Tuesday, January 04, 2011

கண்ணெழுத்தும் வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 2

"இவ்விரண்டையும் குறிக்க ஏதேனும் பெயர்கள் அக் காலத்தில் இருந்திருக்க வேண்டுமே?" என்று தேடிப் பார்த்தால் கி.மு.முதல் நூற்றாண்டில் உருவானதாய்ச் சொல்லப்படும் “சமவயங்க சுத்த” என்ற செயின நூலுக்கு முன்னால் இதுவரை எந்த எழுத்துக்களின் பெயரும் கிட்டவில்லை. ”சமவயங்க சுத்த”த்தில் 18 எழுத்துப் பெயர்கள் சொல்லப் பட்டிருக்கும். பெருமி (>பம்மி), கரோத்தி (<கரோஷ்டி), யவனாலி, தமிழி (>தாமிளி) போன்ற எழுத்துப் பெயர்களை அதிலிருந்துதான் நாம் அறிந்தோம். கி.பி.500/600 களில் எழுந்த புத்தமத நூலான லலித விஸ்தாரத்தில் 18 எழுத்துக்கள் 64 வகையாய் மேலுங் கூடியிருக்கும். தமிழி என்ற சொல் இந்நூலில் இன்னுந் திரிந்து த்ராவிடி என்று ஆகியிருக்கும்.

தமிழி/த்ராவிடி என்பது நம்மெழுத்திற்கு மற்றோர் கொடுத்த இயல்பான பெயராகும். (தமிழர் எழுத்து.) ”நம்மவரே நம்மெழுத்திற்குக் கொடுத்த பெயர் என்ன? அப்படியொன்று உண்டா?” என்பது அடுத்த கேள்வி. சமவயங்க சுத்த-விற்கும், லலித விஸ்தாரத்திற்கும் இடைப்பட்டு தமிழ் இலக்கியச் சான்றாய் நாம் ஓர்ந்து பார்க்கக் கூடியது சிலப்பதிகாரத்தில் மூன்றிடங்களில் கண்ணெழுத்து பற்றிவரும் குறிப்புகள் மட்டும் தான். அவற்றை ஆழ்ந்து பார்ப்பது நல்லது.

”வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி”

என்று, இந்திரவிழவூர் எடுத்த காதை 111-112 ஆம் வரிகளில் வரும் குறிப்பு கண்ணெழுத்து என்ற பெயரை நமக்கு முதன்முதலில் அறிமுகஞ் செய்யும். இதை, “கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்” என்ற கால்கோட்காதை 136 ஆம் வரியும்,

“தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து
கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன்
மண்ணுடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்தாங்(கு)”

என்ற கால்கோட்காதை 169-171 ஆம் வரிகளும் உறுதிப் படுத்தும். இவற்றைப் படித்த நமக்கு, “அது என்ன கண்ணெழுத்து? பண்டங்களின் பொதிப்பட்டியலைக் (packing list of goods) ஏன் கண்ணெழுத்தில் எழுதவேண்டும்? புள்ளியெழுத்தென்று நாம் புரிந்த தமிழியெழுத்தும் கண்ணெழுத்தும் ஒன்றா? கண்ணெழுத்துப் போக, வேறெழுத்து எழுதுவதற்கு உகந்ததாய் தமிழகத்தில் இருந்ததா? கண் என்றால் என்ன பொருள்? ” என்ற கேள்விகள் இயல்பாக எழும். சிலம்பின் அரும்பதவுரையாசிரியர் கண் என்ற சொல்லிற்கு இடம் என்றே பொருள் சொல்வார். அடியார்க்கு நல்லாரும் அதற்குமேல் பொருள் சொல்லார். பண்டங்களின் பொதிப்பட்டியல் குறித்த விவரணை அங்கே அடுத்து அவர்கள் உரைகளில் வந்துவிடும். மு. இராகவ ஐயங்கார் மட்டும் கண்ணெழுத்து என்பதற்கு “pictorial writing" என்று வேறொரு பொதுப்பொருள் சொல்லுவார். [காண்க. Pre-Pallavan Tamil Index - N.Subrahmanian, page 211, Univ. of Madras, 1990.] ”அது ஏன் படவெழுத்து? அக் காரணம் சரிதானா?” - என்பவை இன்னும் எழும் கேள்விகள்.

தமிழில் இடம் என்பது இல்>இள்>இடு>இடம் என்ற வளர்ச்சியில் உருவாகும். இல்லுதல் என்னும் வினைச்சொல் குத்துதற் பொருளையுணர்த்தும். அதாவது இல்லுதல் என்பது அடிப்படையிற் துளைப்பொருளை உணர்த்தும். (இல்லுதலின் நீட்சிதான் தமிழில் to be என்று பொருள்படும் இருத்தலாகும். இல்>இர்>இரு>இருத்தல்) குல்>குள்>கள்>கண் என்பதும் துளைப்பொருளை உணர்த்தும். புல்>புள்>புள்ளி, புல்>புள்>பொள்>பொட்டு என்பதும் கூடத் துளைப்பொருளை உணர்த்துவன தான்.

நெற்றிக் கண்ணை உணர்த்தும் வகையில் இன்றுங் கூடச் சிவநெறியாளர் நெற்றிப் பொட்டு இடுகிறார் அல்லவா? கலக்க நெய்த துணியில் ஒவ்வொரு முடிச்சு/துளையிலும் நூலாற் பின்னிப் பெண்கள் பின்னல் வேலை செய்கிறார்களே, பார்த்திருக்கிறீர்களா? அதைக் கண்(ணித்)துணி என்பார்கள். இங்கு கண் என்பது புள்ளியையே குறிக்கிறது. தேங்காய்க் குடுமிக்கருகில் மூன்று பள்ளங்கள் இருக்கின்றனவே அவற்றையும் கண்கள் என்றுதானே சொல்லுகிறோம்? தேங்காய்ச் சிரட்டையில் கண்ணுள்ள பகுதி கண்ணஞ் சிரட்டை என்று சொல்லப்படுகிறதே? நிலத்தில் நீரூற்று எழும் புள்ளி, ஊற்றுக்கண் என்று சொல்லப்படுகிறதே? முலைக் காம்பின் நடுத்துளை முலைக்கண் எனப்படுகிறதே? பகடைக் காயின் பக்கங்களில், எண்களைக் குறிக்கப் போட்டிருக்கும் புள்ளிகள், கண்கள் என்றுதானே சொல்லப்படுகின்றன? இடியப்பக் குழலின் துளைகள் அடைந்தால், குழலின் கண் அடைந்து போயிற்று என்கிறோமே? புண்கண், வலைக்கண், சல்லடைக்கண், வித்தின் முளைக்கண் என எங்கெல்லாம் துளை, புள்ளி இருக்கிறதோ அங்கெல்லாம் கண்ணென்று சொல்கிறோம் அல்லவா?

இந்தச் சிந்தனையில் ஓர்ந்து பார்த்தால் கண்ணெழுத்து என்பது பெரும்பாலும் புள்ளியெழுத்தாய் இருக்கவே வாய்ப்புண்டு என்பது புரியும். ”சிலம்பின் காலம்” என்ற என் கட்டுரையில் ”சிலம்புக் காப்பியம் எழுந்தது பெரும்பாலும் கி.மு.80-75 ஆய் இருக்கும்” என்று பல்வேறு ஏரணங்களால் முடிவு செய்திருப்பேன். அதன் சம காலத்தில் முன்சொன்ன வடபுல எழுத்துத் தீர்வும், தென்புல எழுத்துத் தீர்வும், இந்தத் தீர்வுகளுக்கு முந்தைய உயிர்மெய் அகர / தனிமெய்க் குழப்பம் கொண்ட எழுத்தும் இந்தியத் துணைக்கண்டத்தில் ஒருங்கிருந்தன என்ற உண்மையையும் இங்கு கணக்கிற் கொண்டால், புகாரின் ஏற்றுமதிப் பண்டங்கள் குழப்பமில்லாது கண்ணெழுத்து முறையில் (புள்ளியெழுத்து முறையில்) பட்டியலிட்டு இலச்சினைப் பட்டிருக்கலாம் என்பது நமக்கு விளங்கும்.

பண்டங்களின் பொதிப்பட்டியல் என்பது இருவேறு நாடுகள், அரசுகள், ஆட்கள் ஆகியோரிடம் பரிமாறிக் கொல்ளும் பட்டியல் என்பதை ஞாவகப்படுத்திக் கொள்ள வேண்டும். இதிலுள்ள பண்டவிவரம் எக் குழப்பமும் இல்லாது சட்டத்திற்கு உட்பட்டுச் (legally binding), சொல்லப்படவேண்டும். அப்படியானால் குழப்பமிலா எழுத்து முறையில் அது இருப்பது கட்டாயம் ஆனதாகும். மொழிகளும் எழுத்துமுறைகளும் தோன்றிவிட்ட காலத்தில் அது படவெழுத்தாய் இருக்க முடியாது. ஒரு மொழியின் தனித்த எழுத்து முறையாகத் தான் இருக்கமுடியும். இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.முதல் நூற்றாண்டு அளவில் குழப்பமில்லாதன என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எழுத்து முறைகள் இரண்டே இரண்டு தான். ஒன்று வடபுல முறை. இன்னொன்று தென்புல முறை. ஏற்றுக் கொள்ளப்பட்ட இவ்விரண்டில், தென்புல முறை, புள்ளி பழகியதால், கண் என்ற தமிழ்ச்சொல் புள்ளியைக் குறிப்பதால், கண்ணெழுத்து என்பது புள்ளி பழகும் தென்புலத்துத் தமிழி எழுத்தைத்தான் குறிப்பிட்டிருக்கும் என்று ஏரணத்தின் வழி முடிவிற்கு வருகிறோம்.

வேறு எந்த வகையாலும் சிலம்பில் மூன்று இடங்களிற் குறிப்பிடும் கண்ணெழுத்து என்ற சொல்லாட்சியைப் புரிந்து கொள்ளமுடியாது. அந்த மூவிடங்கள் தாம் கி.மு. முதல் நூற்றாண்டில் புள்ளியெழுத்து நம்மூரில் உறுதியாய்ப் புழங்கியதற்கான தமிழாவணச் சான்றுகள். [ஆனால் இதுவரை கிடைத்த தொல்லியற் சான்றுகளில் முதன்முதல் புள்ளி பழகியதாய், கி.பி.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவா கன்னன் வசிட்டிபுத்ரன் புலுமாவியின் முகம் பதித்த முத்திரைக் காசில் இருந்த பெயரில் தான் வசிட்டி என்பதற்கிடையில் புள்ளியிட்டுக் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது.] இனிப் பிற்காலத்திய சிவஞான சித்தியாரில் (அளவை.1.மறை) பகுதியில் “சோமே லிருந்தொரு கோறாவெனிற்...... கண்ணழுத்தங் கோல் கொடுத்தலும்” என்ற வரி, எழுத்தாணி போலிருக்கும் கண்ணெழுத்தங் கோலைக் குறிப்பதாகவே நாம் எண்ண வேண்டியிருக்கிறது.

இனிக் கள்>கண்>கண்ணு>கணக்கு என்னும் வளர்ச்சியில் எழுத்துப் பொருளையுணர்த்தும். (கணக்கு என்ற சொல்லை எண்களோடு தொடர்புறுத்தும் பொருளும் பலகாலம் பயில்வது தான். ஆனால் இரண்டும் இருவேறு வளர்ச்சிகள். இன்றைய வழக்கில், கணக்கு என்ற சொல் எழுத்தோடு தொடர்புறுத்துவதைக் காட்டிலும் எண்ணோடு தொடர்புறுத்துவதாகவே இருக்கிறது.)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

என்ற குறள் 393 இலும், “எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்” என்ற கொன்றை வேந்தன் வரிகளிலும் எண்ணும் எழுத்தும் கண்ணோடு சேர்த்துச் சொல்லப்பெறும் பாங்கைப் பார்த்தால், கண் எனும் பார்வைக் கருவியோடு மட்டும் பொருத்தாது, கண் எனும் புள்ளிப் பொருளோடும் சேர்த்து உரைக்கவொண்ணுமோ? - என்று எண்ண வேண்டியிருக்கிறது.

இனி, நெடுங்கணக்கு, குறுங்கணக்கு என்று சிறார்களின் இளங்கல்வியில் எழுத்துவரிசையை அறிவிக்கும் வழக்கத்தைப் பார்ப்போம். எழுத்தாணியால் எழுதுபொருளில் இழுத்தது, எழுத்தென்பார் பாவாணர். முதலில் எழுந்த தமிழி எழுத்துக்கள் பெரும்பாலும் நேர்கோடுகளாகி, வளைவுகள் குறைந்திருந்தன. பின்னால் ஓலையில் எழுதி வளைவுகள் கூடிய காலத்தில் கணக்கு என்ற சொல்லிற்குத் துளைப்பொருளோடு வளைவுப் பொருளும் வந்து சேர்ந்தது போலும். (இது கி.மு.முதலிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே இது நடந்திருக்க வேண்டும்.)

குன்னிப் போன எழுத்துக்கள், கூனிப் போய், குணகிப் போய் குணங்கிய தோற்றம் காட்டியதால் குணக்கு>கணக்கு என்ற பொருளும் எழுத்திற்குச் சரியென்று கொள்ளப் பெற்றது. நெடுங்கணக்கு, குறுங்கணக்கு என்ற கூட்டுச்சொற்களில் வரும் கணக்கு எழுத்தைக் குறித்தது இந்தப் பொருளிற்தான். கணக்குச் (=எழுத்துச்) சொல்லிக் கொடுத்த ஆசிரியர் கணக்காயரானார். (இன்று கணக்காயர் என்பார் நம் கணக்குகளைச் சரிபார்க்கும் auditor ஆவார்.) கணக்காயர் மகனார் நக்கீரர் என்பவர் வேறு யாரும் இல்லை “திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் மகன் நக்கீரர்” என்பவர் தான். கணக்கன் என்றாலேயே பழந்தமிழில் ஆசிரியப் பொருளுமுண்டு. அரண்மனையின் திருமுகமும் எழுதி, அங்குள்ள எண்மானக் கணக்கையும் பார்ப்பவர் அரண்மனைக் கணக்கரானார். இருபதாம் நூற்றாண்டு முன்பாதி வரை செல்வந்தர் வீட்டுக் கணக்குப் பிள்ளை, வெறுமே செல்வந்தர் வீட்டில் எண்மானம் பார்ப்பவர் மட்டும் அல்லர். அவர் செல்வந்தர் வீட்டின் எல்லா எழுத்து வேலைகளையும் பார்ப்பவர்.

ஆகக் கண்ணெழுத்து (புள்ளியெழுத்து) தொடங்கிய சில காலங்களிலேயே கணக்கெழுத்தாயும் (வளைவெழுத்தாயும்) புரிந்து கொள்ளப்பட்டது. இது சங்க காலத்திற் தொடங்கியது நக்கீரர் தந்தை பேரைப் பார்த்தாலே புரியும். வெறுமே கண்ணெழுத்து என்று புரிந்து கொள்ளப்பட்டது சங்ககாலத்திற்கும் முற்பட்ட காலமாய் இருக்கவேண்டும். சங்க காலம் முடிந்து களப்ரர் காலம் வரை ஓரளவு கண்ணெழுத்தே தொடர்ந்திருக்கிறது. அதில் வளைவுகள் குறைந்து நேர்கோடுகளே மிகுந்து இருந்திருக்கின்றன.

இனி கி.பி. 4, 5 ஆம் நூற்றாண்டுகளில் வளைவுகள் கூடக் கூட, குணக்கு வட்டமாகி, கணக்கெழுத்து வட்டெழுத்தாகியிருக்கிறது. இதற்கான சரியான சான்றாய் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம் பூலாங்குறிச்சிக் கல்வெட்டைச் சொல்லவேண்டும். இது களப்ரர் காலத்தைச் சேர்ந்தது. [களப்ரர் என்பவர் யார்? - என்பது இன்னும் தெளிவான விடை தெரியாத கேள்வி. ஆனால் ஓரளவிற்கு ஊகிக்க முடியும்.]

வட்டெழுத்தின் இயலுமை பற்றிய செய்தியை இங்கு இடைவிலகாய்ப் பார்ப்போம். தமிழ், கிரந்தம், மலையாளம் போன்றவை பெரும்பாலும் கடிகைச் சுற்றில் (clockwise) எழுதுப்படுபவை (தமிழில் ட, ப, ம, ய, ழ ஆகிய ஐந்து வரிசை எழுத்துக்களே எதிர் கடிகைச்சுற்றில் (anti-clockwise) எழுதப் படுகின்றன. கிரந்தத்திலும், அதன் திரிவான மலையாளத்திலும் 9 வரிசை எழுத்துக்கள் மட்டுமே எதிர்கடிகைச்சுற்றில் எழுதப்படுகின்றன.) நம்மூரைச் சேர்ந்த பழைய வட்டெழுத்துக்களும், இற்றைத் தெலுங்கெழுத்துக்களும், கன்னட எழுத்துக்களும் இந்தப் பழக்கத்திற்கு மாறானவை. இவை பெரும்பாலும் எதிர்க்கடிகைச்சுற்றில் எழுதப்படுகின்றன. பொதுவாக எழுத்துவரிகள் இடவலத்திலும், எழுத்துக்கள் கடிகைச் சுற்றிலும் எழுதும் போது உருவாகும் எழுத்துக்கள் நேர்கோடுகளும், கோணங்களும் அதிகமாய்ப் பெற்றிருக்கும். இதற்கு மாறாய் எழுத்துவரிகள் இடவலத்திலும், எழுத்துக்கள் எதிர்க்கடிகைச் சுற்றிலும் எழுதும்போது, எழுத்துக்கள் கூடுதல் வட்ட வடிவம் பெற்றிருக்கும். இது எழுதுவோரில் பெரும்பாலோர்க்கு வலதுகைப் பழக்கம் உள்ளதால் ஏற்படும் நிலையாகும்.[காண்க: பண்டைத் தமிழ் எழுத்துக்கள். தி.நா. சுப்பிரமணியன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 1996, பக்.7]

சாதவா கன்னர் சிதைவிற்குப் பின் நான்கு அரசுகள் தக்கணத்தில் எழுந்தது பற்றி மேலே சுட்டினோம் அல்லவா? அதில் வரும் ஆப்ரர் கதை சற்று நீளமானது. தென் மராட்டியத்திலும் வட கன்னடத்திலும் ஆண்ட ஆப்ரர்கள், அப்ரர் என்றுஞ் சொல்லப் பட்டிருக்கிறார். தக்கணம், தமிழகம் போன்றவற்றில் எழுத்தின் தொடக்க காலத்தில் இருந்த அகர, ஆகாரக் குழப்பத்தில் நெடில்/குறில் மாறிப் பலுக்கப்படுவது இயற்கையே. சாத வாகனருக்குப் பிறகு 67 ஆண்டுகள் 10 ஆப்ரர்கள் படித்தானத்தில் ஆண்டதாய் இந்து சமயப் புராணங்கள் கூறும். நாசிக்கில் எழுந்த கல்வெட்டு ஒன்று சிவதத்தனின் மகனும் மாதரிபுத்த ஈசுவரசேன என்ற பெயர் பெற்றவனுமான அரசனைக் குறிப்பிடும். நாகார்ச்சுன கொண்டாவில் எழுந்த கல்வெட்டொன்று வாசுசேனன் என்ற அரசனின் 30 ஆண்டு கால ஆட்சி பற்றிக் குறிப்பிடும்.

ஆப்ரர்களில் ஒரு பகுதியினர் சேதியரோடு பொருதிக் கலந்த பின்னால், கன்னடப் பகுதி வழியாகத் தமிழகத்தில் நுழைந்திருக்கிறார்கள். இவர் நுழைந்த காலம் பெரும்பாலும் கி.பி. 270 - 290 ஆக இருக்க வேண்டும். பெரும்பாலும் ஆப்ரரின் ஒருபகுதியானவர் தான் கள ஆப்ரர்>களப்ரர், களப்பாளர், கலியரசர் என்றெல்லாம் தமிழாவணங்களிற் பேசப் பட்டவராய் இருக்க வழியுண்டு. (பாண்டியரின் வேள்விக்குடிச் செப்பேட்டில் “அளவரிய ஆதிராஜரை யகல நீக்கி யகலிடத்தைக் களப்ரனென்னும் கலியரைசன் கைக்கொண்டதனை யிறக்கிய பின்” என்று பாண்டியன் கடுங்கோனைப் பற்றிய வரிகள் வரும். களப்ரர் பற்றி வேறொரு கட்டுரையில் விரிவாகப் பேசுவேன். இங்கு பேசினால் சொல்லவந்தது விலகிப் போகும்.)

களப்ரர் என்ற சொல்லை கள் + அப்ரர் என்று பிரித்தால் கருப்பு அப்ரர் என்று பொருள் கொள்ளலாம். கருப்பு என்பது அவர் நிறமா, அன்றிப் பூசிக் கொண்ட இனக்குழு அடையாள நிறமா என்பது இன்னொரு கேள்வி. சாதவா கன்னருக்கு கருப்பு நிறம் இனக்குழு அடையாளமாகியதைச் “சிலம்பின் காலம்” என்ற என் கட்டுரையிற் பேசியிருப்பேன். [சேரருக்கும் சந்தனமும், பாண்டியருக்குச் சாம்பலும், சோழருக்கு மஞ்சள்/குங்குமமும் இனக்குழு அடையாளமாய் இருந்ததை இங்கு எண்னிக் கொள்ளுங்கள்.] களப்ரர் என்ற குழுவினர் சேர, சோழ, பாண்டியரை வீழ்த்திக் கிட்டத்தட்ட முழுத் தமிழகத்தையும் கைப்பற்றி 250, 300 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார், அந்தக் காலத்திற் கிடைத்த ஒரு சில தனிப்பாடல்களும், சங்க காலத்திற்கும், பல்லவர்/பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட கால வெளியும் இச் செய்தியைத் தெரிவிக்கின்றன. இந்த அரசர்களின் குலப்பெயராய் ஆயர்> ஆய்ச்சர்> ஆய்ச்சுதர்> அச்சுதர் என்ற பெயர் விளங்கியதும் நமக்குக் கிடைத்திருக்கிறது. (ஆய்ச்சி = இடைக்குல மடந்தை. ஆய்ச்சன் = இடைக்குல மாந்தன்.)

கி.பி. 220 க்குப் பின் எழுந்த அரசுப் போட்டிகள், குமுகாயக் குழப்பங்கள், பொருளியற் தடுமாற்றங்கள் எல்லாம் தமிழி/பெருமி ஆகிய எழுத்துக்களின் நிலைப்பைக் குலைத்துத் திரிவை உண்டாக்கியிருக்கின்றன. தமிழியில் இருந்து இற்றைக்காலத் தமிழெழுத்தும், வட்டெழுத்தும் உருவாகியிருக்கின்றன. சாதவா கன்னர் காலத்துப் பெருமியில் இருந்து அடுக்குக் கட்டெழுத்தான கிரந்தம் தென்புலத்திலும், நாகரி வடபுலத்திலும் இருவேறு வளர்ச்சியாய்த் தழைத்திருக்கின்றன.

கன்னட தேசம் வழியாக முதலில் கள ஆப்ரரும், பின் இராயல சீமை வழியாகப் பல்லவரும் தமிழகத்துள் நுழைந்து ஆட்சி செய்யாதிருந்தால் கிரந்தம் இங்கு கலந்திருக்காது.

கிரந்தம், நாகரி என்ற சொற்களின் சொற்பிறப்பை இங்கு சொல்லுவது பொருத்தமாய் இருக்கும். முதலிற் கிரந்தத்தைப் பார்ப்போம். கீரப்பட்ட எழுத்தே கிரந்தம் என்றே ஒரு காலத்தில் நான் எண்ணியிருந்தேன். பின்னால் என் ஆய்வு ஆழமானதன் விளைவால், குறிப்பாக எழுத்துமுறைகள் பற்றிய ஆய்வுக்குப் பின்னர், அந்தப் புரிதல் சரியில்லை என்ற கருத்திற்கு வந்தேன். புள்ளியெழுத்து, அடுக்குக் கட்டெழுத்து ஆகிய இருவேறு முறைகளை ஆழப் புரிந்து கொண்ட பிறகு, அடுக்கிக் கட்டப்பட்ட எழுத்தைக் கந்தெழுத்து என்று சொல்லுவதிற் தவறில்லை என்று உணர்ந்தேன். கந்து = கட்டுத் தறி. கோல். தூண், பற்றுக் கோடு, தும்பு. நூல். கந்தழி = பற்றுக்கோடில்லாதது, நெருப்பு. கந்தன் = தூணில் உள்ள இறைவன், முருகன், கந்திற் பாவை = தூணில் உள்ள தெய்வம், கள்>கந்து>கந்தம் = தொகுதி aggregate. கந்துகம் = நூற் பந்து, கந்து களம் = நெல்லும் பதரும் கலந்த களம். கந்தர கோளம் = எல்லாம் கலந்து குழம்பிக் கிடக்கும் கோளம். கந்து வட்டி = முன்னேயே பிடித்துக் கொள்ளப்படும் அதிக வட்டி. இத்தனை சொற்களுக்கும் பொதுவாய்க் கந்துதல் என்ற வினைச்சொல் கட்டுதற் பொருளில் இருந்திருக்க வேண்டும்.

கந்தெழுத்து என்ற சொல்லே வடமொழிப் பழக்கத்தில் ரகரத்தை உள்நுழைத்துக் க்ரந்தெழுத்து என்ற சொற்திரிவை ஆக்கிக் கொண்டது என்ற புரிதலுக்கு முடிவில் வந்தேன். கந்து என்ற சொல்லிற்கு நூல் என்ற பொருளிருப்பதாலும், அந்தக் காலத்து ஓலைச் சுவடிகள் நூலால் கட்டப்பட்டதாலும், நூல் என்ற சொல், சுவடிகளுக்கு ஆகுபெயராய் எழுந்தது. கிரந்தம் என்ற சொல்லும் பொத்தகம், நூல் என்ற பொருளைப் பெற்றது. சொல்லாய்வர் கு. அரசேந்திரனும் அவருடைய ”கல்” என்ற நூற்தொகுதியில் க்ரந்தம் என்ற சொல்லிற்குப் பொத்தகம் என்ற பொருளை நிறுவுவார். நான் புரிந்த வரையில் பொத்தகம் என்ற பொருள் முதற் பொருளல்ல. அது வழிப்பொருளே. கந்தம் = கட்டப்பட்டது என்பதே அதன் அடிப்பொருளாகும்.

அடுத்து நகரி/நாகரி என்ற சொல்லைப் பார்ப்போம். இதை நகரம் (= town) என்ற சொல்லோடு பொருத்தி ”நகரத்தில் எழுந்த எழுத்து” என்று மோனியர் வில்லியம்சு அகரமுதலி சொற்பொருட் காரணம் சொல்லும். அது என்ன நகரத்தில் எழுந்த எழுத்து? பல்வேறு இரிடிகளும், முனிவர்களும், அறிஞர்களும் நகரத்திலா இருந்தார்கள்? அன்றி வணிகர்கள் உருவாக்கிய எழுத்தா என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது. ஆதிகால எழுத்துக்கள் கல்வெட்டுக்களிலேயே இருந்திருக்கின்றன என்ற பட்டறிவைப் பார்க்கும் போது, அவை நாட்டுப் புறத்திலேயே பெரும்பாலும் இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தான் நகரத்தையொட்டி அமைந்தன - என்ற புரிதல் நமக்குக் கிட்டும். நகரத்தைக் காரணங் காட்டிப் பொருள் சொல்லுவதைக் காட்டிலும் நகரி/நாகரி என்பதை வடமொழியினர் கடன் கொண்ட சொல்லாக்கி, தமிழ்மூலம் பார்ப்பது சிறப்பென்று தோன்றுகிறது. [தமிழ்மேல் உள்ள விருப்பினால் நான் இதைச் சொல்லவில்லை. வடமொழிச் சொற்களைக் கடன்வாங்கிய சொல்லாய் ஏனோ பலரும் பார்க்க மாட்டேம் என்கிறார்கள். அது ஏதோ கடனே வாங்காத மொழி போல எண்ணிக் கொண்டு விடுகிறார்கள்.]

எழுத்து வளர்ந்த முறையில் வடபுல அடுக்குக் கட்டுமுறை, தெற்குப் புள்ளிமுறை ஆகிய இரண்டுதான் தெளிவான குழப்பமில்லாத எழுத்து முறைகளாய் அமைந்தன என்று முன்னாற் பார்த்தோம். நகுதல் என்ற தமிழ் வினைச்சொல்லிற்கு ”விளங்குதல், விளங்கத் தோன்றுதல்” என்ற பொருட்பாடுகள் உண்டு. நகுதலின் பெயர்ச்சொல் நகு>நாகு என்றமைந்து விளக்கம், தெளிவு என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். நகரம் என்ற தமிழ்ச்சொல்லிற்கும் கூட ஒளி விளங்கும், பொலிவுள்ள, இடம் (bright place) என்றே பொருள் உண்டு.

தமிழில் அரி என்ற சொல் (அரிச் சுவடி = எழுத்துச் சுவடி என்ற கூட்டுச் சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள்) எழுத்தையே உணர்த்தும். ஒரு காலத்தில் செயினரின் தொடர்பால் தமிழ்நாட்டின் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் “அரி ஓம் நமோத்து சிந்தம்” என்று சொல்லித்தான் பள்ளிப் பாடம் தொடங்குவார்கள். [என் பள்ளிப் பாடமும் அப்படித்தான் தொடங்கியது.] இது போன்ற பண்பாட்டு மிச்சங்களை நினைவு கூர்ந்தால் நாகு+அரி = நாகரி = விளக்க எழுத்து, தெளிவெழுத்து என்ற கருத்துப் புரியும். குழப்பமில்லாத எழுத்தை நாகரி என்று சொல்லுவதிற் தவறென்ன? இதை ஆரியர் என்னும் ‘தேவர்’ வடபுலத்திற் பயன்படுத்திய காரணத்தால் தேவ நாகரி = தேவர்களின் தெளிவெழுத்து என்றாயிற்று (பார்ப்பனரின் ஒரு பகுதியினருக்கும், கோயிலுக்கும் கொடுத்த அறக்கொடைகளைத் தேவ தானம், பிரம தாயம் என்று பல்லவர் காலத்திற் சொன்னதை இங்கு நினைவிற் கொள்ளலாம்.) கன்னடப் பகுதியில் நந்தி நாகரி என்றொரு எழுத்து இருந்தது. (நாகரி என்றாலே போதும்; நாகரி எழுத்து என்பது கூறியது கூறல்.)

வடபுலத்து மொழிகளை எழுத நாகரியும், தமிழ் தவிர்த்த தென்புலத்து மொழிகளை எழுத கிரந்தமும் இந்தியத் துணைக்கண்டத்திற் போல்மங்களாயின. பல்வேறு இந்திய எழுத்துக்களும் இப்படித்தான் எழுந்தன. (தென்கிழக்கு ஆசியா எழுத்துக்களும் பல்லவர் தாக்கத்தால் கிரந்த எழுத்தையே தம் அடிப்படையாய்க் கொண்டன.) காட்டாக, மலையாளத்தார் தங்கள் மொழியில் வடமொழிச் சொற்களை அதிகமாகக் கலந்து மணிப்பவளமாகச் செய்த பின்னர், கிரந்தவெழுத்தைச் சிறிது மாற்றி “ஆர்ய எழுத்து” என்று பெயரிட்டு தங்கள் மொழிக்கு வாய்ப்பாய் அமைத்துக் கொண்டார்கள். துளு மொழியின் எழுத்தும் கிரந்தத்தில் இருந்து உண்டானதே. தெலுங்கு, கன்னட எழுத்துக்களின் தலைக்கட்டை எடுத்துவிட்டுப் பார்த்தால், அவற்றிலும் கிரந்தத்தின் சாயல் உள்ளிருப்பது புரியும். விசயநகர மன்னர்கள் காலத்திலும், அவர்களுக்குப் பின்னால் மராட்டியர் காலத்திலும் தான் நாகரி எழுத்து தக்கணத்தில் உள்நுழைந்து கிரந்தவெழுத்தை கொஞ்சங் கொஞ்சமாய் அகற்றியது.

கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் பெருமியில் இருந்து உருவாகிய கிரந்தம், தமிழியில் இருந்து உருவாகிய இற்றைத் தமிழெழுத்து, பண்டை வட்டெழுத்து ஆகியவற்றிடையே ஒரு தொடர்ச்சி இருந்தது. [இற்றைத் தமிழெழுத்து கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட முழுவுருவம் பெற்றுவிட்டது. கி.பி.11 ஆம் நூற்றாண்டில் இருந்த வடிவங்களுக்கும் இப்பொழுதைய வடிவங்களுக்கும் நம்மால் பெரிய வேறுபாடு காணமுடியாது.] கிரந்தமும், இற்றைத் தமிழெழுத்தும் அரசவை, அரசாணை எழுத்துக்களாய் அமைந்திருந்தன. [கல்வெட்டு, செப்பேடு போன்றவற்றில் வளைவுகளைக் குறைத்து, நேர்கோடுகளை மிகுதியாக அமைக்கமுடியும். பல்லவ கிரந்தத்தின் இரட்டைக் கட்ட நேர்கோட்டழகை இங்கு ஓர்ந்து பார்க்கலாம்.] வட்டெழுத்தோ, மக்கள் பெரிதும் புழங்கும் எழுத்தாய் கி.பி. 970 வரை இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில், மக்கள் பயன்பாட்டில், ஓலை-எழுத்தாணியின் தாக்கத்தில், வட்ட வளைவுகள் கூடிப் போய், வட்ட எழுத்துக்களின் வேறுபாடுகள் காணுவது குறைந்து, வட்டெழுத்துப் புழங்குவதிற் சிக்கலாகிப் போனது.

கிட்டத்தட்ட கி.பி. 1000 க்கு அருகில் வட தமிழ்நாட்டில் வட்டெழுத்து அருகிவிட்டது. அதற்கு அப்புறம் இற்றைப் போற் தோற்றமளிக்கும் தமிழெழுத்துக்கள் தான் எங்கும் காட்சியளித்தன. பல்லவரின் பள்ளங்கோவில் செப்பேடுகள் தான் (சிம்மவர்மன் III கி.பி.540-550) முதன் முதலில் இற்றைத் தமிழெழுத்து வடிவைப் பயன்படுத்தியதற்குச் சான்றாகும். (நமக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் செப்பேட்டுப் படி 7 ஆம் நூற்றாண்டில் மீண்டும் எழுதப்பட்ட படி என்ற கூற்றுமுண்டு.) கி.பி 10 ஆம் நூற்றாண்டில் வந்த பேரரசுச் சோழன் இராசராசனின் பெருமுனைப்பால் வட்டெழுத்தைப் பாண்டிநாட்டுப் புழக்கத்திலிருந்து விலக்கி இற்றைத் தமிழெழுத்தே தமிழகமெங்கும் பெரிதும் புழங்கத் தொடங்கிற்று. கி.பி.12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் வட்டெழுத்து முற்றிலும் மறைந்து போனது. புரியா வட்டம் என்றே கி.பி.1400 களில் பாண்டிநாட்டிற் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். [திருக்குற்றால நாதர் கோயிலில் பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு இந்தச் செய்தியைச் சொல்கிறது.]

இனி வட்டெழுத்தில் எழுதப்பட்ட பூலாங்குறிச்சிக் கல்வெட்டிற்கு வருவோம். இந்தக் கல்வெட்டின் காலம் 192 என்று அதிற் சொல்லப்பட்டிருக்கும். இது அரசரின் ஆட்சிக் காலமாய் ஆக முடியாது. இந்த எண் ஏதோவொரு முற்றையாண்டைக் குறிக்கிறது. ஆப்ரருக்கென்று தொடங்கி, படித்தானத்திற்கு அருகில் வழக்கத்தில் இருந்த முற்றையாண்டான கி.பி.248 யை களப்ரருக்கும் பொருத்தமே என்று கருதி, மேலே சொன்ன 192 -ஓடு கூட்டினால், பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் காலம் கி.பி.440 என்றாகும். இதற்கு 100, 150 ஆண்டுகள் முன்னேயே வட்டெழுத்து தோன்றிவிட்டதற்கான சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடைத்திருக்கின்றன. உண்மையிற் பார்த்தால் அரச்சலூரைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டிலேயே வட்டெழுத்துக் கூறுகள் தொடங்கி விட்டன.

கி.பி. 270-290 களில் தமிழகத்தை ஆட்கொண்ட கள ஆப்ரர் அரசு வழியாக கல்வெட்டுக்கள் மிக அரிதே தான் கிடைத்துள்ளன. கிடைத்திருக்கும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டும் வட்டெழுத்தில் உள்ளது. இந்தக் காலத்துப் பொதுமக்கள், குறுநிலத் தலைவர் ஆகியோரின் நடுகற்களும் வட்டெழுத்துக் கொண்டே எழுதப் பட்டிருக்கின்றன. அதே பொழுது படித்தானத்தில் இருந்த ஆப்ர அரசு வடவெழுத்து முறையே பின்பற்றியிருக்கிறது. பின்னால் தெற்கே கள ஆப்ரர் அரசை முடிவுக்குக் கொண்டுவந்த பல்லவர் வட தமிழகத்தில் கிரந்த எழுத்தையும், இற்றைத் தமிழெழுத்தையும் விழைந்து பயன்படுத்தினார்கள்.

கள ஆப்ரரின் தென்பாற் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்ட இடைக்காலப் பாண்டியர் (கி.பி.550-910) வட்டெழுத்தையே விரும்பிப் பயன்படுத்தினர். (கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் தமிழகமெங்கும் ஒரு மொழி, ஈரெழுத்து (இற்றைத் தமிழெழுத்து, வட்டெழுத்து) என்ற நிலை தொடர்ந்தது. இராசராசச் சோழன், பாண்டியர் அரசைத் தொலைத்து, அதைத் தான் ஆளும் மண்டலமாக ஆக்கிய பின்பே வட்டெழுத்துப் புழக்கம் வலிந்து குறைக்கப்பட்டது. ஒரு மொழி, ஓரெழுத்து என்ற நிலை அதற்கு அப்புறம் தான் வந்து சேர்ந்தது. ஆக, ஆழ்ந்து பார்த்தால், இற்றைத் தமிழெழுத்து தமிழ்நாடெங்கும் பரவியது சோழ அரசாணை கொண்டுவந்த அடிதடி மாற்றமாகும். [அரசாணைகளுக்கு அவ்வளவு வலிமையுண்டு.]

ஆனாலும் வட்டெழுத்தின் மிச்ச சொச்சம் கேரளத்தில் நெடுநாள் இருந்தது. வட்டெழுத்தை தென் கேரளத்தில் ‘மலையாண்ம’ என்றும், ’தெக்கன் மலையாளம்’ என்றும், வட கேரளத்தில் ‘கோலெழுத்து’ என்றும் அழைத்தனர். வட்டெழுத்து 18 ஆம் நூற்றாண்டு வரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேரளத்தில் நிலைத்தது. பெரும் அளவு சங்கதம் புழங்காத நம்பூதியல்லாதோரிடம் வட்டெழுத்து தொடர்ந்து இருந்தது. கேரளத் தொல்லியற் துறையினரிடம் சில ஆயிரம் வட்டெழுத்து ஓலைச்சுவடிகள் இன்னும் படிக்கப் படாமல் இருப்பதாக “சேரநாட்டில் வட்டெழுத்து” என்ற நூலெழுதிய இரா. கிருஷ்ணமூர்த்தி சொல்லுவார். 18 ஆம் நூற்றாண்டு முடிவில் கேரளத்தில், வட்டெழுத்து முற்றிலும் அழிந்தது. அதே பொழுது, திருவாங்கூர் அரசில் 19 ஆம் நூற்றாண்டு சுவாதித் திருநாள் காலம் வரையிலும் அரண்மனைக் கணக்கு (பண்டாரக் களஞ்சியம் - நிதித்துறை) வட்டெழுத்தில் எழுதப்பட்டதாய் ஒரு செய்தியுண்டு.

வட்டெழுத்து மாறிக் கிரந்தவெழுத்தின் அடிப்படையில் மலையாள எழுத்து உருவாகிய செய்தி தமிழராகிய நமக்கு ஒரு முகன்மையான எழுதருகையைத் (எச்சரிக்கையைத்) தரவேண்டும். 14 ஆம் நூற்றாண்டில் தான் கேரளத்தின் பொதுவழக்கில் வட்டெழுத்து மாறி ஆர்ய எழுத்தைப் புழங்கத் தொடங்கினர். [அதற்கு முன் வட்டெழுத்தே புழங்கியது.] தொடக்கத்தில் மலையாள மொழியில் கிரந்த எழுத்துக்கள் வட்டெழுத்துள் வெறுமே கடன் வாங்கப் பட்டன. பின்னால் பேச்சுவழக்கில் பிறமொழி ஒலிகள் கூடிப்போய் கிரந்தத்தில் இருந்து புது எழுத்தே உருவாக்கும் நிலை ஏற்பட்டது. பண்பாட்டுத் தளத்துச் சிக்கல் எழுத்துத் தளத்துள் புகுந்து அடிப்படைக்கே குந்தம் விளைவித்துப் பெருத்த ஊறு விளைவித்தது. தமிழக ஒற்றுமையில் இருந்து கேரளம் முற்றிலும் விலகியது. எழுத்துப் பிறந்தது தனித் தேசிய இனம் பிறக்க வழி செய்தது. தனியெழுத்துப் பிறக்காது இருந்தால் அதுவும் இன்று தமிழ்நாட்டின் ஒருவட்டாரமாய்த் தான் அறியப் பட்டிருக்கும்.

மலையாளத்தில் நடந்தது 21 ஆம் நூற்றாண்டுத் தமிழெழுத்திற்கும் நடக்கலாம். கிரந்த எழுத்துக்களைத் தமிழெழுத்துள் கொண்டு வந்து கேடு செய்வதற்குத் தமிழரில் ஒரு சிலரே முனைப்புடன் வேலைசெய்கிறார்கள். இதை அறியாது, குழம்பி, பொதுக்கை வாதம் பேசிக் கொண்டு நாம் தடுமாறிக் கிடக்கிறோம். தமிழ் ஒருங்குறியில் வரமுறையின்றி கிரந்த எழுத்துக்களை நாம் கடன் வாங்கத் தொடங்கினால் மலையாளம் விருத்து 2.0 (version 2.0) என்ற நிலை உறுதியாக நமக்கு ஏற்படும் என்றே தமிழுணர்வுள்ள பலரும் இன்று எண்ணுகின்றனர். வரலாறு மீண்டும் திரும்பக் கூடாது, தமிழர் பிளவு படக் கூடாது, புதுத் தேசிய இனம் எழக் கூடாது, என்ற அச்சவுணர்வு நமக்குள் இன்றும் எழுகிறது.

நம்முடைய கவனமும், முனைப்புமே நம்மைக் காப்பாற்றும். உணர்வு பூர்வமான, பொதுக்கை வாதஞ் சார்ந்த, வெற்று அரசியற் முழக்கங்கள் எந்தப் பயனுந் தராது. ஒருங்குறி பற்றிய நுட்பியற் புலங்களை நாம் ஆழ்ந்து பயிலவேண்டும். அறிவியல் சார்ந்த, நுட்பியல் சார்ந்த முறைப்பாடுகளை அரசினர், ஒருங்குறி நுட்பியற்குழு போன்றவர்களிடம் முன்வைக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

தமிழ் said...

நன்றி அய்யா

கண்ணெழுத்து,கந்தெழுத்து பற்றிய செய்திகள் விரிவாக,விளக்கமாக இருந்தது

Unknown said...

அன்புள்ள இராமகி,
அருமையான கட்டுரை. முயற்சிக்கும் உழைப்புக்கும் தெளிவான உறுதியான சிந்தனைக்கும் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி
அன்புடன்
இராதாகிருஷ்ணன்
ஜனவரி 4, 2011.

அருண்மொழிவர்மன் said...

அன்பின் இராம கி,
முதலில் இங்கே வந்து பின்னூட்டத்தில் கேட்பதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். நான் அருண்மொழிவர்மன் என்ற பெயரில் வலைப்பதிவுகள் எழுதுபவன். எனக்கு உங்களின் உதவி தேவைப்படுகின்றது. சில நாட்களின் முன்னர் எனக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. பிள்ளைக்குத் தமிழில் பெயர் வைக்க ஆசைப்படுகின்றேன். சில நண்பர்களிடம் கேட்டபோது நீங்கள் தமிழில் பெயர் வைக்க சரியான பெயர்களை அடையாளம் காட்டுவதாய் சொன்னார்கள்.

அதீதன் என்ற பெயரை நான் யோசிக்கின்றேன். இது தமிழ்ப் பெயரா?, இல்லாவிட்டால் வேறேதாவது இணையத்தளங்கள் நல்ல தமிழ்ப் பெயர்களை தருமா?

உங்களால் இயன்றவரை உடனடியாக உதவுங்கள்.

நன்றி.

என் மின்னஞ்சல் முகவரி,
sutharshan@hotmail.com

nayanan said...

அன்பின் ஐயா,

மிக அருமையானதொரு கட்டுரை. ஐந்தாறு நூல்களைப் படித்த நிறைவு.
பாண்டியர் பகுதிகளில் வட்டெழுத்தை வலிந்து தடுத்த சோழன் அதே அளவில் சேரத்தில் தடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

நாகரி, கந்தம், குணக்கு சொற்களும், களப்பிரர் விளக்கங்களும் அவற்றின்பாலான தங்களின் பார்வையும் விரிந்த பார்வையைக் கொண்டுள்ளன.

வரலாற்றில் தமிழரசில் பேரரசு இல்லாத காலங்களில் பிறரின் ஊடுறுவல் வலுவாக இருந்துள்ளது போலும். சேரன் செங்குட்டுவனின் பேரரசிற்குப் பின்னர் சாதவா கன்னரின் களப்பிர பிரிவின் ஊடுறுவல், பின்னர் சோழப்பேரரசின் வலி குன்றியதும் பல்வேறு ஊடுறுவல்களும் நடந்திருக்கின்றன.

சேரத்தின் நம்பிக்கைகள் வடக்கு பட்டுப் போனதால் எண்ணற்ற வட்டெழுத்துச் சுவடிகள் கண்டு கொள்ளப்படாமற்
கிடப்பது போல தமிழ்நாட்டின்
திராவிடப்பாடும் பல ஓலைச்சுவடிகள்
கல்வெட்டுக்கற்பால் கவலற்று இருக்கிறது போலும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

R.DEVARAJAN said...

தஞ்சை மராட்டியர் பயன்படுத்தியது ‘மோடி’ வரிவடிவம்; மராட்டியர் நாகரிக்கு மாறியது 19ம் நூற்றாண்டில்


தேவ்

R.DEVARAJAN said...

தஞ்சை மராட்டியர் பயன்படுத்தியது ‘மோடி’ வரிவடிவம்; மராட்டியர் நாகரிக்கு மாறியது 19ம் நூற்றாண்டில்


தேவ்