்து, விசிறிமடிப்பாக்கி, நுனியில் முடிச்சிட்டு பெரியவர் கட்டுவதுபோல் வைப்பார். உருமாற்துண்டை தலைப்பாகையாய்க் கட்டுவர். இவ்வாறன்றித் துணிகளை அடுக்காக ஒன்றின்மேலொன்றாக வைத்தும் படைப்பதுண்டு. முன்சொன்ன விதப்புப் பொருள்களை அருகேவைத்து முன்னோரை நினைவுபடுத்துவர். ஆண்முன்னோருக்கென உருத்திராக்கமாலை, சிவகண்டிமாலை போன்றவற்றைத் தலைப்பாகையைச் சுற்றிப் பொருத்துவர். பெண்முன்னோருக்காக கழுத்திரு, தாலி, மோதிரம், கால்மிஞ்சி போன்ற நகைகளையும் சேலைத் துணிமேல் அணிந்திருப்பதுபோல் வைப்பார். ஆண்முன்னோர் சுருட்டு, புகையிலை விரும்பியிருந்தால், அவற்றிலும் ஒன்றிரண்டு அருகேவைப்பர். இவற்றோடு பால், பழம், சிறுசெம்பில் எண்ணெய், சிகைக்காய் உருண்டை, அரைத்த மஞ்சளுருண்டை ஆகியவற்றையும் வைப்பர். யாருக்குப் படைப்போ, அவர் ஒளிப்படத்தை நடுவில் வைத்து ஊதுவத்தியேற்றி சாம்பாணிப் (சாம்ப்ராணி) புகை கமழவைப்பதுமுண்டு.     

படிம அலங்காரத்தின் எதிரில் ஒன்றோ, மூன்றோ, ஐந்தோ வாழையிலைகளைப் போட்டு அனைத்துக் காய்கறிகளையும், கறிகளையும் பரிமாறிச் [பரிமாறுவதே ஒரு கலை; இலையில் எதை எங்கு வைக்கவேண்டுமென்பதும் ஓர் அழகு அடவு (design) தான் இலைகளில் பாற்சோறு வைப்பது கட்டாயமாகும்.] சோறுபோட்டு, பருப்பு, நெய்யூற்றி, தெளித்தத்தால் நீர்விளாவி நிவத்தி, கற்பூரங்காட்டி வழிபடுவர். கொடிவழி, முத்தோர், பார்த்து வரிசைப்படி ஆண்களும் பின்னாற் பெண்களும் பற்றியுடன் விழுந்து வணங்கி நெற்றியில் திருநீறும், குங்குமமும் இட்டுக்கொள்வர்.
இது நடந்துகொண்டிருக்கும் போதே (ஆணோ, பெண்ணோ) குறிப்பிட்டவரின் மேல் முன்னோர் ஆவி ஏறி (அணங்கி) வரலாம். அணங்காடி மூசுமூசென அழுவதிலோ, வெடவெடவென அசைவதிலோ, குலுங்கிக் குலுங்கி ஆட்டம்போடுவதிலோ இவ்வுணர்வு வெளிப்பாடு முதலில் நடைபெறலாம். கூடியிருப்பவரில் ஒருவரே அணங்கைக் கட்டுப்படுத்தும் பூசாரியாய் மாறுவார். வருவது ஆணணங்கா, பெண்ணணங்கா என்பதைப் பொறுத்து இது அமையும். சிலபோது அணங்கு பேசுவதாய் உரையாடலமையும். பலபோது கூடியிருப்போர் கேள்விகேட்கவும் செய்வர். வீட்டுச் சிக்கல்கள், முன்னோரின் வழிகாட்டுதல்கள், விடைதெரியாத, உகக்க முடியாத, கேள்விகள் எனவெல்லாமே கேட்கப்படும்.

சிலபோது உரையாடல் நீளூம். சிலபோது சுருங்கும். பூசாரியின் திறமையான வழிநடத்தலைப் பொறுத்து உரையாடலும் அணங்காடலும் நிகழும். எழுந்த வேகத்தில் அணங்காடல் சட்டென நின்று மலையேறலாம். மலையேறும்போது சாமியாடி நெற்றியில், பூசாரி திருநீறு பூசுவதும், கூடியிருப்போர் சாமிவந்தோர் காலில் விழுந்து ஆசி பெற்று (முன்னோர் ஆசிகொடுத்ததாகவே எல்லோரும் உணர்வர்.) திருநீறு பூசிக்கொள்வர். நானறிந்து, சாமியாடல் (அணங்காடல்) என்பது 10க்கு 6/7 படைப்புக்களில் நடப்பதாகவே இருக்கிறது. அதேபொழுது சாமியாடலின்றி அமைதியாக நகர்ந்ததையும் கண்டிருக்கிறேன். இதுதான் நடக்கும், இது நடவாது என்று சொல்லமுடியாச் சூழ்நிலையைப் படைப்பு நிகழ்வுகளிற் கண்டிருக்கிறேன்.

[படைப்பு நிகழ்ச்சியை இங்கு விவரித்ததே சாமியாடலைப் (அணங்காடலைப்) பற்றிச் சொல்லத்தான். இது தென்பாண்டி நாட்டில் மிக இயல்பானது. வளவு/குடும்பு அளவிலும், குல,/கரை அளவிலும் இது முற்றிலும் சாத்தாரமாய் நடைபெறுகிறது. இதை எழுதுவதற்கு, என் பட்டறிவு போக ‘நகரத்தார் கலைக்களஞ்சியம் பக்.405-406, மெய்யப்பன் தமிழாய்வகம், வெளியீடும் துணையாக நின்றது. படைப்பு என்பது நகரத்தார் குமுகத்தில் மட்டும் நடைபெறுவதில்லை. கள்ளர் குமுகத்திலும் நடக்கிறது. மற்ற குமுகங்களிலும் இருக்கலாம். ஆனால் அவை இன்னும் பதிவு செய்யப்படவில்லை. நம்மிற் பலரும் நாட்டுப்புற வழக்கங்களை வெளிச்சொல்ல வெட்கப்பட்டு இவற்றைப் பதிவுசெய்யாது போகிறோம். பார்ப்பனமயமான பழக்கவழக்கங்களே வெளியிற் பதிவு செய்யப்படுகின்றன. மேலை ஆய்வாளரும், இந்தியரில் பல ஆய்வாளரும் ”தமிழ்நாட்டு மரபு பார்ப்பன நடைமுறையே” என்று எண்ணிக் கொள்கிறார். இது குமுகம்/ குமுகாயம் என்ற அளவில் ஏற்படும் பெரிய இழப்பாகும்.]

எல்லோரும் படைப்புப் படிமத்தின் கீழ்விழுந்து கும்பிட்டுத் திருநீறு பூசிக்கொண்ட பிறகு, வீட்டுப் பெரியவர்கள் படைப்பு இலைகளிற் சாப்பிட மற்றவர்கள் தனியிலைகளில் சமைத்தவற்றைப் பரிமாறிச் சாப்பிடுவார்கள். அனைவரும் சாப்பிட்ட பிறகு படைத்த பாலும் வழங்கப் பெறும். படைத்துச் சாப்பிட்ட இலைகளை வீதியில் எறிவதில்லை. பழங்காலத்தில் மண்னை வெட்டிப் போட்டு அதிலெறிந்து மூடிவிடுவார்களாம். இப்பொழுது மறுநாள் வெளியே எறிகிறார்கள். படைத்த சாமியறைக் கதவை இரவு சாத்திப்பூட்டிவிட்டால் மறுநாள் காலையிற்றான் திறப்பார்கள். சிலவீடுகளில் மறுநாள் காலையில் நீர்ச்சோற்றுப் படைப்புப் படைப்பார்கள்.

இரவு கொய்துவைத்த துணிகளை மறுபடியும் எடுத்துதறிக் காயப்போட்டு மடித்துப் பேழைக்குள் வைத்துவிடுவார். ஒவ்வொரு படைப்பின் போதும் உறவினர் புதுத்துணிகளை பேழைத் துணிகளோடு சேர்த்துவைத்து வழிபடுவர். பழைய துணிகள் கிழிபட்டிருந்தால் அவற்றை எடுத்துவிடுவார். பேழையிலிருந்து எடுக்கப்படும் துணிகளை யார் வைத்தாரோ, அவர் எடுத்துக் கொள்வது பெருவழக்கம். பேழையைப் பழையபடி முன்னிருந்தது போல வீட்டுக்குள் கட்டி வைத்துவிடுவர்.

படைப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கள் உண்டு. பெண்ணணங்கு பெண்மேல் ஏறி வந்தாலன்றி நேரடி வினையில் (பூசாரியாகப்) பெண்கள் ஈடுபட மாட்டார். பேழைத் துணிகளைத் தூய்மை செய்யும் பணியும், படிம:அலங்காரமும் எப்பொழுதும் ஆண்களின் பொறுப்பேயாகும். பெண்கள் சமையற் பொறுப்பைத் தவிர ஏதொன்றையும் தொடமாட்டார். இது  ஆணாதிக்கக் குமுகாயம் என்று கொண்டாலுஞ் சரி, அல்லது அணங்கு போன்ற இன்னொரு ஆதனைக் கையாளுவதில் பெண்கள் வலுக்குறைந்தவர்கள் என்று உளவியல் பார்த்துக் கொண்டாலுஞ் சரி, காலகாலமாய் இந்தப் பங்களிப்புகள் மாறவில்லை. முன்னோர் படைப்பு என்பது 7 தலைமுறை அளவிற்குத் தான் என்றால் அதற்கு முன், இன்னும் முந்தைய முன்னோருக்கான படைப்பைச் செய்திருப்பார்கள் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது. (7 தலைமுறைக்கு அப்புறம் நினைவுகள் மங்கும் என்பார்கள் அல்லவா?) முடிவாகச் சொன்னால், ”முன்னோர் படைப்பு என்பது எப்பொழுதும் இருந்திருக்கும். எந்த முன்னோன் என்பதிற்றான் இந்தத் தலைமுறை மழுங்கல் இருக்கிறது”.

ஆனால் மூதாதை என்பவன் நினைவில் அச்சாணியாக இருக்கிறான். சேயோன் பற்றிய நினைவு கூரல் குமுகாயத்தில் இன்னும் ஆழமாய் இருக்கிறது. முருகனைப் பற்றிய நினைவு கூரலில் தைப்பூசம் என்பது மிகப் பெரியதாய்க் கொள்ளப் பெறுகிறது. காவடி, பாற்குடம், அணங்காடல், செடிலாடல், பூக்குழி போன்ற தன்வருத்துப் பழக்கங்களை அடுத்த பதிவிற் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.    


 

Friday, January 03, 2014

அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 4

 அணங்கிய என்பதற்கு “மேலேறிய" என்று பொருள்கூறி, எதன்மேல் எது ஏறியதென்று கேட்டோம். இதற்கு விடைசொல்ல மெய்யியற் புரிதல்கள் சிலவற்றைப் பார்க்கவேண்டும்.
 
இந்திய மெய்யியற் சிந்தனைகளில் உலகாய்தம் தவிர்த்து வேதமறுப்புச் சாங்கியம், ஆசீவிகம் (இதை ஆசீவகம் என்றும் திரித்து எழுதுவர். நானும் எழுதியிருக்கிறேன். ஆசீவிகமென்பது ’அற்றுவிக’ மூலத்திற்கு அருகிருக்கும் சொல்லாகும். அற்றுவிகம் பற்றி ஆசீவிகத் தொடரிற் கூறுவேன்.), செயினம், விதப்பியம் (விஷேஷிசம்; விதத்தல்>விதேதித்தல்>விஷேஷித்தலாய்ச் சங்கதத்திற் திரியும். விதமென்ற பெயர்ச்சொல் இன்னும் தமிழ் வழக்கில் இருப்பதை நினைவுகொள்ளுங்கள்.) ஆகியவையும், வேதநெறியும் ’உயிர், மெய்யைத்’ தனித்தனியாகவே பார்க்கும்.  (புத்தநெறி தனி உயிரை ஒருபக்கம் ஏற்று, இன்னொருபக்கம் ஏற்காது அரையுலகாய்தம் பேசும்.) இப்படித் தனித்தனி பார்க்காது, இரண்டையும் பிணைத்து ”உயிர் தனித்தில்லை; மெய்யின் இயக்கமே உயிர்” என்பது உலகாய்த அடிப்படையாகும். ”மெய் அசையாது அடங்கியொடுங்கும் போது, வாழ்க்கை முடிந்தது. எனவே, இக்கணந்தான் நிலையானது. மக்களே! இன்புறுவீர்” என்பது உலகாய்தரின் முகனைச் செய்தியாகும். [உலகாய்தத்தை வலியுறுத்தும் சங்கப்பாடல்களும் இருக்கின்றன. அவற்றை வேறோரிடத்திற் பார்ப்போம். சமயஞ்சாரா வகையில் (secular) சங்கத் தொகையில் எல்லாச் சிந்தனைகளும் விரவியுள்ளன. ”அது வேதமே, அன்றி வேத மறுப்பே, பேசுகிறது” என்பதெல்லாம் ஒருபக்கமாய்க் கோடியமையும் பார்வைகளாகும்.]
 
உயிரையும் மெய்யையும் தனியே பார்த்து, ”நிலையான உயிர் ஒருபிறவியில் நில்லாது. பலபிறவிகளெடுத்து உலகிலுழன்று பின் வீடுபேறடையும்” என்பது மெய்யியலின் அடுத்த புரிதலாகும். இந்தியாவின் பல்வேறு மெய்யியல்களும் விடாதுபேசும் வீடுபேற்றை ”இனிமேற் பிறவாத நிலை, பிறவிவிடுத்த பேறெ”ன்றே பொருள்கொள்வர். வீடுபேறடைவதிலும் இரு நோக்குகளுண்டு. ”இப்பிறவியிற் செய்கருமம் மறுபிறவியிற் பாதிக்காது, இத்தோடு இறுமெ”ன்பது ஒருவிதம். இதை வினைமறுப்புக் கொள்கையென்பர். இதன் குறிப்பிடத்தக்க பேராளி ஆசீவிகமாகும். ”இப்பிறவியிற் செய்த (நல்வினை, தீவினை எனும்) கருமம் மறுபிறவியிற் பாதிக்கும். நல்வினை செய்தால் மறுபிறவி சிறக்கும். தீவினை செய்தால் மறுபிறவி மேலுங் கடினமாகும்; வினையானது பிறவிகள்தோறும் கணக்கிற் கூடிக்குறைந்து விளவிக் (flow) கொள்ளும் இருப்பாகும். வீடுபேற்றின்போது, வினையிருப்பு முற்றிலும் ’பாழ்’ஆகிப் போக வேண்டும்” என்பது இன்னொருவிதம். (பாழைச் சுழி-zero-என்று பொருள்கொள்வர்.) இதை வினைவிளைப்புக் கொள்கையென்பர் வினைவிளைப்புக் கொள்கையை வேதநெறியும், செயினமும் ஏற்கும்.
 
புத்தநெறி முன்னாற் சொன்னதுபோல் வினைக்கொள்கையை ஏற்றும், ஏற்காதும் நடுநிலைபேசும். சாங்கியமும், விதப்பியமும் இக்கேள்வி பற்றிப் பேசாதிருக்கும். இந்தியத் துணைக்கண்டத்திற் சாங்கியம் ஆகப் பழமையான கொள்கையாகும். அதன் தாக்கம் தெற்கிலும் கூட இருந்திருக்கலாம். சாங்கியம், விதப்பியம் தழுவிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளனவா என்றாய வேண்டும். சாங்கியத்திலும் இறையொப்பு (சேச்சுவர சாங்கியம்), இறைமறுப்பு (நீரீச்சுவர சாங்கியம்) என்று இருவேறு கொள்கைகள் உருவாகின. அவைபற்றிய தெளிவில்லாததால், இன்னும் ஆழங்காற்பட்ட முகன ஆய்வுகள் நடைபெறாதுள்ளன.
 
வினைவிளைப்பு, வினைமறுப்புக் கொள்கையில் இருப்புக் கொள்ளும் இந்திய நெறிகளெல்லாமே உயிரென்பதை ஆதனென்றும் (ஆன்மா = athma), ஆன்மா தனித்தியங்கக் கூடுமென்றும்
நம்பின. இந்நெறிகளில் உயிர்த்தலானது மெய்யினுள் உயிரியங்கும் செய்கையைக் குறிக்கும். ஆவித்தல் என்பது உயிர்த்தலுக்கு நிகரானதும், ஆவி உயிருக்கு நிகரானதும் ஆகும். ”ஓர் உடம்பிற்குள் பொதுவாக ஓருயிர் தான் இயங்கும்; சிலபோது ஈருயிர்கள் உட்புகுந்து ஒன்று இன்னொன்றை ஆட்டுவித்து (ஆட்டுவித்து>ஆட்குவித்து>ஆட்குமித்து>ஆக்குமித்து என்றாகி ’ஆக்ரமித்து’ என்று சங்கதத்துள் திரியும்.) ”ஒன்றின்மேல் இன்னொன்றேறி” ஆண்டான் - அடிமையாய் ஆட்சிப் படுத்தலாம்” என்பது இன்றும் இந்தியாவில் நிலவும் பழந்தொன்மமாகும்.
 
ஓர் ஆதன் இன்னோர் ஆதன் மேலேறியாளும் நிலையைத்தான் வினையாகுபெயராய் அணங்கெனும் பழஞ்சொல்லுணர்த்துகிறது. உலகாய்தம் தவிர மற்ற தெரியனங்களில் (தெரிசனங்களில்) இப்புரிதல் இயல்பாகவுண்டு. (எங்கள் பக்கம் அணங்கிற்கு மாறாய்ச் ”சாமி” எனுஞ் சொல்லே ’ஒன்றின் மேலேறும் ஆவிக்கு’ உரியதாய்ச் சொல்லப்படும். எல்லாம் வல்ல தெய்வத்திற்கும், மேலேறும் ஆவிக்கும் ஒரே சொல்லாவெனில், அது வேண்டுமெனப் பேச்சுவழக்கிற் செய்த குழப்பமோவென ஐயுறவைக்கும். இந்தக் காலத்தில் உணர்வு பூருவமாயன்றித் தெய்வத்தைப் பூதிகமாய்க் (physical) கண்டார் யார், சொல்லுங்கள்? பழங்குடிமக்களின் இனக்குழு வாழ்க்கையில் மேலேறிய ஆவி (=ஆதன்=ஆன்மா), போன்ற கருத்தீடுகள் இயல்பாக நம்பப்படுகின்றன. சங்கப்பாடல்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சங்க இலக்கியத்தின் பெரும்பாலான இடங்களில் அணங்கென வருவது இப்பொருளிலேயே அமைகிறது.
 
அணங்கென்பது உயிரிலாப் பொதிகளின் (bodies) மேலும், மரங்களிலும், விலங்குகளிலும், ஆணோ, பெண்ணோ இன்னொரு மாந்தரின் முழு உடம்பிலும், மாந்தவுடம்பின் சினைகளிலும் எனப் பல்வேறு பூதிக இடங்களில் (physical place) உறைவதாகச் சங்க இலக்கியஞ்சொல்லும். மொத்தத்தில் எங்கெல்லாம் தனியுயிர் மேலேற முடியுமோ, அங்கெல்லாம் அணங்குள்ளதாய்ச் சங்க காலப் பாணரும், புலவரும் உருவகஞ் செய்கிறார். முருகன் ஆதி மூதாதையின் மறுபளிப்பெனில் முருகன் கோட்டத்துள் அணங்காடலும், அணங்காடியும் (சாமியாடியும்) இருப்பதில் என்ன வியப்பு? (சாமியாடியை அருளாடி என்றுஞ் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.) ’அணங்குடை முருகன் கோட்டத்து’ என்பது சங்ககாலத்தின் சரியான புரிதற் தான். இன்றும் ஊர்த் தேர்த்திருவிழாவின் போது (பெரும்பாலும் அது செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால், எங்களூர்ப் பக்கம் தேர்த்திருவிழாவை ஊர்ச்செவ்வாய் என்பர்.) குறிப்பிட்ட தெய்வப் புறப்பாட்டின் போது, தேரோடும் வீதியில் மக்கள் முன்னிலையிற் சாமியாடிகள் வரிசைகட்டித் திருநிலைகொண்டு (சந்நதங்கொண்டு) காட்சியளிப்பார். அது மக்களுக்கு அணங்கை உணர்த்துங் காட்சியல்லாது வேறென்ன? சாமியாடி என்பவரே அணங்கின் முகவர் தான்.
 
ஒருகையில் தண்டம், மறுகையில் சூலம், வேல், அரிவாளென ஏதோவொன்றை வைத்து, முகத்தில் அரிவாள் மீசையோடு உடலெங்கும் பல்வேறு மணிமாலைகளைச் சூடி, தலைப்பாகையும், தோள், கைகளிற் கடகங்களும், கால்களிற் தண்டைகளும், இடுப்பில் தார்ப்பாய்ச்சுமாய்க் காட்சியளிக்கும் சாமியாடிகள் ஓரிரு போதுகளிற் அணங்குவந்து சாமியாடுவதுண்டு. அந்நேரத்திற் சாமியாடியை ஆடியடங்கப் பண்ணும் பூசாரி பல்வேறு கேள்விகள் (தனிப்பட்ட கேள்விகளும் ஊர்ப்பொதுக் கேள்விகளும்) கேட்டுக் குறிசொல்லும் பழக்கமும் நாட்டுப்புறங்களிலுண்டு; சாமியாடி கொடுக்கும் திருநீற்றைத் நெற்றியிற் பூசி அடியார் வாழ்த்துப் பெறுவதுமுண்டு. ‘சாமியாடல்’ நின்றடங்கிப் போவதை மலையேறலென்பர். (குன்றுதோறும் குடியிருப்பவன் குமரன் அல்லவா? அவன் மலையேறாது என்னசெய்வான்?) அணங்காடி முடிந்தபின் சில போதுகளிற் குறிப்பிட்ட சாமியாடி சோர்ந்து மயங்கி விழுந்து விடுவார். ’வருத்தமுறல்’ என்னும் அணங்கற் குறிப்பு இப்படிச் சோர்ந்து நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு மயங்கி விழுதலையே குறிக்கிறது.
 
[அவதாரம் என்ற இருபிறப்பிச் சொல் ”தெய்வம்/மாயோன் கீழிறங்கிப் பூவுலகிற் செயற்பட்ட” கதையைக் காட்டும். சேயோனோ (சிவனோ, முருகனோ) ‘அவதாரஞ்’ செய்யார். மாந்தர் மேலேறுந் திருவிளையாடலே செய்வார்.] 
 
மேலே ஆண்சாமியாடியை வண்ணித்ததால், ஆண்கள்மேல் மட்டும் அணங்கெழுவதாகாது. பெண்கள்மேலும் எழலாம், (பெண்ணணங்கு ஆண்களின் மேல் வருவதையும் பார்த்துள்ளேன். ஆனால் ஆணணங்கு பெண் சாமியாடிகள் மேல் வந்து நான் பார்த்ததில்லை.) அப்பொழுது [சினைமுட்டைச் சுழற்சி அடங்கிய பருவங் கடந்த (menopause)] பெண்பூசாரி அருகிலிருப்பார். ஆண்சாமியாடிக்கு நடப்பது பெண்சாமியாடிக்கும் நடக்கலாம். விழாவிற்கு வந்த ஆண்களும் பெண்களும் சாமியாடியின் கீழ்விழுந்து கும்பிட்டு ஆசிபெறுவதுண்டு.அணங்காடல்/சாமியாடல் என்பதை நாட்டுப்புறங்களில் யாரும் அருவருப்போடு பார்த்ததில்லை; ஆனால் அச்சத்தோடும், அளவுமீறி வியந்தும் பார்த்திருக்கிறார். அணங்கிடம் ஆசி வாங்கவும் பார்த்திருக்கிறார். ஓர் அகராதியில் அணங்கிற்குக் கொடுக்கும் ’வருத்தம், அச்சம், நோய், தெய்வம், தெய்வமகள், தெய்வத்தன்மை, அழகு, அழகியபெண், வடிவு, மையல்நோய், ஆசை, வெறியாட்டு, சிவ ஆற்றல், பேய், பேய்மகள், சண்டாளன், ஆளியின் குட்டி’ என்ற அத்தனை பொருள்களும் போதிற்குத் தக்க, மக்களால் உணரப்படும்.
 
[இன்னுமோர் இடைவிலகல் சொல்லவேண்டும். மகளிரென்ற சொல் (பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவையென்னும்) பருவமடைந்த பெண்களை மட்டுந்தான் குறிப்பிடுகிறதோ என்ற ஐயம் எனக்குண்டு. பருவத்திற்கு வாராச் சிறுமிகளையும் (பேதைகளையும்), பருவங்கடந்த பேரிளம்பெண்களையும் மகளிரென்று ஊர்வழக்கிற் சொல்லக்கேட்டதில்லை. அதேபொழுது, வடக்கே “மகிளா” என்ற சொல் பொதுப்படவே ஆளப்படுகிறது. கலந்தொடா மகளிரென்பது பருவமடைந்த பெண்களை மட்டுமே குறிப்பிடுமெனில் பாடலுக்கு விதப்பான பொருட்பாடு கிடைக்கிறது. சங்க இலக்கியத்தின் மற்ற இடங்களில் மகளிர் என்ற சொல்லிற்கு விதப்பான பொருளுள்ளதா என்றாய்ந்து பார்க்கவேண்டும்.]
 
அணங்கிருக்கும் இடங்களெனக் கருதுவனவற்றில் நாட்டுப்புறத்தார் விதப்பான பழக்கங்களையே பின்பற்றுகிறார். “ஊரெல்லையில் சுடுகாட்டிற்கருகிற் புளியமரத்தில் பேயிருக்கும், மாலை 6 மணிக்குத் தனியே போகாதே! சிறுவராயிருந்தாற் பயந்துவிடுவார். உடலுறுதி படைத்த, பயமில்லாத யாரையாவது உடன்கூட்டிப்போ, தேவைப்படின் சாமியாடியைக் கூடவழைத்துப்போ” என்பது மூடநம்பிக்கையாய்த் தெரியலாம். ஆனால் அப்படித்தான் குமுகப் புரிதலிருக்கிறது. நாட்டுப்புறங்களில் ”அதிற் பேயிருக்கும், இதிற் பேயிருக்கும்” என்று விதவிதமாய் நம்புவர். பகுத்தறிவாளர் அதைச்சாடி அந்நம்பிக்கை தவிர்த்தெறியச் சொல்லுவர். இதை உளவியலார் “இருவேறுபட்டு உடைந்த ஆளுமைநிலை” என்று தருக்கப்படுத்துவர். இங்கே தொன்மத்தை ஏற்பதா, பகுத்தறிவை ஏற்பதா என்ற கேள்விக்குள் போகாது, தொன்ம நடைமுறைகள் பற்றி மட்டுமே எழுத முயல்கிறேன். 
 
தென்பாண்டிநாட்டில் முன்னோரை வழிபடும் வகையிற் ’படைப்பெ’ன்று வீட்டு விழாக்களின்முன் செய்வரென்று முன்னாற் சொன்னேன். இத்தகைப் படைப்புக்கள் ஆண்டுக்கொரு முறையோ, வீட்டிற் கல்யாணம், காட்சியென்று நல்ல விழாக்கள் நடப்பதற்கு முந்தியோ முன்னோரைத் தொழுது, ஆசிகளைப் பெற நினைப்பார்கள். சிலபோதுகளில் யாரோவொரு உறவினர் திடீரென்று வேண்டிக் கேட்டுக்கொண்டதன் பெயரிற் கல்யாணம், காட்சி அண்மிக்காத போதுங்கூட இப்படைப்புக்களைச் செய்வதுண்டு. இது போன்றதொரு நிகழ்வு பல்வேறு குமுகத்தார் இடையிலும் நடப்பதைப் பார்த்தோ, கேள்வியோ பட்டிருக்கிறேன். (குறிப்பாக நகரத்தார், கள்ளர் ஆகிய குமுகங்களில் இது நடப்பதுண்டு.)
 
அடுத்த பகுதியில், சிவகங்கைப் பக்கம் நடக்கும் முன்னோர் படைப்புமுறை, அதில் ஆண்களுக்கும், பெண்களுக்குமான பொறுப்புகள், படைப்பு ஆடைகள், படைப்பில் வழிபடுங் கலங்கள், ஆடை-கலங்களைப் புனிதப்படுத்தும் பாங்கு, அணங்காடலென்று அதன் கூறுகளை விவரிக்க முயல்வேன். முருகன் விழாக்களின் முன்நடக்கும் தன்வருத்தச் செயற்பாடுகள், விழாவின் போது கொண்டு செல்லும் காவடி, பாற்குடம், செடிலாட்டு போன்ற முருகன் கோட்டத்துக் கலங்கள், பூக்குழி போன்ற பழக்கங்கள், முருகன் கோட்டத்துட் கலங்களைச் ’செலுத்தலின்’ மூலம் சடங்கு முடிப்பு எனப் பலவற்றைப் பற்றியுஞ் சொல்ல முயல்வேன். இவ்விவரிப்பில், ”அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரின் இகழ்ந்து நின்றவ்வே” என்ற அடிகளுள் அடங்கிய இனக்குழுப் புரிசைகள் விளங்கிப் போகும்.

அன்புடன்,
இராம.கி
 

அடுத்துவரும் பகுதியை எழுதி முடிப்பதற்குப் பொழுது கூடத் தேவைப்படுகிறது. எனவே நாளைக்கே வெளிவராது. என் சுணக்கத்திற்கு மன்னியுங்கள். - இராம.கி.